என்ன செய்யலாம்…?

நேற்று மஃரிப் தொழுகையை முடித்து விட்டு நகரில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளை ஒருமுறை சுற்றி வந்த பொழுது எல்லா பொதுநல மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் குறைந்தது இரண்டு முஸ்லிம் குடும்பங்களை பார்க்க நேர்ந்தது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் சமூகத்தில் இளம் நோயாளிகள் பெருகியுள்ளது பெரும் கவலையையும் எதிர்கால அச்சங்களையும் நம்முள் விதைக்கிறது.

சூழலியல் கேடுகள், பருவ நிலை மாற்றம், உணவு கலப்படம் போன்ற பொதுவான காரணங்களை சொல்லி தப்பிக்காமல் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய முக்கிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் உடல் வலிமை குறித்த அக்கறை மிகவும் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

நபிகள் நாயகம் ரசூல் (ஸல்) அவர்கள் உள்ளத்தின் வலிமைக்கு, இறை வணக்கங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தார்களோ, அதே அளவு முக்கியத்துவத்தை உடல் வலிமைக்கும் அளித்தார்கள் என்பது நாம் அனைவரும் சீராக்கள் மூலம் அறிந்தவையே.

என்ன செய்யலாம்…?

1. வீட்டில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு பள்ளிவாசல் மேல் தளத்திலும் உடற்பயிற்சி கூடங்கள் (Fitness Centres) உருவாக்கப்பட்டு சுபுஹு தொழுகைக்கு பிறகு ஒரு மணி நேர உடற்பயிற்சி வகுப்பை ஊக்குவிக்க வேண்டும்.

3.பிராய்லர் கோழி, மைதா, ரீபைண்டு ஆயில், வெள்ளைச் சர்க்கரை போன்ற உயிர்க் கொல்லிகளை முழுவதுமாக வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

4. ஒவ்வொரு முஸ்லிம் மஹல்லாவிலும் ஹிஜாபுடன் கூடிய (முழுவதும் மறைக்கப்பட்ட) பெண்களுக்கான பிரத்தியேக நடைபயிற்சி பூங்காங்கள் (Walking Parks) உருவாக்கப்பட வேண்டும்.

அதில் காலை மாலை நேரங்களில் நடைபயிற்சி மற்றும் பெண்களுக்கான ஒரு சில விளையாட்டுகளை நடத்தலாம். (உயிர் கொடுத்தல், நாடு பிரித்தல், ரிங் பால், கண்ணா மூச்சி போன்றவை)

5. வாய்ப்பு இருந்தால் வக்ஃப் நிலங்களில் / ஈத்கா மைதானங்களில் கைப்பந்து, இறகு பந்து, கபடி களம் போன்றவை அமைக்கப்பட்டு இளைஞர்களை அதிக அளவில் விளையாட்டுகளில் ஊக்குவிக்க வேண்டும்.

இவற்றை செய்தால் நம் சமூகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் உடல் பருமன், அஜீரணக் கோளாறுகள், PCOD போன்ற கொடிய நோய்களை ஓரளவு நம் சமூகத்தில் இருந்து களைய முடியும்.

எதிர்கால முஸ்லிம் சமூகம் தன் குடும்ப பொருளாதாரத்தில் பெரும்பங்கை கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை என்ற பெயரில் தொலைக்காமல் இருக்க இப்போதே நாம் விழிப்பது அவசியம்.

சமூகத்தை மீட்டெடுக்கும் ஆசையுள்ள மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளும் இளைஞர்களும் இதை நிச்சயம் செய்ய முன்வருவார்கள் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்ஷா அல்லாஹ் …….
இந்த முஸ்லிம் சமூகம் உலகை வழிநடத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை……!

– Peace Ismail
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்