ஒரு கனி இரண்டு கற்கள் : (Sep -2015)

 

குஜராத் மாநிலத்தின் படேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி நடத்திவரும் போராட்டம் இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத்தின் பெரும்பான்மைச் சமூகம் படேல் சமூகம் ஆகும். அம்மாநிலத்தின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் படேல் சமூகத்தினரே ஆவர்.  இன்றைய முதல்வர் காந்திபென் படேல் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்.  அவர்கள் பொருளாதார ரீதியாகவும் பலம் வாய்ந்தவர்கள்.  மக்கள் தொகையிலும் பொருளாதாரத்திலும் உயரிய நிலையில் அச்சமூகம் இருக்கும்போது அவர்கள் இட ஒதுக்கீடு கோரிப் போராடுவது ஆச்சரியமானதாகும்.

முற்படுத்தப்பட்ட அச்சமூகத்தினர் கல்வியிலும் பணிகளிலும் இட ஒதுக்கீடு கோரிப் போராடுவது பல ஆண்டுகளாக நடந்துவருவதுதான். கோரிக்கை என்னவெனில், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் சேர்க்க வேண்டும் என்பதாகும்.  ஆனால் இத்தனை ஆண்டுக்காலமும் அமைதியாக நடந்துவந்த போராட்டம் இப்போது பெரும் வன்முறையில் முடிந்திருக்கிறது. அரசியல் மற்றும் வாழ்க்கை அனுபவத்தில் கைதேறாத ஒரு இளைஞராகிய ஹர்திக் படேல் இன்றைய வன்முறைப் போராட்ட்த்தின் மூலம் நாயகராகி இருப்பது எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

தன் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டைக் கோருகையில் அவர் அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை.  நியாயமான குறைபாடுகள் அச்சமூகத்திற்கு இருந்தால் அதைப் பேச்சுவார்த்தை வழியாகத் தீர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தியும் இருக்கலாம். ஆனால் தங்கள் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு தரவில்லையெனில், எல்லாச் சமூகத்தினருக்குமான இட ஒதுக்கீடு ஏற்பாட்டையே ரத்து செய்துவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைப்பது விபரீதமான போக்காகும்;  அவருக்கு அந்த உரிமை இல்லை.

இந்திய அரசியல் சட்டப்படி இப்போது வழங்கப்படும் இட ஒதுக்கீடுகள் சாதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தாழ்த்தப்பட்டோராக இருக்கக்கூடிய சமூகத்தினருக்கே வழங்கப்பட்டுள்ளன.  அதாவது, அச்சமூகத்தினர் இயல்பாக தாழ்ந்த நிலையில் உள்ளோர் அல்லர்;  அவர்கள் வர்ணாஸ்ரமக் கொடுங்கோன்மையின்கீழ் தாழ்த்தப்பட்டார்கள். இழிவான வேலைகளுக்கும் கடினமான வேலைகளுக்கும் சாதியின் பெயரால் திட்டமிட்டு விரட்டப்பட்டார்கள்.  எனவே, தலைமுறை தலைமுறையாக அவர்களுக்குக் கல்வி பயிலும் உரிமை மறுக்கப்பட்ட்து.  அவர்கள் கல்விக்கும் இதர திறமைகளுக்கும் லாயக்கில்லாதவர்கள் என்று மூளைச்சலவை செய்யப்பட்டனர்.  அச்சமூகத்தின் முன்னோர் இதனை நம்பும்படியான நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.  ”இதுதான் தலையெழுத்து” என்று அவர்கள் தங்களைத் தாங்களே வர்ணித்தவர்களாக மீண்டும் பலமுறை தாழ்த்திக்கொண்டார்கள்.  இத்தகைய மனநிலை சாதீய ரீதியாக மேம்பட்டிருந்த அனைவருக்கும் வசதியாகப் போயிற்று.  ஒரு மாபெரும் மக்கள் குழுவினர் தங்களின் அதிகாரத்திற்கும் சுகபோக வாழ்வுக்கும் போட்டியாக வரமுடியாமல் தடுத்துவிட்டோம் என்று இறுமாந்திருந்தார்கள். ஆனால், சுதந்திரப் போராட்டக் காலத்திலும், அதற்கு சற்றேறக்குறைய முன்னரும் தாங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் சாதீயச் சதிவேலையைத் தெளிவாக அச்சமூகத்தினர் புரிந்துகொண்டார்கள்.

சுதந்திரம் பெற்றபின் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழுவினர் இந்திய அரசியலமைப்புச் சட்ட்த்தை வடிவமைத்தபோது தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினச் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விதிகளைச் சேர்த்தார்கள்.  இப்படியாகத் திட்டமிட்ட சதிவேலையினால் அமுங்கிக்கிடந்த மக்கள் சற்றே மேலெழுந்து வந்தனர்.  இந்த இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்கு மட்டும் என்று சொல்லப்பட்டது.  ஆனாலும் இட ஒதுக்கீட்டில் ஏராளமான குளறுபடிகளும் மூடுதிரைகளும் இருந்தன.  ஆதலால் பத்தாண்டுகள் என்கிற காலக்கெடுவுக்குள் நாட்டின் நலிந்த பிரிவினர் மேன்மைநிலையை எட்டவில்லை.  இதன் காரணமாகவே இட ஒதுக்கீடு இன்னும் தொடர்கிறது. இந்தியாவின் மாறாத அவலமாகச் சாதீயம் தொடர்வதால் ஏனைய நாடுகளில் நமக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவைச் சரிசெய்ய வேண்டும் என்கிற முனைப்பு பல தேசியத் தலைவர்களுக்கும் இருந்தமையால் ஓரளவுக்குப் பாதுகாப்பான இட ஒதுக்கீடு முறை இங்கே அமுலில் உள்ளது.

  • நாம் அறிய வேண்டியது என்னவெனில், இட ஒதுக்கீடு கோருவதற்கு சமூகத்தின் அடித்தட்டுப் பிரிவினர்க்கே உரிமை உண்டு.  படேல் போன்ற முன்னேறிய வகுப்பினர் அதற்கான கோரிக்கையை எழுப்ப முடியாது.  ஆனால் சாதீய நெருப்பிலேயே தொடர்ந்து குளிர்காயும் ஆர்.எஸ்.எஸ். நாட்டின் அதிகாரம் முழுவதையும் தனது கைக்குள் கொண்டுவரும் பயங்கரமான குயுக்தி வேலைகளைத் திட்டமிட்டு வருகிறது. நலிந்தோரும் சிறுபான்மையோரும் மேல்நிலைக்கு வந்தால், தனது அதிகாரச் சுகபோகச் சல்லாபங்களில் இடிவிழுந்து கருகிப்போகும் என்று ஆர்.எஸ்.எஸ். பீதிக்குள்ளாகியுள்ளது.  இதன்பொருட்டாக இட ஒதுக்கீடு ஏற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் சதிகளில் ஈடுபடுகின்றது அது. இன்று குஜராத் போராட்டம் பெரிய அளவுக்குக் கவனம் பெற்றதும், பல்வேறு முன்னேறிய சாதியினரின் எண்ணங்களும் அதை நோக்கிக் குவிந்துள்ளன.  படேல் போன்ற வெவ்வேறு மாநிலப் பெரும்பான்மைச் சாதியினரின் இட ஒதுக்கீடுக் கோரிக்கையை, ஹர்திக் படேலின் அதே கோரிக்கையோடு ஒலிக்க வைப்பதன்மூலம் எல்லா இட ஒதுக்கீடுகளையும் ஒரே சமயத்தில் ஒழித்துக் கட்டிவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ். கணக்குப் போடுகிறது. அதற்காக விதம்விதமான வன்முறைக் களங்களை அது உருவாக்கிவருவதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

அதே சமயம் கடந்தமாதம் மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. இது தேவேந்திரகுல வேளாளர்களின் மாநாடு என்று கூறப்பட்டது.  அதில் அமித்ஷா கலந்துகொண்டார். தேவேந்திரகுல வேளாளர்கள் என்று கூறப்பட்டாலும், அவர்களும் தாழ்த்தப்பட்டோர்தான். ஆனால் இந்த மாநாட்டில் ஒரு விசித்திரமான கோரிக்கை எழுப்பப்பட்டது. தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்பதே அந்தக் கோரிக்கை.  அதாவது எந்தச் சமூகத்தவரைக் கருத்தில்கொண்டு இட ஒதுக்கீடு ஏற்பாடு செய்யப்பட்டதோ, அந்தச் சமூகத்தவரே இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறுகிறார்கள்.  இது முழுமையான தேவேந்திரகுல வேளாளர்களின் அமைப்பு அல்ல என்றபோதும், ஒட்டுமொத்தச் சமூகத்தின் பிரதிநிதிகள் போலத் தங்களைத் தாங்களே முன்னிறுத்திக்கொண்டு இட ஒதுக்கீடு வேண்டாம் என்றார்கள்.  காரணம் என்னவென்றால், இட ஒதுக்கீடு முறை அவர்களுக்கு இழிவைத் தருகிறதாம்.  ஆக, முற்படுத்தப்பட்ட சாதியினரான படேல் சமூகமும்,  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளரும் எதிரெதிர் முனையில் நின்றபடி ஒரே குறியை நோக்கிக் கல் வீசுகிறார்கள்.  இப்படி எதிரும் புதிருமான சமூகங்கள் ஒரே கோரிக்கையை முன்வைப்பதால் இட ஒதுக்கீட்டு ஒழிப்பை நாட்டின் ஒட்டுமொத்தக் கருத்தாக உலகை நம்பவைத்து ஈமச்சடங்கு செய்துவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஃபாசிச சக்திகள் திட்டமிட்டுக் காயை நகர்த்திவருகின்றன.  பொதுவாகவே இந்திய மனம் என்பது சாதீய அழுக்கினுள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.  சாதீயத்தின் மேனிலையை நோக்கித் தம்மை நகர்த்திச் செல்லவே எல்லா சாதியினரும் விரும்புகின்றனரே அன்றி, அதை ஒழித்துக்கட்டிச் சாதிபேதமில்லா சமத்துவ நிலையை எட்டிப்பிடிக்க எவருக்கும் மனமில்லை.  இந்நிலையில் தாழ்த்தப்பட்டோரும் சிறுபான்மைச் சமூகமும் மிகப்பெரிய அபாய நிலைக்கு ஆளாகக் கூடும்.

இதன்பின்னே மறைந்துள்ள ஆபத்தை எல்லாச் சாதியினரும் அறிய வேண்டும்;  அல்லாத பட்சத்தில் மேனிலையில் தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ள மிகமிக மைனாரிட்டியான சாதியைச் சேர்ந்தோர் மட்டுமே ஆதிக்கச் சக்திகளாகத் திகழ்வார்கள்.  இப்போதும் அதுதான் உண்மைநிலை;  ஆனாலும் பல்வேறு விதமான காரணங்களால் நாட்டின் பல்வேறு சாதியினரும் ஓரளவுக்கேனும் மேலேறி வந்துள்ளன்ர். ஆதிக்கச் சாதிக்கு ஆங்காங்கே தடைபோடும் வாய்ப்பு உள்ளது; தங்கள் உரிமைக்குக் குரல்கொடுக்கவும் வழியுண்டு.  ஆனால் இட ஒதுக்கீட்டை நீக்கும் நிலை உண்டானால் இந்தியா நினைத்துப் பார்க்கமுடியாத அவலத்துக்கு ஆளாகிக் கொந்தளிப்புக்குள் வீழும்.

ஆகையால் படேல் சமூகத்தின் கோரிக்கை ஏற்புடையதல்ல.  ஓர் இளம் தலைவர் ஒரே நாளில் மேலேறி வருவதற்குப் பல்வேறு விதமான சதித் திட்டங்கள் உள்ளன என்றே ஜனநாயகச் சக்திகள் கருதுகின்றன. இந்நிலையில் தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கையையும் அவர்களின் அவலத்தையும் இஸ்லாமிய ஒளியில் கண்டு அச்சமூகத்துக்கு ஆதரவான மனநிலையைக் கொள்வது சிறுபான்மைச் சமூகத்தின் கடமையும் தேவையும் ஆகும்.  ஒன்றிலொன்றாய்ப் பிரிக்கமுடியாத அடிமட்டச் சக்திகள் தங்களுக்குள் பிணைப்பைக் கொள்வதன்மூலமே பாதுகாப்பான வாழ்க்கை நிலையைப் பேண முடியும். இட ஒதுக்கீடு வசதி நீடிப்பதற்காக அனைவரும் ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயம்.