மாயவலையை அறுப்பது குறித்து: (ஜூன் 2015)

 

மிழகத்தின் கல்விக்கூடங்களின் நிலை குறித்துப் பொதுமக்களின் கோபங்கள் வெடித்துவருகின்றன.  கல்வி கற்கவும் வேலை பெறவும் முழுக்கவும் சில தனியார் நிறுவனங்களை நாடி நிற்கும் நிலையை அரசு உருவாக்கி வருகிறது.  எப்போது ஒரு தீமை தென்படுகிறதோ அப்போது அதை நீக்கும் வழி குறித்துச் சிந்திக்காமல், தீமையைத் தானும் பின்பற்றுவதே அரசின் பொதுநிலையாக இருந்துவருகிறது.

இன்று கல்விக்கட்டணங்கள் பல மடங்கு ஏறிவிட்டன.  ஒரு சாதாரண மனிதனின் வாழ்நாள் வருமானம் முழுக்கவும் குழந்தைகளின் கல்விக்கோ மருத்துவச் செலவுகளுக்கோ செல்லுமாயின் அவனது வீட்டில் நிரந்தரப் பசியும் தரித்திரமும்தான் குடிகொள்ளும்.  இதைமீறி அரசு என்னதான் நல்வாழ்வுத் திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தாலும் அது பயனில்லாமல் போய்விடும்.  இந்த நிலையில்தான் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வியியலாளர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

 

  • இன்று அரசுப் பள்ளிக்கூடங்களின் நிலை என்ன?  அவை மெல்ல மெல்ல ஒழிக்கப்படுகின்றன;  அல்லது அதன் ஆதார சக்திகள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன.  பல ஊர்களின் அரசுப் பள்ளிக்கூடங்கள் பாழடைந்துபோய்க் கிடக்கின்றன. சில எந்நேரமும் இடிந்துவிழுந்து விடலாம் என்ற நிலையில் இருக்கின்றன.  வேறுசில ஊர்களில் கற்காலத்தில் நடந்ததுபோலவே மரத்தடிகளில் பாடங்கள் நட்த்தப்பட்டு வருகின்றன. கரும்பலகைகள் இல்லாத பள்ளிகள் பெரும் அதிசயமாகும். இவை கற்பனைக் கதைகள் அல்ல; நம் ஒவ்வொருவருக்கும் இதெல்லாம் தெரியும்.  முதலமைச்சர் வரும்போது அரசு நிர்வாகம் செய்கிற பொதுப்பணி வேலை போன்றவைகளைப் பார்த்தால், அவற்றின் ஒரு சிறுபகுதியை அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு ஒதுக்கினாலும் போதும்; அரசுப் பள்ளிகள் செழித்து வளரும்.  அதன்மூலம் கிராமப்புற மக்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் கல்வி கிடைக்கும்.  வாழ்வு மலரும்.

 

  • ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே அரசும் அதன் தலைவர்களும் ஆடம்பரச் செலவினங்களுக்குக் காட்டும் அக்கறையை அடித்தளக் கட்டமைப்புகளுக்குக் காட்டுவதில்லை.  தி.மு.க. அரசு ஒரு ஆடம்பரத்தைச் செய்துவிட்டுப் போனால் அதன்பின்னே வருகின்ற அ.தி.மு.க அரசு அதை இன்னும் பத்துமடங்காகச் செய்துகாட்டுகிறது. இதைத் தவிர கல்வி, மருத்துவம்,. சாலைப்போக்குவரத்து போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவைகள் கண்டுகொள்ளப் படுவதில்லை.

 

மக்களின் பொதுப்புத்தியில் இன்று தனியார் கல்விநிறுவனங்கள்தான் சரியான கல்வியை வழங்கிவருவதான கருத்து பரவிக் கிடக்கிறது. ஆனால் அதன் போக்குகளை ஆழமாக ஊடுருவிப் பார்த்தோமானால் அது பெற்றோரின் கல்வியையும் அவர்களின் அறிவுத் திறனையும் வேலைவாய்ப்பின் கௌரவத்தையும் நம்பித்தான் சால் ஓட்டுகின்றன என்று தெரியவரும். குழந்தைகளுக்கு நேர்காணல் நட்த்தும் தந்திரமே அதற்குத்தான்.  பெற்றோர்கள் என்ன படித்திருக்கிறார்கள், அவர்களின் சமூக அந்தஸ்து என்ன, குழந்தைகள் படித்து வெளிவர அவர்களின் மனம் எந்த அளவுக்குப் பணத்தை வாரியிறைக்கத் தயாராக இருக்கின்றன என்பதை உளவறியும் நோக்கில்தான் அவை குழந்தைகளுக்கான நேர்காணலை நட்த்துகின்றன.  இது உண்மையில் பெற்றோர்களுக்கான நேர்காணல்தான். ஆனாலும் கல்வி வியாபாரிகள் தங்களின் கொள்ளையடிக்கும் தந்திரத்துக்குக் கண்டுபிடித்த மாற்று வழி இது.  பள்ளிக்கு முதன்முதலாகச் செல்லக் கூடிய குழந்தைக்கு என்ன அறிவு இருக்கும்?  வேலை தேடும் ஒரு இளைஞனின் மனம் எந்த அளவுக்குத் துயரத்தில் ஆழ்ந்துகிடக்கும் என நாம் அறிந்தவர்கள்;  அல்லது ஒரு கட்ட்த்தில் நாமே அதை அனுபவித்தவர்கள். கற்ற ஒரு மாணவனுக்கும் கல்வி வாசனையே இல்லாத ஒரு குழந்தைக்குமான மன நிலைகளைத் தெரிந்துகொள்ள இயலாத குருட்டுமனிதர்களா இந்த நேர்காணலை நடத்துகிறார்கள்?  ஆனால் இந்தக் கல்வி வியாபாரிகளின் கொள்ளையடிப்புத் தந்திரத்துக்காக அவர்களே முன்னின்று புனைந்து உருவாக்கிய எல்லாப் பொய்களையும் பொதுமக்களும் பெற்றோர்களும் உள்வாங்கி விட்ட்துதான் கல்வி வியாபாரிகள் செய்த தந்திரமாகும்.  அந்த மாயவலையை அறுக்க முடியாமல் நாமே கல்விக் கொள்ளைக் கூடங்களின் முன்னே இராப் பகல்களாகக் கால்கடுக்கத் தவம் கிடக்கிறோம்.

இதுபோன்ற பயபீதிகளை ஊட்டும் வழிமுறைகள் அரசுப் பள்ளிகளில் இருப்பதில்லை.  கல்வி வியாபாரிகளின் தந்திரங்களுக்கு ஆட்பட்டு விழுந்த பெற்றோர்கள், தங்களை உரசிப்பார்த்துக் கொள்ளையடிக்காத அரசுப் பள்ளிகள் அக்கறையற்ற அமைப்பு எனக் கருதுகிறார்கள்; அந்தப் பேதைமையில் உழன்று தனியார் பள்ளிகளை நோக்கி நடையைக் கட்டுகிறார்கள்.  தனியார் பள்ளிகள் குழந்தைகளின் வெளித் தோற்றத்துக்கும், ஆடை அணிகலன்களுக்கும் தனி அக்கறை எடுத்து அதிலும் பல கோடிகள் சம்பாதித்துவிடுகின்றன.  அது ஒரு விளம்பர யுக்தியுமாகும்.  இந்த உண்மையை அறிந்துகொள்ள வழியில்லாத பெற்றோர்கள் தம் குழந்தைகளையும் படோடாபமான தோற்றத்தில் காண விரும்புகின்றனர். அதன் பொருட்டாகவும் குழந்தைகளின் கல்வியை நோக்கிய ஆர்வத்தில் மேலும்மேலும் கடன்காரர்களாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

அரசு இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.  அது கல்வி வியாபாரிகள் உருவாக்கிய ஆங்கில மோகத்தில் தானும் சிக்கி ஏதோ அரசுப் பள்ளிகளை அக்கறையாக நடத்த முனைவதுபோன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தைகள் இனி ஆங்கிலத்தில்தான் கல்வியை உள்வாங்குவார்கள்.  இதுபோன்ற அவலமும் பைத்தியக்காரத் தனமும் உலகில் எந்தவொரு நாட்டிலும் கிடையாது. ஆனால்  இங்குதான் இவையெல்லாம் சாத்தியமாகின்றன. உண்மையைப் பார்க்கப்போனால் பாழடைந்த கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன.  குழந்தைகளின் விகிதாச்சாரத்துக்குப் போதுமான ஆசிரியர்கள் இன்னமும் பணியமர்த்தப் படுவதில்லை.  தொலைதூரக் கிராமங்களுக்குச் சென்று ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுகொடுக்க இளம் ஆசிரியர்களும் முன்வருவதில்லை.  ( அந்த ஆசிரியர்கள் தலித்துகளாகவோ முஸ்லிம்களாகவோ இருப்பினும்கூட அவர்களும் தங்களின் சமூகத்துக்கு உழைப்பைக் கொடுக்க முன்வருவதில்லை என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம். )

இந்த நிலையில் சமூகத்தின் கல்விநிலை ஒரு சாரார்க்கு அதிக வீச்சுடன் அளவுக்கும் மீறிய நிலையில் கிடைத்துக்கொண்டிருக்கப் பிறிதொரு பகுதியினருக்கு அது பலவீனமான நிலையில் கிடைக்கிறது;  அல்லது கிடைப்பதில்லை.  சமூகத்தின் பொருளாதார வள்ர்ச்சியை விரும்பும் ஒவ்வொருவரும் தங்குதடையற்ற கல்வி ஒவ்வொரு குடிமகனுக்கும் சரிக்குச் சரியாகக்  கிடைக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.  ஆனால் அரசு இதை உணர்வுபூர்வமாக அறிந்தாலொழிய சமூகச் செயல்பாட்டுக்கு வந்துசேராது.  அரசோ கல்வி வியாபாரிகளின் கையில் இருக்கிறது; அரசில் பொறுப்பு வகிப்பவர்கள் கல்வி வியாபாரிகளாக இருக்கிறார்கள்.  ஆகவே அரசு தன் பொறுப்பில் கல்வியைத் தனியாரின் கைகளிலிருந்து பறிப்பது நடக்கக் கூடிய மார்க்கமாகத் தெரியவில்லை.  இந்த நிலை மாறப் பொதுமக்களே அரசுக்கு நிர்ப்பந்தத்தை அளிக்க வேண்டும். இதைச் செயல்படுத்த விரும்பும் பல சமூக அமைப்புகள் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்று தற்போது குரல் கொடுத்து வருகின்றன. நம் கையில் உள்ள செல்வ வளங்களைப் பறித்துக் கொள்ளும் கல்விக் கொள்ளையர்கள் பின்னர் அதே பள்ளிக்கூடங்களில், “அறம் செய்ய விரும்பு “ பாடம் கற்றுக்கொடுப்பது குரூரமான கொடுமையில்லையா?

ஆகவே இதில் பொதுசமூகத்துக்கும் கடமையுணர்வு இருக்கிறது.  அரசுக்குக் கடும் நிர்ப்பந்தங்களைக் கொடுக்க வேண்டும்.  அதே சமயம் அரசுப் பள்ளிகளுக்குத் தங்களின் ஆதரவை வழங்க வேண்டியதும் அவசியமாகும். ஒரு பெரும் முன்னெழுச்சியை அரசு உருவாக்கித் தராது. வரலாறு அதைச் சொல்கிறது.  ஆகையால் இதில் நம் கையில்தான் சூத்திரக் கயிறு இருக்கிறது.  அதைப் பயன்படுத்த பொதுச்சமூகம் முன்வர வேண்டும்.