கனவில் மிதக்கும் கருப்பு

ந்தியக் குடிமகனின் இன்றையக் கனவில் மிதந்துகொண்டிருக்கிறது ஒரு கருப்பு. இந்தக் கருப்பு அவனை மருள வைக்கவில்லை. கருப்பு இப்போது அவனுக்கு அமங்கலமான நிறம் அல்ல. அது இந்திய ரூபாயின் பேருருவம். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்தியச் செல்வம் ஒரு பேராறாக ஓடிக்கொண்டிருக்கிறது.அந்தப் பேராற்றின் நிறம் கருப்பு.

ஆனால் இந்தக் கருப்புப்பணம் நெருங்கமுடியாத நெருப்புஜுவாலையாக இருக்கிறது. மோடி அதனைத் தன் மோடி வித்தையால் குளிரவைத்து தாய்நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார் என்று கோடானுகோடி வாக்காளர்கள் நம்பி வாக்களித்தார்கள்; அவரைப் பிரதமராகவும் ஏற்றி வைத்துள்ளார்கள். இந்நேரம் அவர் செயல்படும் பிரதமராக இருந்திருப்பாரேயானால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பல லட்சம் ரூபாய் வந்து சேர்ந்திருக்கவேண்டும். இது அவர்மீது நாம் கொண்டுள்ள கோபத்தால் சீண்டிவிடுகிற ஆசை அல்ல.  அவர் தேர்தல்காலத்தில் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள். அவர் மாபெரும் வெற்றிபெற்றது மக்கள்மத்தியில் அவர் விதைத்த இந்த வாக்குறுதிக்காகத்தான்.  அதை அப்படியே பின்பாட்டாகப் பாடியவர் அருண்ஜேட்லி.  இன்று மோடி பிரதமர்:  அருண்ஜேட்லி நிதிமந்திரி. ஆனால் மக்களின் கையில் அவர்கள் இருவரும் வாக்களித்த பல லட்சம் ரூபாய் வந்து சேரவில்லை. ஏன்?  டெல்லிக்கும் இன்னும் அந்தப்பணம் வந்து சேரவில்லை.

இப்போது கருப்புப்பணம் பற்றி உச்சநீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பும்போது மோடியும் அருண்ஜேட்லியும் அன்றைய காங்கிரஸின் நிழல்களாக மாறி பல ஏமாற்று வார்த்தைகளை உதிர்க்கிறார்கள். பா.ஜ.க.வின் தொண்டையிலிருந்து காங்கிரஸின் ஒலிபெருக்கி அலறுகிறது.  கருப்புப்பணத்தை மீட்க மனமில்லாமல் அன்று காங்கிரஸ் சொன்ன அனைத்து சால்ஜாப்புகளையும் இப்போது இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிற நாடுகளுடன் இந்தியா செய்துகொண்ட ரகசியக் காப்பு ஒப்பந்தம் மீறப்பட்டுவிடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். மக்கள் வாக்களித்தது எதற்காகவாம்? ஆட்சிக்கு வந்த இத்தனைநாட்களாக எதையும் செய்யாமல் வீணே பேசிப் பொழுதைக் கழித்துவிட்டு இப்போது தடைக்கல் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கூறுகிறார்கள்.  இதனால் மனம் வெதும்பிப்போன நீதிபதிகள் மத்திய அரசுக்குப் பல நிபந்தனைகளை விதித்துப் பொறியில் மாட்டிவைத்துள்ளனர்.

உண்மையில் மோடிக்கோ ஜேட்லிக்கோ கருப்புப்பணத்தை மீட்கும் ஆர்வம் கிடையாது. எவரால் கருப்புப்பணம் உருவாகிறதோ அவர்கள் தந்த நிதியைக் கொண்டுதான் மோடியும் பா.ஜ.க.வும் தேர்தலில் வென்றார்கள்;  எஜமானர்களின் கட்டளையைமீறி எப்படி மன்மோகன்சிங்கால் செயல்பட முடியாமல் போனதோ, அதே நிலைதான் இன்று மோடிக்கும். இத்துடன் மோடி அரசு வகுத்திருக்கிற பொருளாதாரக்கொள்கைகள் முதலாளிகளின் சாப்பாட்டு மேஜையில் தீட்டப்பட்டவை. அவர் பகாசுர முதலாளிகளுக்காகத்தான் செயல்பட்டாக வேண்டும்.  நாளதுவரை வறுமைத் துயரில் மாய்ந்துகொண்டிருக்கிற தொழிலாளர்களுக்கோ விவசாயிகளுக்கோ அவர் எந்த புதிய திட்டங்களையும் அறிவித்திடவில்லை. கருப்புப்பணத்தை மீட்டினால் அதை ஏழைகளுக்கே விநியோகம் செய்யவேண்டி வரும். மோடியின் அரசுக்கு அந்த எண்ணம் வந்து சேராது. பட்டியலை வெளியிடச்சொல்லி அருண்ஜேட்லிக்கு நெருக்கடி வந்தபோது, பட்டியலை வெளியிட்டால் அது காங்கிரஸுக்குத்தான் சிக்கல் என்று பள்ளிக்கூட மாணவன்போல மருண்டு பேசினார்;  காங்கிரஸை ஒழிப்பது பா.ஜ.க.வின் லட்சியம் அல்லவா? காங்கிரஸுக்கு நேரிடப்போகிற சிக்கல்பற்றி ஜேட்லி ஏன் கவலைப்பட்டாரோ,  அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.  தேர்தலில் காங்கிரஸை எதிர்க்கட்சியாகவும் வந்துவிடக் கூடாது என்று புரட்டிப் புரட்டி எடுக்கவில்லையா? அதைத்தானே இப்போது செய்திருக்கவேண்டும்.  எப்போது கருப்புப்பணத்தை மீட்க உறுதி இல்லையென்று ஆகிவிட்டதோ அப்போதே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்கிற தன்னுணர்விலிருந்தும் வெளியேறிவிடுகிறார்கள்.

காங்கிரஸைப் பாதுகாக்க விரும்புவதின் ரகசியம் என்ன? கருப்புப்பணக்காரர்களின் நியாயமற்ற  அச்சத்தைப் போக்கும் சமிக்ஞை. நிலைமை கைமீறிப் போய் மோடி அரசின் முகமூடி கிழிய ஆரம்பிக்கும்போது மோடி மீண்டும் நம்முன்னர் பிரசன்னமாகிறார்; கருப்புப்பணத்தை மீட்காமல் ஓயமாட்டேன் என்று மீண்டும் ஓங்கி முழங்குகிறார். ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படுமாம். அறுபத்தேழு ஆண்டுகளாக இந்தியாவில் முழக்கங்கள் கேட்டுவருகின்றன. அந்த முழக்கங்கள் வெடியோசைபோல சற்றுநேரத்திற்கு அச்சுறுத்தும்; எதையும் புரட்டிப்போடும் சக்தியில்லாத அவை சங்கோஜமின்றி மோடியாலும் இன்று முழங்கப்படுகிறது. எதுவும் நடந்துவிடப் போவதில்லை.  அதற்காக சும்மா இருந்துவிட முடியுமா? நாம் இதன் காரணமாகவே இதைத் திரும்பவும் பேசிப்பேசி மோடி அரசை நெருக்குதலுக்கு உள்ளாக்கவேண்டும். அதன்மூலம் இந்தியாவைப் பீடித்த வகுப்புவாத நோயையும் நாம் விரட்டியடிக்கமுடியும்.

ஆகையால் நாங்கள்  மீண்டும் கேட்கிறோம், “ மோடி சார் எங்கே நீங்கள் எங்களுக்கு வாக்குறுதியளித்த அந்தக் கருப்புப்பணம்?”