இஸ்லாமிய வணிகவியல்- தொடர் 1

 

மோசடி வணிகம் கூடாது

அபூ ஸயீத்(ரலி) அறிவிக்கிறார்கள்: பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை (உயர்தரமான பேரீத்தம்பழம்) ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு (மட்டரகமான பேரீத்தம்பழம்) என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது;  இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!’ என்று கூறினார்கள். (புகாரி- 2080)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முன்னறிவிப்பு) செய்தார்கள். (புகாரி- 2083)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வியாபார முறைகள் இரண்டையும் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் எங்களுக்குத் தடை செய்தார்கள். வியாபாரத்தில் தொடுமுறை வியாபாரம் (முலாமசா), எறிமுறை வியாபாரம் (முனாபதா) ஆகிய இரண்டையும் தடை செய்தார்கள். தொடுமுறை வியாபாரம் (“முலாமசா”) என்பது, இரவிலோ பகலிலோ (துணி வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தமது கரத்தால் தொடுவதாகும். விரித்துப் பார்க்காமலேயே தொட்டதோடு வியாபாரத்தை முடித்துக் கொள்வதாகும். எறிமுறை வியாபாரம் (முனாபதா) என்பது, ஒருவர் மற்றொருவரை நோக்கித் தமது துணியை எறிய, மற்றவர் இவரை நோக்கித் தமது துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார (ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும். (முஸ்லிம் – 3032)

அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அறியாமைக் கால மக்கள் ஹபலுல் ஹபலாவுக்காக – சினை ஒட்டகம் குட்டி ஈன்று, அந்தக் குட்டி சினையாகிப் பெற விருக்கும் குட்டிக்காக – ஒட்டகத்தின் இறைச்சிகளை விற்கவும் வாங்கவும் செய்தனர். அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய வியாபாரம் செய்யக் கூடாது என மக்களுக்குத் தடை விதித்தார்கள். (முஸ்லிம் – 3035)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம். தம் சகோதர இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, (குறுக்கிட்டு) மற்றவர் வியாபாரம் செய்யவேண்டாம். (கிராமத்திலிருந்து (விற்பனைச் சரக்கு கொண்டு வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்று கூறினார்கள். (முஸ்லிம் – 2761)

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) மற்றும் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா”வைத் தடை செய்தார்கள். (அதாவது) மரத்திலுள்ள உலராத கனிகளை உலர்ந்த (பறிக்கப்பட்ட) கனிகளுக்குப் பதிலாக விற்பதைத் தடை செய்தார்கள். (முஸ்லிம் – 3099)

வணிகப் பேரத்தின் போது பொய் சத்தியம் செய்யலாகாது

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்:

‘ஒருவர் கடை வீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பினார்; அப்போது அவர் (கொள் முதல் செய்யும்போது) கொடுக்காத (பணத்தைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்; முஸ்லிம்களைக் கவர்ந்து அவர்களிடம் தம் பொருளை விற்பனை செய்வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது ‘தங்களின் உடன்படிக்கை மூலமும் சத்தியங்களின் மூலமும் அற்பக் கிரயத்தைப் பெற்றுக் கொள்கிறவர் என்னும் (திருக்குர்ஆன் 03:77)  இறைவசனம் அருளப்பட்டது!’ (புகாரி – 2088)

வணிகம் செய்யும் போது தேவையில்லாமல் அடிக்கடி சத்தியம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அந்தச் சத்தியம், ஒன்று பொய்ச் சத்தியமாக இருக்கலாம். அது தடை செய்யப்பட்ட ஒன்று (ஹராம்) என்பதுதெளிவு. அல்லது சத்தியம் உண்மையாகவே கூட இருக்கலாம். ஆனால், அதையேஅடிக்கடிசெய்யும்போது, பொய்ச் சத்தியம் செய்வதற்கு அது வழி வகுத்து விடலாம். (ஃபத்ஹ{ல்பாரிஇதக்மிலா)

வாங்கும்போது பொருட்களை அளந்து கொள்ளுங்கள்

மிக்தாம்பின்மஃதீகரிப்அறிவித்தார்: உங்கள் உணவுகளை அளந்து கொள்ளுங்கள், உங்களுக்கு பரக்கத் (அருள் வளம்) செய்யப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி- 2128)

ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பார்கள். பொதுவாக உணவுப் பொருட்களை பயன்படுத்தும் போது, அதை அளந்து கொள்வது நல்லது. அவ்வாறு அளந்து பயன்படுத்தும் போது தான் கணக்கு தெரியும். திட்டமிட்ட நாட்கள் வரை இருப்பு இருக்கும். அளக்காமல் போட்டால் தேவைக்கு அதிகமாகப் போய், பின்னால் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அல்லதுவிரயமாகக்கூடும். அத்துடன் அளந்து போடும் போது, அல்லாஹ்வின் பெயர் கூறுவோம். அதுவும் பரகத்திற்குக் காரணமாகும். (ஃபத்ஹ{ல்பாரி)

நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்களின் பழக்கத்தில் இருந்த இரு அளவைகள் ‘ஸாஉ’ மற்றும் ‘முத்து’ ஆகியவை ஆகும். ‘ஸாஉ’ என்பது இன்றைய 2.135 கி.கிராம் எடை கொண்ட நிறுத்தலளவை ஆகும். முகத்தளலவையில்‘ஸாஉ’என்பது, 2.360 லிட்டர் கொண்டதாகும். அவ்வாறே ‘முத்’து என்பது 533 கிராம் கொண்ட நிறுத்தளலவை ஆகும். இதன் முகத்தளலவை 586 மி. லிட்டர் ஆகும்

பிற்காலத்தில் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களது காலத்தில்‘ஸாஉ’ என்பது 2.135 கி.கிராம் எடை கொண்டதாக இருந்தாலும், ‘முத’துஎன்பது 1600 கி.கிராம் எடையாக மாறியது. இராக்கியர் வழக்கில் ‘ஸாஉ’ என்பது, 3.150கி.கிராம் எடை கொண்டதாகவும், ‘முத்’துஎன்பது 796.68 கிராம் எடை கொண்டதாகவும் இருந்தன.

எனவே, இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள வணிகத்தை செய்து நமது பொருளாதாரத்தை மேம்படுத்தி எல்லா வளங்களையும் பெற்று வாழ் வாங்கு வாழ வல்ல அல்லாஹ் அருள்புறிவானாக! ஆமீன்  யாரப்பல் ஆலமீன்!

 

மவ்லானா, A. முஹம்மது ஹனிப் ஜமாலி M.A., M.Phil. மலேசியா