குணங்குடியார் (குறுங்கதை)

தரீக்காக்கள்:

இந்த ஆன்மிக நெறிகளின் ஞானத்தத்துவமான சூபித்துவத்தின் நெறிமுறைகளைக் கொண்ட தரீக்காக்கள் சிஷ்தீயா தரீக்கா, காதிரியா தரீக்கா, சுஹ்வரவர்தியா தரீக்கா, நக்ஷபந்தியா தரீக்கா ஆகிய நான்கு தரீக்காக்கள் இந்தியாவில் புகழ் பெற்ற தரீக்காக்களாகும். குண்ங்குடியார் அவர்கள் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைத் தலைவராகக் கொண்ட காதிரியா தரீக்காவைச் சார்ந்தவர்.  இந்த காதிரியா தரீக்காவைத் தமிழகத்தில் போதித்தவர் நாகூரில் அடங்கியுள்ள சங்கைக்குரிய ஷாகுல் ஹமீது(ரஹ்) ஆவார்கள்.  அவர்களின் தவத்தின் உச்சநிலையை உணர்ந்த குணங்குடியார் தமது பாடலில் தவராஜ செம்மேருவே என்று பாடுகிறார்.  இவரது பாடல்களில் சூபித்துவ வழியில் தமிழ்நாட்டுச் சூழலுக்கேற்ப சித்தர் மொழி நடையுடன் ஓரளவு அரபு மொழி சொல்லாட்சியும் சிறந்து விளங்குகின்றன.

குணங்குடியார் தமது ஞானப் பாடல்களில் சிவம், சக்தி, உமை, மனோன்மணி, அம்பிகை, வாலை, கேசரி, சாம்பவி, தட்சிணாமூர்த்தி, நந்தி, துளவமணி மார்பன், சிற்றம்பலம் ஆகிய ஆன்மிக யோக பரிபாஷ வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.  இவை ஆன்மிகத் துறையினர் பயன்படுத்தும் பரிபாஷையாகும்.  இந்தப் பரிபாஷைகளை இந்துப் புராண சொற்களாகக் கருதி நேரடி அர்த்தம் கொள்ளக்கூடாது.  மருத்துவ பரிபாஷைகளும் உள்ளன.  உதாரணமாக மருத்துவ பரிபாஷையில் ‘அரி’ என்ற சொல்லுக்கு ‘கடுக்காய்’ என்பது பொருளாகும்.  இந்த அரி என்ற சொல்லுக்கு நேரடி அர்த்தம் திருமால் என்பதாகும்.  எனவே பரிபாஷைகளுக்கு நேரடி அர்த்தம் கொள்வது தவறாகும்.  அது போல் யோக பரிபாஷையைத் தெரிந்து மேற்கண்ட வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் காண வேண்டும்.  சூபி ஞானியான குணங்குடியார் அவர்களின் பாடல்களில் சூபித்துவத்தைத் திறம்படக் கூறி தமிழ் இலக்கியத்திற்கு மேலும் மெருகேற்றியுள்ளார்.  அவரது பாடல்கள் சூபி ஞானக்களஞ்கியமாகத் திகழ்கிறது.

ஒரு சமயம் குணங்குடியார் அவர்களின் அருங்குண்ங்களையும், ஆன்மிகச் சித்துக்களையும் கேள்விப்பட்ட ஆற்காடு நவாப் குணங்குடியாரைக் காண விரும்பினார்.  நவாபின் எண்ணத்தை ஆன்மிக ஞானத்தால் உணர்ந்த குணங்குடியார் நவாபின் காவலை மீறி நவாபின் முன் வந்து நின்றார். அவரைக் கண்ட நவாப் மஸ்தானின் அருளாற்றலைக் கண்டு வியந்து அவர் தவம் செய்ய ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தார்.  ஞானப் பெருந்தகை குணங்குடியாரின் புகழ் மேலும் பரவியது.

அவரது தவச்சாலையில் மக்கள் சாதி மத பேதமின்றி வந்து ஆன்மிக அறிவுரை பெற்றுச் சென்றனர்.  தமிழுலகம் போற்றும் தமிழறிஞர்கள் புலவர் நாயகம் என்னும் செய்யது அப்துல் காதிர், நைனார் லெப்பை, ஆலிம் புலவர், முகமது உசேன் புலவர், மகாவித்வான் திருத்தணிக்கை சரவணப் பெருமாள் ஐயர், சிவபோகி ஐயாசாமி முதலியார், ஆகியோர் குணங்குடியாரின் ஞானப் பாடல்களையும், குணங்கடி யாரையும் புகழ்ந்து பாடியுள்ளார்.  அல்லாஹ்வின் அருளால் அவரது நாவிலிருந்து ஆன்மிக ஞானப் பாடல்கள் மடைதிறந்த வெள்ளம் போல் பொங்கி வந்ததாக கூறுகின்றனர்.  குணங்குடியார் பாடிய பாடல்களை அவர் மாணவர் முகமது ஹுசைன் புலவர் எழுதி, அந்தக் கையெழுத்துப் பிரதியை மற்றொரு மாணவரான சீயமங்கலம் அருணாசல முதலியார் அவர்களால் குணங்குடியார் அனுமதியுடன் அச்சிலேற்றப்பட்டது.

ஆன்மிக ஞான ஒளியை இந்த அவனியில் பரப்பிய ஆன்மிக அந்த அருள் கூடர், ஆன்மிகச் சித்தர் ஹிஜ்ரி 1254 ஜமாதுல் அவ்வல் 14ஆம் நாள் அதிகாலை கி.பி1838ம் ஆண்டு தமது 47 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை முடித்து பரிபூரணம் அடைந்தார்.  அவர் தங்கி தவம் செய்த இடத்திலேயே அல்லாஹ்வின் திருவருளால் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

நன்றி: மறைச்சுடர்

Dr. S. முஹைதீன் சுஹ்ரவர்தீ M.A., M.phil., D.Lit