மௌலவி அல் ஹாஃபிழ் A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil
பொதுவாகவே இந்திய சட்டங்களில் பெரும்பாலானவை விசித்திரமானவை, வினோதமானவை. சில நேரங்களில், ஏன் பல தருணங்களில் அவை பொதுவான நீரோட்டத்தையும், பொது மக்களின் கண்ணோட்டத்தையும் விட்டு விலகியிருப்பதையும் நாம் காண்கிறோம். நூறு குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை, எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற முதுமொழியைப் பின்பற்றுகிறோம் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் வெளிpயே டாட்;டா காட்டி சென்றுக் கொண்டிருக்க, உண்மையில் எக்குற்றமும் இழைக்காத அப்பாவிகள் ஆண்டுக்கணக்கில் சிறைகளில் வாடுகின்ற சோகமான நிகழ்வுகளை பத்திரிகைகளில் படிக்கின்றோம். நமது நாட்டில்; நீதி, நியாயம், மனோதர்மம், மனிதநேயம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில்தான் சட்ட பரிபாலனம் நடைபெறுகிறது என்ற நம்பிக்கை சாதாரண இந்திய குடிமகன்களுக்கு குறைந்து போய் பல நாட்களாகி விட்டன. எனவே சட்டங்களை குறை கூறுவது நமது நோக்கமல்ல.
மாறாக இக்கட்டுரையின் நோக்கமே, சமீபத்தில் கொண்டு வரப்பட்டு பின்பு கடும் எதிர்ப்பு காரணமாக வாபஸ் வாங்கப்பட்ட ஒரு சட்ட மசோதா குறித்த நடுநிலைப் பார்வை மட்டுமே.
மண உறவுக்கு அப்பால், கணவன் மனைவி எனும் சட்டப்பூர்வ உரிமை இன்றி ஆண் பெண் இருபாலரும் பரஸ்பர சம்மதத்துடன் (ஊழளெநளெரயட ளுநஒ) உடலுறவு கொள்ளுவது இந்தியாவில் சட்டப்படி குற்றமில்லை. இப்படி உடலுறவு கொள்வதற்கு தற்போது நடைமுறையிலுள்ள வயது வரம்பை பதினெட்டு வயதிலிருந்து பதினாறு ஆகக் குறைக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பின்பு முஸ்லிம் இயக்கங்கள், கம்யூனிஸ்டு, பா.ஜ.க உட்பட்ட பல அமைப்புகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக இம்மசோதா கருவிலேயே நல்லவேளை இறந்து போனது. மரித்துப்போன ஒரு மசோதாவை குறித்து தற்போது பேசுவதற்கு என்ன அவசியம் உள்ளது என சிலர் வினவலாம். ஆனால் தவறாக உருவான ஒரு கரு, மீண்டும் வேறு ரூபத்தில் வந்துவிடக் கூடாது என்பதற்கும், அந்த தவறான மசோதாவில் உள்ள தப்புக்களை தெளிவுப்படுத்துவதற்குமே இவ்வாக்கம்.
இந்த மசோதாவுக்கு அமைச்சர் குழு அனுமதி அளித்ததற்கு, பொய்யான பாலியல் புகார்கள் குறையும் என்ற ஒரு நொண்டிச்சாக்கு முன்வைக்கப்பட்டது. ஆனால் இச்சட்டத்தின் காரணமாக பொய்யான பாலியல் புகார்கள் குறையுமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. உண்மையில் இந்த மசோதாவால் பல்வேறு சமுதாயச் சீர்கேடுகள் ஏற்படுவதோடு இந்தச்சட்ட மசோதா பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலையும் செய்யும்.
இந்த மசோதாவால் ஏற்படும் முதல் சமூகச் சீர்கேடு விபச்சாரம் பெருகும் என்பதேயாகும். இந்திய திருமணச் சட்டப்படி ஆண்கள் குறைந்த பட்சம் 21 வயதும், பெண்கள் குறைந்த பட்சம் 18 வயதும் பூர்த்தி அடைந்திருந்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் உடலுறவில் மட்டும் ஈடுபடலாமாம். ஒரு அரசாங்கத்தின் எதிர்காலத் தலைமுறைக்கான திட்டமிடலின் நிலை எந்த நிலைமையில் உள்ளது பார்த்தீர்களா?
அரசாங்கமே நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் உடலுறவு கொள்வதில் தவறில்லை என்று கூறி அங்கீகாரமும் வழங்குகிறது என்றால் இதை விடக் கொடுமை என்னவாக இருக்க முடியும்?
‘மைனர் விபச்சாரத்துக்கான(?) இந்த புதிய மேஜர் சட்ட திருத்தம்(!) ஏன் வந்தது’ என்பதற்கும் ஒரு பின்னணி உள்ளது.
சமீபத்தில், டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்டு, பின்னர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி, அப்பெண் உயிர் துறந்ததைத் தொடர்ந்து, அதில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் 17 வயது ஆன ‘மைனர்’ என்பதால் அவனை தண்டிக்க முடியாமல் இருந்தது.
குற்றவாளிக்கு 17வயதுதான் ஆகியுள்ளது என்பதால் அவன் சிறுவன் என்ற அந்தஸ்தில் இருப்பதாகவும், சிறுவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும், அவனை சிறைக்கு அனுப்புவதற்கும் சட்டத்தில் இடமில்லை என்றும், வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாத அந்த பச்சிளம் குழந்தையை(?) சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு படிக்க அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் இருப்பதால், அவனை பாலர் பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் பேசினர். அந்த பச்சிளம் குழந்தைக்கு(?) தண்டனை வழங்கலாமா? கூடாதா? என்ற கேள்விதான் அதிகம் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. உண்மையில், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் 17வயது நிரம்பிய சிறுவன்(?) என்று சொல்லப்படக்கூடியவன்தான் மாணவியை மிகவும் மோசமாக தாக்கியவன் மற்றும் இரண்டு முறை பலாத்காரம் செய்தவன் என்றும் போலீஸார் கூறுகிறார்கள். இவனால்தான் அப்பெண் படுகாயமடைந்தார், பின்னர் உயிரிழந்தார்.
ஆனால் இவனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால் இவனை மற்ற கோர்ட்டுகளில் விசாரிப்பது போல விசாரிக்க முடியாது. மாறாக, சிறார் நீதிமன்றத்தில்தான் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த முடியும். மேலும் இவனை சிறையிலும் அடைக்க முடியாது. சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்க்க முடியும். மேலும், இந்த சிறுவன் பெரும் தண்டனையிலிருந்து எளிதாக தப்பி விடும் அளவுக்கு சட்டம் இவனுக்குச் சாதகமாக உள்ளது.
பாலியல் பலாத்காரத்திலும், கடும் தாக்குதலிலும் ஈடுபட்டு மாணவியின் உயிர் போகக் காரணமான இந்த சிறுவன்(?) தற்போது பெரிய அளவிலான தண்டனை எதிலும் சிக்காமல் தப்பி விடும் வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறினர். பாலியல் வன்கொடுமை புரிந்ததில் முதல் ஆளாக தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடூரனுக்கு 5 மாதங்களில் விடுதலையளிக்கக்கூடிய அளவிற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதை நினைத்து அனைத்து தரப்பு மக்களும், அதிகாரிகளும் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றனர்.
இதையடுத்து பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். கற்பழிப்புகளுக்குக் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. எனவே, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கும் அவசர சட்டமொன்றை மத்திய அரசு கொண்டு வர நாடியது. பல தரப்பில் இந்த சட்டம் குறித்து ஆராயப்பட்டு, இறுதியாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதாவின் முக்கிய அம்சமான, பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் பாலியல் உடலுறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் அம்சத்தில்தான், பல சிக்கல்கள் உள்ளன! 16 வயது மைனர்கள் செய்யும் பாலியல் வல்லுறவு அட்டூழியத்துக்கு கடும் தண்டனை தேவைதான். சந்தேகமே இல்லை!
ஆனால், அதோடு நிற்காமல், ‘பெண் விரும்பாவிட்டால்தான், அது பாலியல் வல்லுறவு! விரும்பிவிட்டால், அது பரஸ்பர சம்மத உடலுறவு!’ என்ற அறிவுப்பூர்வமான (?) வாதத்தைத்தான் தாங்க முடியவில்லை.
‘இதனால், இவ்வயதுடைய பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு மென்மேலும் அதிகரிக்கும்’ என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், இதற்கு எதிர் வாதமாக, இதன்மூலம் ‘பொய்யான கற்பழிப்பு புகார்களை தடுக்க முடியும்’ (?) என்பது, வயது வரம்பை குறைக்க வேண்டும் என்பவர்களின் வாதமாக இருந்தது மிகப்பெரிய கொடுமை.
அதேபோல், மற்றொரு சர்ச்சைக்குரிய அம்சமான ‘பாலியல் பலாத்காரம்’ என்ற பொதுவான வார்த்தைக்கு பதிலாக, ‘கற்பழிப்பு’ என்ற வார்த்தையை மசோதாவில் சேர்ப்பது குறித்தும் உடன்பாடு ஏற்பட்டது!
‘கற்பழிப்பு’ என்ற வார்த்தை பெண்களுக்கென்றே சொந்தமான ஒரு வார்த்தையாக கருதப்படுகிறது. பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு உள்ளதா? ஆண்களுக்கு இல்லையா? ஒரு ஆண் பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்டால், அங்கே ஆண் தான் கற்பிழக்கிறான்! திருமண உறவு இன்றி பரஸ்பர சம்மதத்தின் பேரில் இருவரும் கள்ள உடலுறவு கொண்டால், இருவருமே ஒரு சேர கற்பிழக்கின்றனர்! ‘கற்பழிப்பாம்’? என்ன புரிதலோ?
அடுத்த பெரிய ஓட்டை என்னவெனில்;, குழந்தை தொழிலாளர், பால்ய விவாகம், சிறுவர் சீர்த்திருத்த பள்ளி என்று பலவற்றுக்கு மேஜர் வயது 18 என்று ஐநாவில் ஒப்பந்தம் போட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதெல்லாம் என்னாகுமோ தெரியவில்லை!
அப்புறம் இதை விட இன்னொரு மிகப்பெரிய ஓட்டை ஒன்று இச்சட்டத்தில் உள்ளது. அதாவது ஆணுக்கு 21 ம் பெண்ணுக்கு 18 ம் பூர்த்தி ஆனால்தான் ‘சட்டப்படி’ அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியும். 16 வயது இருந்தாலே போதுமாம். பரஸ்பர சம்மதத்தின் பேரில் சட்டப்படி உடலுறவு கொள்ளலாமாம்! விபச்சாரம் பண்ணலாமாம்! ஆனால், அதே சட்டப்படி திருமணம் மட்டும் இவர்கள் பண்ண முடியாதாம்! விபச்சாரம் செய்யும் போது மேஜர்கள்! கல்யாணம் என்றால் மைனர்கள்! என்ன கொடுமையான சட்டம் இது?
’16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்றல்லவா முதலில் முன்பக்க முகப்புக்கதவு சட்ட திருத்தத்தை செய்ய வேண்டும்? அதற்கு பிறகு அல்லவா உங்கள் வசதிக்காக ‘கள்ள உறவுக்கும்’, ‘விபச்சாரத்துக்கும்’ கொள்ளை புற கதவு திறக்கும், இந்த அபச்சார சட்டத்தினை போட வேண்டும!
உடல் அளவில் திருமண வயதை எட்டி 16 வயதில் பெற்றோரால் திருமணம் செய்வித்தால், அதை ‘குழந்தை திருமணம்’ என்று கூறி எதிர்ப்போர்தான் இப்போது, ‘குழந்தை விபச்சார ஆதரவு சட்டம்’ கொண்டு வருகிறார்கள்! (இஸ்லாத்தில் பெண்களுக்கு 18 வயதிற்கு முன் திருமணம் செய்து வைத்தால், அதை தடுப்பதற்கு என்றே ஒரு கூட்டம் அலைகிறது. சில மாதங்களுக்கு முன், பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரே முன்னின்று திருமணத்தை நிறுத்த முயற்சி செய்தார் என்பதை பத்திரிக்கைகளிலே படித்தோம்).
அதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தச் சட்டத் திருத்த மசோதாவால் பள்ளிச் சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் ஆசிரியர்களும், திருமண ஆசை காட்டி உடலுறவு கொள்ளும் காதல்(?) மன்னர்களும், பேத்தி வயதில் உள்ள சிறுமிகளைக் கற்பழிக்கும் காமுகத் தாத்தாக்களும் இனி இருவர் சம்மதத்துடனேயே நடைபெற்றது எனக் கூசாமல் வழக்கு விசாரணையில் பொய் சொல்லுவர்.
ஏற்கனவே காவல்துறை அதிகாரிகளும், நீதிபதிகளும் கேட்கும் கேள்விகளால் துவண்டு போகும் பாதிக்கப் பட்டவர்கள் இது போன்ற கேவலங்களையும் சந்திக்க வேண்டுமா எனப் பயந்து புகார் கொடுக்க முன்வரவே தயங்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
மேலும் இதன் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகையும் கணிசமாக அதிகரிக்கும். தற்போதைய நிலைப்படி சுமார் 1.2 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
ஆக்கப் பூர்வமாகச் சிந்தித்தால் திருமண வயதைக் குறைப்பதே சரியான ஒன்றாக இருக்க முடியும். பாலியல் தேவை 16 வயதில் ஆரம்பிக்கிறது என்ற அரசின் வாதம் சரியெனில் திருமண வயதுக்கான குறைந்தபட்ச வயதாக 16 வயதை நிர்ணயிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆரம்ப காலக்கட்டத்தில் திருமணச் சட்டத்தில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், பெண்களுக்கான குறைந்தபட்ச வயது 15 ஆகவுமே இருந்தன.
அதில் தான் திருத்தம் செய்து ஆண்களுக்கான குறைந்த பட்ச வயது 21 ஆகவும் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் மாற்றப்பட்டது. அரசு நேர்மையைச் சொல்லி தர வேண்டுமே தவிர குறுக்கு வழியில் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக் கூடிய தம்பதியினரிடையே ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது.
பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்ளும் வயதை 16 ஆகக் குறைத்தால் 10 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவியர் கூட சட்டப்படி பாதுகாப்பு பெற்று விடுவர். எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு எங்காவது திருமணம் நடந்தால் ஓடிச் சென்று தடுக்கும் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இனி இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?
இந்தச் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்கும் முன் சமூகவியலாளர்கள் பெண்கள் அமைப்புகள் மற்றும் மனோதத்துவ நிபுணர்கள் மகப்பேறு மருத்துவர்கள் போன்றோரைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டதா எனத் தெரிய வில்லை.
மசோதா நிறைவேறா விட்டாலும், சட்டப்படி 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி தவறு. ஆனால் இருவர் மனமொத்து ஈடுபடும் உடலுறவு சட்டப் படி குற்றமில்லை. சொல்லப்போனால் 18 என்ற சட்டமும் கூட தவறுதான். ஒரு ஆண் 18 வயசில் திருமணம் செய்ய முடியாது! 21-ல்தான் சட்டப்படி திருமணம் செய்ய முடியும். ஆனால், 18 லேயே அவன் விபச்சாரம் செய்ய சட்டப்பூர்வ அங்கீகாரம் முன்பே உள்ளது. அதை 16 ஆக்கும் முடிவை மட்டுமே வாபஸ் பெற்றுள்ளது அரசு!
வேடிக்கையாகவும், வினோதமாகவும் சட்டம் இயற்றுவதில் நமக்கு நிகர் நாம்தான்! பல சட்டங்கள் அதன் அடிப்படை நோக்கத்தையே நிறைவேற்றுவதில்லை என்பதே வேதனைக்குரிய உண்மை. சில விஷயங்களில் அரசாங்கத்தின் தவறான அணுகுமுறை எதிர்மறை விளைவுகளைத்தான் தோற்றுவித்துள்ளன.
உதாரணமாக, எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கம் மக்களிடையே எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோய் பரவாமல் தடுக்கும் நல்ல நோக்கத்தில் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த இயக்கம் எயிட்ஸை ஒழிப்பதற்கு இறுதியாகச் சொல்லியத் தீர்வு, அது துவங்கப்பட்ட நோக்கத்தைப் பூர்த்தி செய்ய உதவியதோ இல்லையோ, மக்களிடையே விபச்சாரம் பல்கிப்பெருக இவ்விழிப்புணர்வு இயக்கம் நன்றாகத் துணை புரிந்தது.
ஒட்டுமொத்த எயிட்ஸ் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் பாலியல் எண்ணத்தைத் தூண்டும் காரணிகள் மற்றும் சூழல்களைத் தடுக்க வேண்டும் என்று எவரும் மறந்தும் சொல்லவில்லை. அவர்களின் பரிந்துரை எல்லாம், ‘பாதுகாப்பான உறவு தான் எயிட்ஸைத் தடுக்கும்’ என்பதாகவே இருக்கிறது. ஏனென்றால் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு வாரிவழங்கும் முதலாளிகள் தான் மேற்கண்டப் பாலியல் எண்ணங்களைத் தூண்டும் காரணிகளையும் பரப்புகின்றனர். அதாவது தொட்டிலையும் ஆட்டி விட்டு, குழந்தையையும் கிள்ளிவிடுதல் அரசாங்க அனுமதியுடன் நடைபெறுகிறது.
வாழ்க பாரதம்!