சப்த அவஸ்தை

சையின் வடிவங்கள் அனைத்தும் சப்தங்களின் வெவ்வேறு முகங்களே. அதனால் தான் இனிமையற்ற வெற்று சப்தங்களை வெறுப்பவர்கள் இதயத்துக்கு ஒத்தடம் கொடுக்கும் இசையை விரும்புகிறார்கள்.

மெல்லிசை நமக்கான மலர்களை மனமெங்கும் பரப்பி விடுகிறது. மடிந்து கிடக்கும் சோகங்களை அள்ளியெடுத்து எறிகிறது.

மனத்தை மென்மையாய் வருடும் மெல்லிசை விரும்பாமல் இதயத்தைப் பிடித்து உலுக்கும் கத்தல்களையே இப்போதெல்லாம் இளைய மனங்கள் இளைப்பாறும் ஆலமரங்களாக ஆக்கிக் கொண்டுள்ளன.

மங்கல நிகழ்வில் குலவையும்,  துக்க நிகழ்வில் ஒப்பாரியும் காற்றால் ஆன சப்தங்கள் நேர் எதிர்முனைகளே.

சப்த விலங்கை பலவந்தமாக அணிந்து சொந்தச் சுதந்திரத்தை நாமே கட்டி வைக்கிறோம்.

சப்த உளிகளால் நம் உள்ளத்தை உடைத்து காயங்களை உற்பத்தி செய்கிறோம்.

சப்தத்துக்குள் விழுந்து உடைந்து கிடக்கிறோம் நாம்.  காயங்கள் மிகுந்தாலும் கவனம் திரும்புவதில்லை நமக்கு.

நம்மை ஆசீர்வதிக்கும் சப்தங்களைவிட அறைந்து வலியூட்டும் சப்தங்களுடனேயே கலந்து கிடக்கிறோம்.

நமது பகல்களும்,  இரவுகளும் சப்தங்களால் பங்கு வைக்கப்படுகின்றன.

சப்த வேலிகளால் தடுக்கப்பட்டிருக்கும் நமக்கு அமைதிச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது.

சப்த வேலிகளால் தடுக்கப்பட்டிருக்கும் நமக்கு அமைதிச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது.  சப்த நெருப்பால் வறுக்கப்படும் நமக்கு அமைதிச் சாரல் தடுக்கப்படுகிறது.

சப்த அதிர்வுகளால் நமது முகமூடிகள் கூட சில நேரங்களில் கிழிந்து போகின்றன.

வெற்று சப்தங்களாலும்,  மேடை முழக்கங்களாலும் வாகன இரைச்சல்களாலும்,  அற்பர்களின் ஆராவாரங்களாலும் ஆன்மாவை அவஸ்தைப்படுத்தி,  அதை அலங்காரப்படுத்தியதைப் போல் நடிக்கிறோம் நாம்.

சப்தங்கள் விருந்தாளியாகவும்,  வில்லன்களாகவும் நமக்குள் வருகை தருகின்றன.

காதுகளுக்குக் கதவுகள் இல்லாததால் திறந்த வீட்டுக்குள் நுழைந்து விடுகின்ற நாய்களைப் போலவும் அவை அத்துமீறுகின்றன.

சில சப்தங்களின் விஷச்சத்து உள்ளே தங்கிவிட,  தின்றதைத் தின்ற வழியே வெளியேற்றும் மண்புழுவின் இயல்பை சிலநேரம் காதுகள் கடன் வாங்கிக் கொள்கின்றன.

விழிக்கும் பொழுதே இரைச்சல்களை உள்வாங்கத் துவங்குகின்றன செவிகள். இந்த நிலையே தொடர்வதால் மந்த நிலைக்கு நம்மைக் காவு கொடுக்கின்றன காதுகள்.

சப்தங்கள் மன அமைதியை மிச்சம் வைக்காமல் கபளீகரம் செய்துவிடுகின்றன.

அவற்றில் சில அளக்க முடியாத ஆழத்தில் நம்மைத் தூக்கி எறிந்துவிடுகின்றன.

இப்போதெல்லாம் எந்த வீட்டிலும் அமைதி என்பது இருப்பதில்லை.

சப்தங்களால் வீடுகள் நிறைந்திருக்கின்றன சாபக் கேடுகளாய்.

தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதாவது உருவங்கள் கத்திக் கொண்டும்,  அழுது கொண்டும் செவிப் பறையைக் கிழிக்கின்றன.

அனைத்துவிடலாம் என்றால் அதற்கு அடிமையானவர்கள் சோர்ந்து போவார்கள் அல்லது முறைப்பார்கள்.

என் எதிர்வீடு எப்போதும் சினிமா கொட்டகைதான்.  தொலைக்காட்சி  சப்தத்தை அவர்க்ள தெரு முழுவதற்கும் இலவசமாக வழங்குவார்கள்.

சில நேரங்களில் என்வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் சப்தத்தை முழுவதுமாக குறைத்து விடுவோம்.

காட்சிகளை என்வீட்டுப் பெட்டியும்,  சப்தத்தை எதிர்வீட்டுப் பெட்டியும் இணைந்து வழங்கும் குடிகாரர்களின் கத்தல்களும்,  அடிதடிச் சண்டைகளும்,  பெண்களின் குழாயடி முடிபிடிகளும் நம் மனத்தைக் காயப்படுத்தும்.

அரைவேக்காட்டு ஓட்டுநர்களால் வாகனங்கள் மோதும் சப்த சேதங்களில் மனிதச் சாவுகளையும் நிகழ்த்தும்.

‘வீடியோ கோச்’ என்ற அறிவிப்பு பேருந்துகளில் அமைதியாகக் கழிய வேண்டிய பயணப் பொழுதுகளைச் சப்தங்களால் புண்ணாக்கி தலைவலியைத் தனதாக்கிக் கொள்கிறோம்.

சப்தச் சல்லடையில் நம் ஜீவசக்தி சலிக்கப்படுகிறது. சக்கையாய் எஞ்சிப் போகிறோம் நாம்.

நமது வாழ்வு சப்தங்களால் சபிக்கப்பட்டதா?

நாமெல்லாம்  போர்க்களத்தில் நின்று கொண்டு ‘பிடில்’ வாசித்துக் கொண்டிருக்கிறோமா?

மனம் மரத்துப்போன மனிதர்களா நாம்?

தீபாவளிப் பண்டிகையின் சந்தோச முகத்தைச் சப்தங்களால் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.

சப்தங்கள் சந்தோசம் தருவதாக தவறாகத் தீர்மானித்திருக்கிறோம்.

எப்போதோ செத்துப்போன நரகாசுரன் என்ற ஒருவனின் சாவைக் கொண்டாட எத்தனைச் சாவுகளை நிகழ்த்துகிறோம்.

சிவகாசிச் சாவுகள் தீபாவளியாய் நம்மை சந்தோசப் படுத்துகின்றன.

மனிதக் கல்லறைகளின் மேல் நமக்கான மகிழ்ச்சித் திருவிழா.

காதைக் கிழித்து இதயத்தைப் பிடித்து உலுக்கும் சப்த உற்பத்தியில் எவ்வளவு இன்பம் நமக்கு?

கட்டிடங்களையும் அதிரவைக்கும் வெடிகளால் ஆனந்தம் அடைகிறோம் நாம்.

இதயத்தின் மென்மையைத் தொலைத்தவர்களால் மட்டும் சப்தங்களால் இன்பம் காண முடியும்.

நெஞ்சங்களில் அடிக்கும் வெடிவெடிப்பது என்பதும் வன்முறைதான்.

சிவகாசி அணுகுண்டுகளின் சப்தம் தொட்டில் குழந்தைகளுக்குத் தாலாட்டாகுமா?

கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவமா நிகழ்த்தும்? எண்ண முடியாத மனிதச் சாவுகளுக்குக் காரணமாகிறது தீபாவளி.  மனிதத்தை நேசிக்கும் மனிதர்களால்கூட அது கொண்டாடப்படுகிறது.

வெடிவெடித்து அக்கம் பக்கத்தினரை அடிஅடித்து ஆனந்த நடனமாடும் நாம் அந்த வேளையில் சிவகாசியில் வெடித்துச் சிதறி உயிர்த்துறந்த சகமனிதர்களை எண்ணிப் பார்த்திருக்கிறோமா?