நிழற்படத்தின் சட்டம் என்ன?

நிழற்படம் கையால் வரையப்படுகின்ற ஓவியத்தின் (ஹராம் என்ற) சட்ட வரையறைக்குள் வராது.  கையால் வரையப்படுகின்ற ஓவியம் ஹராம் என்று நபிமொழிகளில் காணப்படுகிற நேரடியான மூல ஆதாரம் நிழற்படத்தைத் தடைசெய்வதைக் குறிக்காது.  ஏனென்றால் இதில் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக்குதல் என்ற நிலை இல்லை.  இதனுடைய சட்டம் ஆடையில் பதியவைத்து வரைகின்ற ஓவியத்தின் சட்டத்தைப் போன்றதாகும் என்று பிற்கால மார்க்க அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்.

அஷ்ஷைக் அஸ்ஸாயிஸ் (ரஹ்) கூறியுள்ளதாவது:  நிழற்படத்தின் சட்டமென்ன என்பதைத் தெரிந்துகொள்ள நீ விரும்பலாம்.  அதன் சட்டம் ஆடையில் பதித்து வரையப்படுகின்ற சட்டத்தைப் போன்றதாகும்.  அதற்கு விதிவிலக்கு உண்டு என்பதை நான் அறிவேன்.  அது ஓர் ஓவியம் இல்லை.  மாறாக, அது உருவத்தைப் பதியவைப்பதாகும்.  ஒரு கண்ணாடியில் தெரிகின்ற ஓர் உருவத்தைப் பார்த்து, யாரோ ஒருவன் வரைந்துள்ள ஓவியம்தான் அது என்று கூறமுடியாது.  ஆக, நிழற்படக் கருவிலுள்ள கண்ணாடியோ அதில் விழுகின்ற பிம்பத்தை (நிழலை)ப் பிடித்துத் தக்கவைத்துக் கொள்கிறது.  ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியோ அதன் பிம்பத்தை (நிழலை)த் தக்கவைத்துக்கொள்வதில்லை.  இதுதான் இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசமாகும்.  பின்னர் அந்தப் பிம்பம் குறிப்பிட்ட ஒரு வேதிப்பொருளில் கழுவப்பட்டு,  அதிலிருந்து பலப்பல உருவங்கள் உருவாக்கப்படுகின்றன.  உண்மையில் இது கையால் வரையப்படுகின்ற ஓவியத்திற்கு ஒப்பானதில்லை.  இருக்கின்ற உருவங்கள் ஒருமுகப்படுத்திக் காட்டுகின்ற ஒரு வடிவமாகும்.  அந்தப் பிம்பம் நீங்காமல் இருக்குமாறு தேக்கிவைத்துள்ளது.  அவ்வளவுதான்.

அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்:  எல்லாப் பொருள்களுக்கும் உருவங்கள் (பிம்பங்கள்) இருக்கவே செய்கின்றன.  எனினும் அவை சூரிய வெளிச்சத்தில் இடப்பெயர்ச்சி செய்யத்தக்கவையாக உள்ளன.  அந்த இடப்பெயர்ச்சியை தடுக்கக்கூடிய ஏதேனும் தடை இல்லாத வரை அவை தங்குதடையின்றி இடம்பெயர்கின்றன.  அந்தத் தடைதான் அந்த வேதிப்பொருள்.  ஆடையில் பதித்த வரையப்படுவதைப்போல் இதற்கு ஷரீஅத்தில் இடம் இருக்கும்வரை இது ஹராம் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.  குறிப்பாகத் தற்காலத்தில் மக்களுக்கு இதன் தேவை மிகுதியாக உள்ளது.

முஹம்மது அலீ அஸ்ஸாபூனீ (ரஹ்) கூறுகிறார்:  நிழற்படம் ஓவியத்தின் ஒரு வகை என்பதற்கு அப்பாற்பட்டதில்லை.  நிழற்படக் கருவியிலிருந்து எடுக்கப்படுகின்ற படத்துக்கு நிழற்படம் என்றும் இதைத் தொழிலாகச் செய்பவருக்கு வழக்கத்தில் நிழற்படம் எடுப்பவர் (முஸ்வ்விர்) என்றும் கூறப்படுகிறது.  இதைத் தெளிவான ஆதாரத்தின் மூலம் சொல்ல முடியாவிட்டாலும் அவர் முஸவ்விர்தான்.  எனினும், அவர் அதைக் கையால் வரையவில்லை.  அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக்குகின்ற எதுவும் அதில் இல்லை.  எனினும் அது ஓவியத்தின் ஒரு வகை என்பதற்கு அப்பாற்பட்டதில்லை.  ஆகவே அதைத் தேவைக்கேற்ப குறைத்துக் கொள்வது அவசியமாகும்.  அதில் ஒரு வகையில் நன்மை இருந்தாலும் மற்றொரு புறம் அதில் மிகப்பெரும் கேடும் உள்ளது என்பதை மறந்துவிடலாகாது.  இன்றைய பத்திரிகைகளே அதற்கான ஆதாரமாகும்.

மூல நூல்:  ரவாயிஉல் பயான்

தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி  M.A M.Phil