குணங்குடியார் (குறுங்கதை)

ஆன்மிகக் கல்வி:

தமது பதினேழாவது வயதில் கீழக்கரை சென்று ஆன்மிகக் குருவான தைக்கா சாஹிபு அவர்களிடம் அரபு மொழித் தேர்ச்சியும், சமய ஞானமும், தவத்தின் நெறி முறைகளையும் கற்றுணர்ந்தார்.  கி.பி.1813ம் ஆண்டு இவ்வுலகப் பற்றனைத்தையும் ஒழித்தவராய் முற்றும் துறந்தவர் ஆனார்.  ஆன்மிகத் தாகம் அளவுக்கதிகமாகி, சூபி நெறியில் தன்னை வழி நடத்துவதற்குரியவராக இருந்த திருச்சி மௌலவி ஷாம் சாகிபிடம் சென்று தீட்சை பெற்று ஞான யோக நெறியில் தன்னை முற்றிலுமாக ஈடுபடுத்திக் கொண்டார்.  பகல் பொழுதெல்லாம் நோன்பும், இரவெல்லாம் தொழுகையுமாய் இருந்து இறைவனை வணங்கினார்.

பின்னர் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் மலை சென்று அங்கே கல்வத் என்னும் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார்.  பின்னர் அறந்தாங்கி என்ற ஊருக்கருகில் உள்ள உலகம் என்ற ஊரின் ஆறு மாதங்கள் தங்கியிருந்து தவம் செய்து, பின்னர் தொண்டியில் உள்ள அவர் தாய்மாமன் கட்டை சாகிபு அடங்கியுள்ள வாழைத் தோப்பில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து நிஷ்டையில் ஆழ்ந்தார்.  பின்னர் சதுரகிரி, புறமலை, நாகமலை,ஆனைமலைகளிலும், காடுகள், நதிக்கரைகள் ஆகியவற்றில் தங்கி நிஷ்டையில் ஆழ்ந்தார்.  அதுபோது அவர் சருகு, காய், கனி ஆகியவற்றை உணவாகக் கொண்டார்.

அவர் ஆங்காங்கே செய்த சித்துக்களையும், அற்புதங்களையும் கண்ட மக்கள் அவரை மஸ்தான் என்று அழைக்கலாயினர்.  ஊலகியல் இன்பங்களை ஒதுக்கித் தள்ளி, இறைவன் மீது அளவு கடந்த அன்பு கொண்டு, இறையன்பில் வெறிபிடித்த ஆன்மிக ஞானியர்களை மஸ்தான் என்று அழைப்பது வழக்கம்.  ‘மஸ்த்’ என்ற பாரசீகச் சொல்லுக்கு ‘வெறி’ என்பதாகும்.  குணங்குடியாரும் அவ்வாறே இருந்தார்.  அதனால் குணங்குடி மஸ்தான் என்று அழைக்கப்பட்டார்.  அவர் பல இடங்களில் சுற்றித்திரிந்து பின்னர் சென்னை ராயபுரத்திலுள்ள பாவா லெப்பை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் தங்கினார்.  பாவா லெப்பை அவர்களும் குணங்குடியாரின் ஆற்றலையும் மகிமையையும் உணர்ந்து அவருக்கு அங்கு ஒரு தைக்காவை அமைத்துக் கொடுத்தார்.

குணங்குடியார் அவர்கள் அந்த தைக்காவிலும், ஒன்றறை ஆண்டு  யோக நிஷ்டையில் ஆழ்ந்தார்.  அவருடைய ஆற்றலை உணர்ந்த இந்துக்களும் அவரிடம் வந்து தீட்சை பெற்று செல்லலாயினர்.  மனிதர்களின் மன இருள் அகற்றும் ஆன்மிக ஞானியாகவும், சூபியாகவும் வாழ்ந்து வந்தார் குணங்குடியார் மனிதர்களின் கண்களுக்கு மறைந்தும் வாழ்ந்தார். தெரிந்தும் வாழ்ந்தார்.  அவர் பன்னிரெண்டு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார். அவர் சென்னையில் வாழ்ந்த பகுதியைத் தொண்டியா பேட்டை என்றழைத்தனர்.  பின்னர் அது மருவி தண்டையார் பேட்டை என்றழைக்கப்பட்டது.  இஸ்லாமியர்கள் அவரை சுவாமி என்றும் அழைத்தனர்.  சூஃபி என்ற சொல் இஸ்லாமிய ஆன்மிக நெறியான சூபித்துவத்தின் முதல் தலைமை குருவாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு வலைஹி ஸலாம் அவர்கள் அமைந்துள்ளார்கள்.  சூபி இலக்கியங்களைப் படைத்தவர்களுள் மௌலானா ரூமி அவர்களும் ஓருவராவார்.