இறைநேசர்கள்

 

இறைநேசர்கள்

 

றைநேசர்கள்

‘கலிமா’ வின்

கல்வெட்டுக்களே

வலிமார்களாக

வாழ்பவர்கள்!

அந்த

இறைநேசர்கள் –

‘கப்ர்’ கப்பல்களாக

அருட்கடலில் மிதந்து கொண்டு

நயணங்களுக்குப்

புலப்படாமல்

நங்கூரம் போல்

உயிர் வாழ்பவர்கள்!

பச்சை நிறமாக இருந்தால் –

பட்டென்று சொல்லிவிடலாம்.

காய்த்தவை யாவுங்

காயென்று!

ஆனால்.

பச்சை வாழைப்

பழமட்டும் விதிவிலக்கு!

அதுபோல் –

மானிடருள் –

மூச்சறுந்த மறுகணம்

முடிவுகட்டி விடலாம்.

பிணமென்று!

ஆனால்.

இறைநேசர்கள் மட்டும்

இதற்கு விதிவிலக்கு!

 

அக்னி அணைந்திருந்தாலும்

நீறு பூத்திருக்கும்

நெருப்பைப் போல் –

காண உயிரணைந்தாலும்

கப்ருக்குள் வாழ்பவர்கள்!

இவர்கள் –

வாழுங் காலத்தில்

இறந்தவர்கள்:

எனவே தான்

இறந்த பின்னும்

அவர்களை

வாழச்செய்கின்றான்.

வல்ல இறைவன்!

உறக்கத்திற்கு

உள்ளறையும்

ஓய்வுக்கு

வெளிமுற்றமும்

ஒதுக்கப்பட்டது போல் –

துதிப்பதற்காகப்

பள்ளிவாசல்களும்.

இறை நேசர்களை

மதிப்பதற்காகத்

தர்காக்களும்

தலையாயாயின!

தூய இறைவனின்

தொடர்புக்கு –

பள்ளிவாசல்கள்

தொலைபேசியகமென்றால் –

தர்காக்கள்

தபால் பெட்டிகள்!

பட்டாம் பூச்சிப்

பகட்டை வெறுத்துக்

கூட்டுப் புழுவாகத்

தங்களைக்

குறுகிக் கொள்வோரே

குன்றா இறை நேசர்கள்!

அற்புதம் மட்டுமே

இறைநேசர்கும்

அடையாளமென்று!

தவிர்க்க முடியாமல் ஏந்தும்

தற்காப்பு ஆயுதம் போல்

விருப்பமின்மைக்கிடையே

வெளிப்படுபவைதாம்

இறைநேசர்தம்

அற்புதங்கள்!

இறைநேசர்கள்

அடியாருள் அடியாராய்த்

தம்மை

அடிக்கல்லாக்கிக்

கொண்டதனால்தான்

படிக்கல்லாய்ப்

பாராட்டப்படுகின்றனர்!

                                              தத்துவக் கவிஞர்

                                                  இ. பதுருத்தீன்