இஸ்லாமும் சமூக நீதியும்

   

  பேரறிஞர் மௌலவி V.U.A யூசுப் அன்ஸாரி ஹளரத் அவர்கள்.

 

ஸ்லாம் இறைமார்க்கம். அறிவொளிரும் மார்க்கம். அனைத்துலக மக்களும் எளிதில் பின்பற்றத் தக்க எளிய மார்க்கம். உலக மக்களுக்காக அல்லாஹ் வழங்கி அதனை பொருந்திக் கொண்ட மார்க்கம், எல்லா காலங்களுக்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் பொது மார்க்கம். அனைத்து மக்களுக்குமிடையே சாந்தி சமாதானம் அன்பு அமைதி போன்ற பொற்குணங்களை உருவாக்கி உயிர் துடிப்புடன் இயங்கி வருகின்ற அருளியல் மார்க்கம்.

இப்படிப்பட்ட அருளியல் மார்க்கத்தை விட்டு விட்ட மனிதர்கள் தம் மனோ இச்சைக்கு அடிபணிந்து பிறரின் மீது ஆதிக்கம் செலுத்தும் போக்கு வளர்ந்து விட்டதனால் அவர்கள் பல பிரிவினர்களாகவும் வகுப்பினர்களாகவும் பிளவு பட்டு பிரிந்து விட்டனர். இப்பிரிவு வளர்ந்து பகையுணர்வையும், வன்முறை செயல்களையும் மேலோங்கச் செய்து விட்டது.

ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடைபிடித்து போதித்து வந்த இஸ்லாம் அவர்களிடையேயுள்ள பகையுணர்வையும், வன்செயல்களையும், குழப்பத்தையும் அகற்றி சகோதரத்துவ உணர்வை உருவாக்கி வளர்க்கத் தொடங்கியது. அது மட்டுமல்ல. மதப்பிரிவுகளின் வழியாக வந்த வேற்றுமைகளையும், உயர்வு தாழ்வுகளையும், பகையுணர்வுகளையும் அகற்றி அனைத்து மதத்தவர்களும் தத்தம் மத கலாச்சாரத்தின் படி செயல்படவும் உரிமை வழங்கி, அனைவரும் மனிதர்களே என்ற பரந்து விரிந்த மனப்பான்மையைத் தோற்றுவிக்கும் வகையில் மதச் சுதந்திரத்தை வழங்கியது.

இறைவன் கூறுகிறான். ” உங்கள் மார்க்கம் உங்களுக்கே. என் மார்க்கம் எனக்கே.”  மேலும் கூறுகிறான். ” மனிதர்களுக்கு இனியவற்றையே கூறுங்கள்.” என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனைத்து மக்களும் அல்லாஹ்வின் படைப்புகளே. அவர்களுக்கிடையே எக்காரணம் கொண்டு வேறுபடுத்தாமல் அனைவருக்கும் நன்மையே செய்யுங்கள்.” மேற்கூறிய இறைவசனங்களும் மாநபியின் மணிமொழியும் அருமையான உயர்கருத்துக்களைப் புலப்படுத்துகின்றன. அவை மதச் சுதந்திரம், மதங்களின் காரணமாக மக்களை வேறுபடுத்தாமல் அனைத்து மக்களுக்கும் நற்பணி புரிவது அவர்களுக்கு தீங்கிழைக்காமல் இருப்பது, இனியவற்றை கூறுவது போன்றவையாகும். எனவே மதங்களின் காரணமாக ஒருவருக்கு உதவுவது மற்றொருவருக்கு உதவாமல் இருப்பது நீதிக்கு புறம்பானதும் மனித தர்மத்திற்கு அப்பாற்பட்டதுமாகும்.

ஈராக் வெற்றி கொள்ளப்பட்ட போது அங்கு கிடைத்த செல்வங்களையும் பொருட்களையும் முஸ்லிம்களுக்கு மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறினர். அதற்கு அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் சினமடைந்து அச்செல்வங்களை அந்நாட்டு மக்கள் யூதர்கள் கிருஸ்தவர்கள் உள்பட அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமென்று கூறி அதனை சட்டமாக்கினார்கள்.

இஸ்லாமிய வானிலிருந்து பொழிந்த பேரமுதைப் பருகி இன்புற்ற அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் தம் ஆட்சியில் அனைத்து மதத்வர்களையும் சமமாக நீதியாக நடத்தினார்கள் என்பதற்கு மேற்கண்ட வரலாற்று நிகழ்ச்சி தக்க சான்றாகும். அவர்களுடைய வரலாற்றில் சகோதர மாற்று மதத்தவர்களிடம் எத்துணை அன்பும் இரக்கமும் காட்டி வந்துள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் பல காணப்படுகிறது.

ஒரு சமயம் உமர் (ரலி) அவர்கள் திமிஷ்க் நாட்டிற்கு சென்ற போது அங்கு உடல் ஊனமடைந்த கிருஸ்தவர் ஒருவரை கண்டார்கள். அப்போது அவரிடம்  ” உனக்கு ஆடையும் உணவும் வழங்க ஒருவரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையா..? ” ஸஎனக் கேட்டார்கள். அதற்கவர் அப்படி எவரும் எனக்கில்லை என்று கூறினார். உடனே ஹழரத் உமர் (ரலி) அவர்கள் தங்களுடைய அதிகாரிகளை நோக்கி “இவருடைய உணவுக்கும் உடைக்கும் தேவையான செல்வத்தை இவர் உயிருள்ளவரை  தர்ம நிதியிலிருந்து கொடுங்கள் என கட்டளையிட்டார்கள்.

மற்றொரு சமயம் வயது முதிர்ந்த யூதர் ஒருவர் யாசகம் கேட்டுக் கொண்டிருப்பதை அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் கண்டு நீங்க  ஏன் யாசகம் கேட்கிறீர்கள்…? உனக்கு உணவுக்கு ஏதும் வழி இல்லையா..? எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர் எனக்கு உணவுக்கு எதுவும் இல்லை என்பதாலும் பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியதிருப்பதாலும் அவசிய தேவைகளிருப்பதனாலும் நான் யாசகம் கேட்கும் நிர்பந்ததிற்கு உள்ளானேன். என்று கூறினார்.

இதை கேட்ட அமீருல் முஃமினீன் அவர்கள் அவரை தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று அவருக்கு தேவையான பொருட்களை கொடுத்து இனிமேல் நீ பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியதில்லை என்று கூறி அவரை அனுப்பி விட்டு பள்ளிக்கு விரைந்து சென்று மிம்பரில் ஏறி நின்று தம் தோழர்களை நோக்கி ” வயது முதிர்ந்து உணவுக்கு வழியில்லாதவர்கள் எம் மதத்தை சார்ந்தவர்களாயினும் அவர்களிடமிருந்து பாதுகாப்பு வரி வசூலிக்கத் தேவையில்லை. அவர்களுக்கு அவர்களுடைய உணவுக்கு தர்ம நிதியிலிருந்து உதவித் தொகை வழங்க வேண்டும்.”  என்று உரத்த கு(ரலி)ல் கூறினார்கள்.

இன்னொரு சமயம் பைத்துல் முகத்தஸ் என்ற புனித நகரைப் பெறுவதற்காக அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் அங்கு சென்றிருந்த போது கிருஸ்தவ ஆலயமொன்றை அடைந்தார்கள். அப்பொழுது தொழுகைக்குரிய நேரம் வந்துவிட்டது. அவர்களை அழைத்துச் சென்ற கிருஸ்தவ அறிஞர்கள் ” இங்கேயே தாங்கள் தொழுது கொள்ளலாம்.”  எனக் கூறினார்கள்.

அதற்கு அமீருல் முஃமினீன் அவர்கள் “இது உங்களுடைய ஆலயம். இங்கு நான் தொழுது முன்மாதிரியொன்றை காட்டி விட்டால் அது பிற்காலத்தில் பல தீய விளைவுகளை உண்டாக்கி விடுமென்று அஞ்சுகிறேன். என கூறி விட்டு அங்கிருந்து அகன்று பொது இடத்திற்கு சென்று தொழுகையை நடத்தினார்கள்.

இப்படி எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர் உடல் ஊனமுற்றவராகவோ அல்லது முதுமை அடைந்தவராகவோ இருந்தால் அவர்களுக்கு உதவித் தொகை அளித்து அவர்களுடைய வாழ்வை இஸ்லாம் மேன்மை அடைய செய்திருக்கிறது. சகோதர மற்றும் மாற்று மதத்தவர்களுடைய வழிபாட்டு ஸ்தலங்களுக்கு தீங்கு நேரா வண்ணம் பாதுகாத்திட வகை செய்திருக்கிறது. மாற்று மதத்தவர்களிடம் இத்துணை கருணையோடு நடந்து கொள்ளும் வாய்ப்பினை வேறெந்த மதத்திலும் காண முடியாது.

யூதர், கிருஸ்தவர் அல்லது வேறு எந்த மதத்தை சார்ந்தவர்களாட்டும் அனைவருக்கும் தாராள மதச்சுதந்திரம் வழங்கி அனைவருடைய வறுமையையும், பிணியையும் அகற்றி அனைவரையும் அமைதியெனும் பூங்கட்டிலில் துயில் கொள்ள செய்தது இஸ்லாம். ஏழைகள், அநாதைகள், வழிப்போக்கர்கள், அபலைகள் ஆகியோரின் வாழ்வை உயர்த்திட இஸ்லாம் பெரிதும் முயன்றிருக்கிறது.

ஒருவர் பசியுடன் இருக்கையில் மற்றொருவர் வயிறு புடைக்க உண்ணுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு மஹல்லாவில் வசிப்பவர்களில் ஒருவர் பசியுடன் இருக்கையில் அதனை அகற்ற மற்றவர் முயற்சிக்காவிட்டால் அல்லாஹ்வினுடைய பொறுப்பு அவர்களை விட்டும் அகன்று விடுகிறது.

இம்மணி மொழி வறுமையை அகற்ற ஊக்கமளிக்கிறது. ஸஹாபா பெருமக்கள் அவர்களுடைய வழித்தோன்றல்கள் தம் செல்வங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதனால் தர்மம் வழங்கும் மக்கள் பெருகினார்கள். தர்மம் வாங்கும் மக்கள் குறைந்தார்கள்.

யஹ்யா ப்னு ஸஅது (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ” உமர் ப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஆப்ரிக்கா நாட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற தர்ம நிதிகளை ஏழைகளுக்கு வழங்குமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அந்நிதிகளை எடுத்துக் கொண்டு ஏழை எளியவர்களை நெடுகிலும் தேடி அலைந்தேன். எங்கும் ஏழைகளை காண முடியாததால் அந்நதிகளை கொண்டு வந்து உமர் ப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்களிடமே கொடுத்தேன். அவர்கள் அவற்றை பெற்றுக் கொள்ளாமல் அடிமைகள் எங்கேனும் காணப்பெறின் அவர்களை இவற்றை கொடுத்து உரிமை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.

இவ்வாறு அவர்களிடையே வறுமை நிலை ஒழிந்து அனைவரும் சமநிலை பெற்றிருந்தார்கள். பொருளாதார சமநிலையும் அவர்களிடையே ஓங்கியது. ஒருவருக்கொகுவர் உதவிடும் பெரும் பண்பு வளர்ந்தது. அனைவரும் சகோதர உணர்வோடு வாழத் தொடங்கினர். இதனால் அன்பு அரும்பி மலர்ந்து அநீதி அருள் ஒழிந்தது. எவரும் துன்புறவும் எவருக்கும் துன்பம் கொடுக்கவும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

எனவே இஸ்லாம் அன்பு மார்க்கம். அருள் மார்க்கம். துயர் துடைக்கும் ஒப்பற்ற மார்க்கம். எளியவரை ஏற்றம் காணச் செய்திடும் மேலான மார்க்கம். மனிதர்களுடைய உடமைகளுக்கும் உயிர்களுக்கும் பாதுகாப்பளிக்கும் உன்னதமான மார்க்கம்.

மதினாவின் எல்லை பகுதியில் பயணிகள் கூட்டம் ஒன்று இரவு தங்கியிருந்தது. அக்கூட்டத்தில் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் முதலானோர் இருந்தனர். அவர்கள் பயண களைப்பு மிகுதியால் அயர்ந்து உறங்கி விட்டனர். இரவு வலம் வந்த அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் அங்கு வந்த போது குழந்தையொன்றின் அழுகுரலைக் கேட்டார்கள். அக்குரலை கேட்ட அமீருல் முஃமினீன் அவர்கள் அக்குரல் வந்த திசையை நோக்கிச் சென்றார்கள்.

அங்கு ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதை கண்டு அக்குழந்தையின் தாயிடம் “உன் குழந்தையின் மீது இரக்கம் கொண்டு அதனை அமைதிபடுத்தி துயில் கொள்ளச் செய்”  என்று கூறி திரும்பி வந்தார்கள். சிறிது நேரம் சென்ற பின் அக்குழந்தை மீண்டும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கியது. இதனை செவியுற்ற அமீருல் முஃமினீன் அவர்கள் மீண்டும் வந்து அத்தாயிடம் ” இன்னும் உன் குழந்தையின் அழுகையை அமர்த்தவில்லையா.? அதன் மீது அன்பு கொண்டு அதன் அழுகையை நிறுத்தக் கூடாதா.? உனக்கென்ன இரக்கமில்லையா.?”  என கடிந்து கூறிவிட்டு சென்றார்கள்.

ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு அக்கூட்டத்தையும் அந்த உடமைகளையும் பாதுகாக்கும் முறையில் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் அக்குழந்தை அகோர சப்தமிட்டு வீரிட்டு அழத்தொடங்கியது. உடனே உமர் (ரலி) அவர்கள் ஆத்திரம் அடைந்து அத்தாயினருகே சென்று “நீ கடின மனம் உடைய தாயாக இருக்க கூடும். குழந்தையின் மீது இரக்கம் காட்டாது அது அலறி துடித்தழுவதை எப்படித்தான் சகித்துக் கொண்டிருக்கிறாய்…? உனக்கு இரக்கம் இல்லையா..?” என்று சினந்துரைத்தார்கள்.

இக்கடுஞ் சொற்களைக் கேட்ட அத்தாய் பொறுமை இழந்து “நீ யார் என்னை இவ்வாறு கடிந்துரைக்கின்றீர். என் குழந்தைக்கு நான் பால்குடி மறக்கடிக்கிறேன். அதனால் இக்குழந்தை அழுகிறது. எனது இக்குழந்தை பால்குடி மறந்த பிறகு உதவி நிதி தருவதாக அமீருல் முஃமினீன் அவர்கள் சட்டம் இயற்றியிருக்கிறார்கள். எனவே அந்த நிதியை நான் பெறவேண்டுமாயின் என் குழந்தையை பால் மறக்கடிக்கச் செய்வது அவசியம்.” என்று தன் எதிரில் நிற்பது அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் என்பதை அறியாது வேகமாக கூறினாள்.

ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் தன்னை யாரென அப்பெண்ணுக்கு புலப்படுத்தாமல் ” இக்குழந்தைக்கு பால்குடி மறக்க்கூடிய வயது இன்னும் ஆகவில்லையே, அதற்குள் அவசரப்பட்டு நீ ஏன் பால்குடி மறப்பதற்கு முயற்சிக்கின்றாய்.? ” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்” ஏழைகளாகிய நாங்கள் அரசு தருகின்ற உதவி நிதியைக் கொண்டே பயனடைந்து வருகிறோம்.” என்று கூறினாள். “அவ்வாறாயின் அக்குழந்தை நலிந்து போகாதா..?  பலமிழந்து போகாதா..? என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அப்பெண் நாங்கள் என்ன செய்ய முடியும்..? நாங்கள் ஏழைகள் அரசு நிதிகளை எதிரிபார்ப்பவர்கள், ஆட்சி நடத்தும் அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் தம் குடிமக்களின் தேவைகளை அறிந்து நடவடிக்கை எடுப்பது அவரது பொறுப்பல்லவா..? என்று கூறினாள். இதனை கேட்ட உமர் (ரலி) அவர்கள் மிக கவலையடைந்து கண் கலங்கியவாறு அவ்விடத்தை விட்டு பள்ளிக்கு வந்தார்கள். அவர்களுக்கு உறக்கம் வரவில்லை. அமைதியிழந்தார்கள். நாமியற்றிய சட்டத்தால் எத்தனை குழந்தைகள் நலிந்திருப்பார்கள்…?மெலிந்திருப்பார்கள்..? என்று எண்ணிய போது கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வடிந்தது.

அன்று காலை சுபுஹ் தொழ வைத்தார்கள். அவர்களால் ஓத முடியவில்லை. தேம்பி தேம்பி அழுதார்கள். விரைவாக தொழுகையை முடித்து விட்டு மக்களை நோக்கி பால்குடி மறந்த குழந்தைகளுக்கு தான் உதவி நிதி கிடைக்கும் என்ற சட்டத்தினால் உமர் எத்தனை குழந்தைகளை மரணத்தின் விளிம்பில் தள்ளியிருப்பார்கள். அந்தோ நான் மிகுந்த வேதனையடைகிறேன். அனைத்துலகங்களையும் ஆளுகின்ற பேரரசனாகிய அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருகிறேன். இன்று முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நூறு திர்ஹம்கள் உதவி நிதியாக வழங்கப்படும். மேலும் தேவையானால் உதவி நிதி இருநூறு திர்ஹம்கள் வரை உயர்த்தப்படும். இந்நிதியைக் கொண்டு அக்குழந்தைகளை பராமரிக்க வேண்டும். என்று சட்டம் இயற்றினார்கள்.

இப்படி அவர்களுடைய பொருட்களையும் உடமைகளையும் பாதுகாத்து அவர்களுடைய இன்னல்களை அகற்றி அவர்களிடையே சமத்துவத்தையும் ஏற்ற தாழ்வற்ற ஒருமை நிலையையும் உருவாக்கி அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் ஒரே சகோதரர்கள் என்ற அற்புதமான நிலையை உருவாக்கிய மார்க்கம் இஸ்லாம். சகோதரத்துவ உணர்வை அனுபவ ரீதியில் பிரத்தியட்சமாக நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது மெய்யான மார்க்கம் இஸ்லாம். தினமும் ஐவேளை தொழுகைகளில் இந்நடைமுறையை இயற்க்கையாகவும் நேர்மையாகவும் காண முடிகிறது.

அவர்களில் அரசன், ஆண்டி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், கருப்பன், வெள்ளையன் அனைவருமே சமம். அவர்களுக்கிடையே எவ்வகையிலும் வேறுபாடில்லை. அவர்களில் யாரும் எவரை விடவும் உயர்ந்தவர்களல்ல. அவர்கள் அனைவரும் இஸ்லாம் என்ற பொற்கம்பியில் கோர்க்கப்பட்ட மணிகளாவார்கள்.

போரறிஞர் “லார்டு ஹத்லி” என்பவர் கூறுகின்றார். “இஸ்லாம் சந்தேகத்திற்கிடமின்றி சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மக்களிடையே பரப்பி விட்டிருக்கிறது.எனவே அது அனைத்துலகையும் ஆட்சி கொண்டுவிடும்” பிரஞ்சு நாட்டு பேரறிஞர் மாரிஸ் என்பவர் அறுதியிட்டு கூறுகின்றார்.”வான் மறை அல்குர்ஆன் உயரிய வேதம் மனித சமுதாயத்தை உயிர்பிப்பதற்காக கடவுளிடமிருந்து அருளப்பெற்ற மாபெரும் வேதம். உண்மையான சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை மிகத்துல்லியமாக எடுத்துரைக்கின்றது. மானிட முன்னேற்றத்தையும் உயர்வையும் போதிக்கிறது. உலக நாடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய நிழலில் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதன் நாகரீகமும் கலாச்சாரமும் நிலையானவை.

மற்றொரு அறிஞர் கூறுகிறார். “இஸ்லாம் அறிவை அடிப்படையாக கொண்டு அமையப் பெற்றது. அதனை ஏற்கிற ஒவ்வொருவரும் அறிவுப் பாதையில் சென்று பரோபகாரம் அரும்பணி ஆகியவற்றை மேற்கொள்ளுகின்றனர். அது இம்மையும், மறுமைகுரிய மார்க்கம் தீய சக்திகளை ஒழித்துக் கட்டும் தூய மார்க்கம்.”

إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۗ وَمَن يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக(இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

எனவே இஸ்லாம் உலகம் உள்ளளவும் கதிரவன் ஒளி உள்ளளவும் நிலைத்து நிற்ககூடிய ஜீவ மார்க்கம். இதனை எதிர்ப்பவர்கள் தம் வாயால் ஊதி அதை அனைத்துவிடப் பார்க்கிறார்கள். ஆனால் அல்லாஹ் தன் ஒளியை உலகெங்கும் பிரகாசிக்கச் செய்து கொண்டிருக்கிறான்.