சிலர் குர்ஆனை ஓதும்போது ذ , ض ,ظ , ق,  போன்ற அரபி எழுத்துகளை உர்தூ மொழியின் உச்சரிப்பை (மக்ரஜை)ப் போலவே மொழிகின்றனரே இது சரியா?

கேள்வி: உர்தூ மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் பெருமக்கள் சிலர் குர்ஆனை ஓதும்போது ذ , ض ,ظ , ق,  போன்ற அரபி எழுத்துகளை உர்தூ மொழியின் உச்சரிப்பை (மக்ரஜை)ப் போலவே மொழிகின்றனரே இது சரியா? தவறு எனில் இவ்வாறு ஓதும் இமாமைத் தொழுகையில் பின்தொடரலாமா? [நான் ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்தவன்]
அல்தாஃப் இப்ராஹீம் அன்வாரி 
இராணிப்பேட்டை 
பதில்: சிறப்பால் அல்லது வயதால் குறைந்தவராக இருந்தாலும்,  திருக்குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்துவதே மிகச் சிறப்பானது. ஓதுவதில் அவர்கள் அனைவரும் சமமதிப்பைப் பெற்றவர்களாக இருந்தால், அவர்களுள் மிகச் சிறந்த கல்வியாளரே அதற்குத் தகுதியுடையவர்.
அது குறித்துப் பின்வரும் நபிமொழிகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன:
அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். மக்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்)…” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 1192)  இதை அபூமஸ்ஊத் அல்அன்ஸாரி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிரீன்கள்-குபா பகுதியில் உள்ள- அல்உஸ்பா எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரளி) அவர்களின் அடிமையாக இருந்த சாலிம் (ரளி) அவர்களே அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்துக்கொண்டிருந்தார். இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார். (நூல்: புகாரீ: 692)
அம்ர் பின் சலமா (ரளி) அவர்கள் கூறியதாவது: …தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களுள் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களுள் யார் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக் கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  (நூல்: புகாரீ: 4302)
“மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களுள் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களுள் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்: 1191)
அபுல் அப்பாஸ் குர்துபீ (ரஹ்) அவர்கள் ‘அல்மஃப்ஹம் லிமா அஷ்கல மின் தல்கீஸி கிதாபி முஸ்லிம்’ எனும் தமது நூலில் கூறியுள்ளதாவது: “குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” எனும் நபிமொழியின் விளக்கம் யாதெனில், நல்லோர்களான ஒரு குழுவினர் தொழுகைக்கு ஓரிடத்தில் ஒன்றுகூடும்போது, குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவர் அவர்களுள் யாரேனும் இருந்தால் அவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்த மிகவும் தகுதிவாய்ந்தவர். அவர்கள் அனைவருமே நன்றாகக் குர்ஆன் ஓதுவார்கள் என்றால், அவர்களுள் அழகிய தொனியில் யார் ஓதுவாரோ அவரை முன்னிலைப்படுத்த வேண்டும். அவர்தாம் மற்றவர்களைப் பொறுத்தமட்டில் மிகவும் நன்றாக ஓதுபவர் ஆவார்.
அதேநேரத்தில் ஃபாத்திஹா அத்தியாயத்தைப் பிழையோடு ஓதி, அதனால் அவர் அதன் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறார் அல்லது அதன் எழுத்துகளை மாற்றிவிடுகிறார். சான்றாக, தா-வுக்குப் பதிலாக த்தா-வாக, காஃப்-க்குப் பதிலாக க்காஃப்-ஆக, அல்லது அவற்றுக்கு முரணாக ஓதினால் இத்தகையவர் தம்மைப்போன்றவர்களுக்கு வேண்டுமானால் தொழுகை நடத்தலாம். ஏனென்றால் இத்தகையவருக்குக் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லையெனில், அவருடைய தொழுகை அவருக்குச் சரியானதே. ஆனால் அவர் நன்றாக ஓதத் தெரிந்தோருக்கு முன்னால் நின்று தொழுகை நடத்தக்கூடாது. இஸ்லாமிய அறிஞர்கள் பலர், இத்தகைய குறைபாடுகளுடன் ஓதக்கூடியவரைப் பின்பற்றி நன்றாக ஓதத் தெரிந்தவர் தொழக்கூடாது என்று கூறியுள்ளார்கள். அபூஹனீஃபா (ரஹ்), மாலிக் (ரஹ்) ஆகியோர் இத்தகையவரின் தொழுகை கூடாது என அறிவித்துள்ளார்கள். தமக்குப் பின்னால் நன்றாக ஓதுபவர் இருக்க, திருக்குர்ஆனை நன்றாக ஓதக் கற்றுக்கொள்ள இயலாதவர் தொழுகை நடத்துவது கூடாது என்று தெரிவித்துள்ளார்கள்.
நவவீ (ரஹ்) அவர்கள் ‘மஜ்மூஉ’ எனும் தமது நூலில் கூறியுள்ளதாவது: நன்றாக ஓதத் தெரிந்தவர் குர்ஆனைப் பற்றிய அறிவில்லாதவரைப் பின்பற்றித் தொழுவது கூடாது. தொழவைத்தவரின் தொழுகை நிறைவேறிவிடும். பின்பற்றித் தொழுதவரின் தொழுகை நிறைவேறாது. அவ்வாறே குர்ஆனைப் பற்றிய அறிவில்லாதவரைப் பின்பற்றித் தொழுத குர்ஆனிய அறிவில்லாதோரின் தொழுகையும் நிறைவேறிவிடும். இதுவே நமது வழிமுறையும் அஹ்மத் (ரஹ்) அவர்களின் வழிமுறையும் ஆகும். அபூஹனீஃபா (ரஹ்), மாலிக் (ரஹ்) ஆகியோர் கூறுவதாவது: குர்ஆனைப் பற்றிய அறிவில்லாமல் தொழவைத்தவரின் தொழுகையும் அவரைப் பின்பற்றித் தொழுத குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்தோரின் தொழுகையும் நிறைவேறாது. ஏனென்றால் குர்ஆனைப் பற்றிய அறிவில்லாதவர் தமக்குப் பின்னால் நிற்கின்ற குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்தவரைப் பின்பற்றித் தொழுதிருக்க முடியுமல்லவா? மேலும் குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்தவர் தம்மால் இயன்றதைச் செய்யாமல் விட்டுவிட்டதால் அவருடைய தொழுகையும் நிறைவேறாது.
அர்த்தத்தை மாற்றாத வகையில் தவறு நிகழ்ந்தால் சான்றாக, ‘அல்ஹம்து லில்லாஹி’ என்பதில் ‘அல்ஹம்து லில்லாஹு’ என்று ஓதினால் அது மக்ரூஹ் தன்ஸீஹ்-மென்மையான தவறாகக் கருதப்படும். அத்தகைய தவறுகளோடு தொழவைத்தால், தொழவைத்தவர், அவரைப் பின்பற்றியோர் ஆகியோரின் தொழுகை நிறைவேறிவிடும். அதேநேரத்தில் அர்த்தத்தை மாற்றிவிடும் வகையில் ஓதினால் சான்றாக, ‘ஸிராத்தல் முஸ்த்தக்கீம்’ என்பதற்குப் பதிலாக ‘ஸிராத்தல் முஸ்த்தக்கீன்’ என்று ஓதினால், அவருடைய நாவைப் படிய வைத்து, அதைக் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் அவ்வாறு ஓதினால் அவர் ஹராமைச் செய்துவிட்டார் என்று பொருளாகும். அவர் உடனடியாக அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவருக்குத் தம் நாவு படிந்து வரவில்லை; அல்லது அதை முறையாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அத்தகைய நிலையில் உள்ளோர் மட்டுமே அவரைப் பின்பற்றித் தொழுவது கூடும். நன்றாக ஓதத் தெரிந்தவர் அவரைப் பின்பற்றித் தொழக்கூடாது. அப்படித் தொழுதால், நன்றாக ஓதத் தெரிந்தவர் குர்ஆனைப் பற்றிய அறிவில்லாதவரைப் பின்பற்றித் தொழுதால் எவ்வாறு தொழுகை கூடாதோ அதே சட்டமே இங்கு பொருந்தும். ஃபாத்திஹா அத்தியாயத்தை நன்றாக ஓதி, துணை அத்தியாயத்தைத் தவறாக ஓதினால் தொழவைத்தவரின் தொழுகையும் அவரைப் பின்பற்றித் தொழுதோரின் தொழுகையும் நிறைவேறிவிடும். ஏனென்றால் துணை அத்தியாயத்தை (மறதியாக) விட்டுவிடுவதால் தொழுகை முறிந்துவிடாது என்ற சட்டம் உள்ளது. எனவே அவரைப் பின்பற்றித் தொழுவதற்கு எந்தத் தடையுமில்லை.