உலக முஸ்லிம்களின் நினைவுச் சின்னம் ‘தர்கா’
தர்காக்களை மிக எளிமையான சூத்திரமாக இறந்தவர்களின் புதைகுழிகள் மீது எழுப்பப்படும் கட்டடம் அல்லது இறந்த இடமாய் கற்பனை செய்து கட்டப்பட்ட கட்டடம் என்று வஹ்ஹாபிகள் கூறிவிடுகின்றனர். வெறும் கட்டடம் என்பதான இத்தகைய எளிமைப்படுத்துதலை எதிர் தர்க்கவாதம் செய்பவர்கள் பள்ளிவாசல்களுக்கும் கஃபாவிற்கும் கூட நீட்சி செய்து பார்த்தால் சிந்தனை ரீதியில் பேராபத்து ஏற்பட்டு விடும். எனவே இத்தகைய ஆழமற்ற சர்ச்சைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தை பொருத்தமட்டில் தர்காக்களுக்கென ஒரு வரலாற்று ரீதியான பாத்திரம் உள்ளது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பின் அரபு மண்ணிலிருந்து கடல் வழி வணிகக் குழுக்களாக இஸ்லாமிய மார்க்க பிரச்சார குழுக்களாக இஸ்லாமிய மார்க்க பிரச்சார குழுக்களாக தமிழகத்திற்கு அரேபியர்கள் வருகை தருகின்றனர். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் இக்குழு மக்களின் பெரும்பாலோர் பிறசமய மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்தும் திருமண உறவுகள் புரிந்தும், குழயிருப்புகளை ஏற்படுத்தி புதிய கலாச்சார உருவாக்கங்களை நிகழ்த்துகின்றனர்.
பாரம்பரிய அரபு வணிக மற்றும் பிரச்சாரர்கள் மட்டுமல்லாமல் சேர, சோழ, பாண்டிய மண்டலப் பகுதிகளில் வாழ்ந்திருந்த இந்து சமய சாதிகளிலிருந்தும், ஜாதிய ரீதியாக ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும், சைவர்கள் தொடுத்த தாக்குதலை தாங்காத சமணர்களும் சமத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இடம் பெயர்கிறார்கள். நாடுகளின் எல்லைக் கடந்து குடும்பம், சுற்றம், உறவுகள் துறந்து பல பகுதிகளிலும் இன்னல் பட்டு, இஸ்லாம் பற்றிய சிந்தனைகளை அடித்தட்டு மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்த விஞ்ஞானிகள், இறைநேச செல்வர்களாக, சூஃபி கவிஞர்களாக, வலியுல்லாஹ்களாக பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
இவர்களது நினைவிடங்கள் தான் பெரும்பாலும் தர்காக்களாக அமையப் பெற்றுள்ளன. தர்கா என்ற பாரசீக சொல்லுக்கு தமிழில் உறைவிடம் என்று அர்த்தம். இதுபோன்றே தர்காக்களில் மெஞ்ஞானிகள் தவிர இஸ்லாமியர்களுக்கான உரிமைப் போரில் ஷஹீதான உயிர் நீத்த மன்னர்களும், வீரர்களும், படைத்தலைவர்களும் அடங்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இவர்கள் குறித்த வாய்மொழி வரலாறுகளும் வட்டார அளவில் மக்களால் பேசப்பட்டு வருகின்றன.
இஸ்லாத்தை பரப்புதல் என்பதும் இஸ்லாத்திற்காக உயிரை அர்ப்பணித்தல் என்பதும் இறைவழிப்பாதையில் செல்லுதலே ஆகும். திருமறை இத்தகைய இறை நேசர்களைப் பற்றி பல இடங்களில் பேசுகிறது.
எவர்கள் தங்கள் இல்லங்களை விட்டு அல்லாஹ்வினுடைய வழியில் புறப்பட்டு (யுத்தத்தில்) வெட்டுப்பட்டோ அல்லது இறந்தோ விடுகின்றனரோ, அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் மிக்க அழகான (முறையில்) ஆகாரமளிக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் ஆகாரமளிப் பேரிளெல்லாம் மிக்க மேலானவன். (28:58)