மாறாத சொந்தம்!

சிந்தனையில் தேன்சுரக்க

செந்தமிழின் மேலினிக்க

வந்தருளும் நாயகமே,

வழிபார்க்கும் வையகமே!

 

முன்யாரும் கண்டதுண்டா

முஹம்மதரைப் போன்றவரை?

பின்னேனும் அவர்போலாம்

பேறுடையார் எவருமுண்டோ?

 

ஓரழகு! சீரழகு!

ஒப்பில்லாப் பேரழகு!

யாரழகு, முஹம்மதினும்-

யாதான போதிலுமே?

 

சொல்லழகு! செயலழகு!

சோர்வறியாத் திறமழகு!

நல்லழகு மாதிரிபோல்

நானிலத்தில் ஏதழகு?

 

பொறுமைக்கோர் இலக்கணமாய்,

புகழுக்கும் இலக்கியமாய்

வறுமையிலும் செம்மையுடன்

வழிகாட்டும் வாழ்வழகு!

 

புன்சிரிப்போ முழுநிலவு!

பூப்போன்ற மென்மைமுகம்!

கண்பார்வை அருள்வெள்ளம்

காண்பவர்கள் தமைவெல்லும்!

முத்தொளிரும் பல்தெரிய

முறுவலுடன் அவர்திருவாய்

சத்தியத்தைப் பேசிடுமே!

சாந்தஒளி வீசிடுமே!

 

அடியெடுக்கும் நடைநேர்த்தி!

அணிந்திருக்கும் உடைநேர்த்தி!

வடிதேனாம் அவர்மொழிகள்,

வையகத்தில் தனிநேர்த்தி!

 

கண்ணியத்தின் சின்னமவர்!

கஸ்தூரி வாசமவர்!

பொன்பொதிந்த வெள்ளியெனப்

பொலியும் அவர்திருமேனி!

 

குற்றங்கள் கூறாதார்!

குறைகூறிப் பேசாதார்!

மற்றெவரே ஆனாலும்

மதிக்கின்ற மாண்பாளர்!

 

சொர்க்கத்தின் மாமன்னர்!

சோபனங்கள் கூறுபவர்!

வர்க்கமெனும் மானுடம்நாம்

வைத்திருக்கும் மணிமகுடம்!

 

மாறாத சொந்தமிவர்,

மறவாத பந்தமிவர்

ஆறாத துயரினிலும்

ஆறுதலாம் அண்ணலிவர்….

-ஏம்பல் தஜம்முல் முகம்மது