இறைத்தூதரின் இயற்கை மருத்துவம்

புதிய தேனின் பொதுவான குணங்கள்:  குடல் புண்களைக் குணமாக்கும்.  தொண்டையில் பின்னிப் பின்னிக் கஷ்டப்படுத்தும் கோழையை வெளியேற்றும் பசியை அதிகரிக்கும்.  இயல்பான உறக்கத்தைத் தரும்.  மலச்சிக்கலை நீக்கும், உடல் பலத்தை அதிகரிக்கும்.

இதயம், இரைப்பை, நுரையீரல் கல்லீரல் முதலான ராஜ உறுப்புக்களைத் திடப்படுத்தித் திறனூட்டும் தகுதி தேனுக்கு உண்டு.

பாலுடன் தேனைக் கலந்துப் பருகிவந்தால் மூளை பலமடையும், நினைவாற்றல் பெருகும் தேகச் சூட்டைச் சமப்படுத்தும்.

இளஞ்சூடான வெந்நீரில் தேனைக் கலந்துப் பருகிவந்தால் அளவுக்கு மிஞ்சிய உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.  இதே தேனைக் குளிர்ந்த நீருடன் கலந்துப் பருகிவந்தால் சதைப் பிடிப்பில்லாமல் இருக்கும் தேகத்தின் எடை அதிகரிக்கும்.

ஆரஞ்சுப் பழச்சாறுடன் தேன் கலந்துப் பருகினால் தோல் நோய்கள் மறையும்.

தக்காளிச் சாற்றுடன் தேன் கலந்துப் பருகினால் கல்லீரல் ஆரோக்கியம் அடையும்.

தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்துப் பருகினால் வயிற்றுப் புண்கள் வாய்ப்புண்கள் விலகும்.

தீக்காயத்திற்குத் தேனை தடவினால் உடனேயே எரிச்சலும் வேதனையும் அடங்கும்.  நல்ல ஆறுதல் கிடைக்கும்.

சளி, இருமல், மூச்சிரைப்பு, விக்கல், வெப்பம் இவற்றை மலைத்தேன் குணப்படுத்துவதுடன், வாதம் பித்தம் கபம் ஆகிய முத்தோஷங்களின் ஏற்ற தாழ்வுகளையும் சமப்படுத்தும்.

அரோசிகம், குமட்டல், வாந்தி, மந்தம் சோர்வு இவற்றையெல்லாம் கொம்புத்தேன் போக்கும்.

புண், கரப்பான், தோல் நிறமாற்றம், புழுவெட்டு, பூச்சிக்கடி இவற்றை மலைத்தேன் மாற்றுவதுடன், இருமல் சளியையும் அகற்றி பசியை அதிகரிக்கும்.

படுக்கையில் சிறுநீர்க் கழிக்கும் பிள்ளைகளுக்குத் தேனுடன் கொஞ்சம் நீர்க்கலந்து இரவில் கொடுத்து வந்தால் படிப்படியாக இந்தக் குறை நீங்கிவிடும்.

எந்தத் தேனாக இருந்தாலும் பழையதாகிவிட்டால் அதன் மருத்துவக் குணத்தில் மாறுபாடு ஏற்படும் என்பதால் புதிய தேன் தான் சிறந்ததாகும்.

மகத்துவமிக்க மதீனா மண்ணில் விளையும் அஜூவா இனப் பேரீத்தம் பழங்களில் ஏழு பழத்தைத் தினமும் காலையில் உண்டுவந்தால் விஷத் தீண்டுதல்களிலிருந்தும், நச்சின் தீமைகளிலிருந்தும், மந்திரம் சூனியம் முதலான கெடுதல்களிலிருந்தும் பாதுகாப்பைப் பெறலாம். மட்டுமின்றி பல நோய்களுக்குரிய நிவாரணமும் அதில் இருக்கிறது, என்ற நபிமொழியை இப்னு அப்பாஸ்(ரளி)அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

‘பேரீத்தம் பழ வகைகளில் சிறியதாகவும், சிறந்ததாகவும் இருக்கும் பர்னி வகைப் பேரீத்தம் பழம் வயிற்று வலியை உடனேயே போக்கிவிடும்’ என்ற நபிமொழியை ஹள்ரத் அபூபக்கர்(ரளி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பேரீத்தம் பழத்துடன் வெள்ளரிக்காயைச் சேர்த்து உண்ணும் பழக்கமும் பெருமானர்(ஸல்) அவர்களிடம் இருந்தது. ‘இந்த முறைப்படி  உண்பவர்களின் உடல் குண்டாகிவிடும்’ என்று தங்களையே உதாரணமாக்கி, அன்னை ஆயிஷா(ரளி)அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

‘ஏழு பேரீத்தங்காய்களைக் கொட்டையுடன் சேர்த்து இடித்து உண்டால் நெஞ்சுவலி நீங்கிவிடும்’  என்பது நாயக நல்வாக்காகும்.

பேரீத்தம் பழமும், வெண்ணெயும் சேர்த்து உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால் உடல் பலம் பெறுவதுடன் வசீகர வனப்பும் அதிகரிக்கும்.

தர்பூசணியுடன் பேரீத்தம் பழத்தைச் சேர்த்துச் சாப்பிடலாம் அது, தேகச் சூட்டைச் சரியான அளவில் வைத்துக் கொள்வதற்குப் பெரிதும் உதவும்.

குழந்தைகளின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியும் பேரீத்தம் பழம், வாயு மற்றும் சளித் தொல்லைகளையும் போக்கும்.  ஆண்மை ஆற்றலை அதிகப்படுத்தும்.

மருதாணியின் மருத்துவ குணங்களை அறிவித்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள், குளுமையினால் ஏற்படும் தலைவலிக்கு மருதாணி இலையை அரைத்துப் பற்றுபோடச் சொல்வார்கள். தானும் செய்திருக்கிறார்கள்.

மருதாணியால் பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்ளவும், ஆண்கள் தங்கள் தலைமுடி மற்றும் தாடியில் நிறமேற்றிக் கொள்வதற்கும் கோமான் நபி(ஸல்)அவர்கள் அனுமதி தந்திருக்கிறார்கள்.

கட்டுபப் படுத்த முடியாத வகையில் அதிகமாக சிறுநீர் கழிப்பவர்கள் மருதாணி இலையை ஒரு சிறு நெல்லிக்காய் அளவில் அரைத்தெடுத்த விழுதைக் காய்ச்சிய பசும்பாலுடன் கலந்துக் குடித்து வந்தால் மூன்றே நாளில் நல்ல குணம் கிடைப்பதை காண்பார்கள்.  ஒவ்வொரு நாளும் புதிதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

சீதள உடம்புடையவர்களுக்கு மருதாணி மருந்தால் ஜன்னி வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால், மருந்தாக உண்ணும் மருதாணியின் அளவு மிகைத்து விடாமல் கவனமாகக் கையாள வேண்டும்.

பாதங்களில்  எரிச்சல், உள்ளவர்கள் மருதாணி இலையுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து பற்றிட்டு வந்தால் ஒரு வாரத்தில் எரிச்சல், எட்டா தூரத்திற்குச் சென்றுவிடும்.

ஒரு கைப்பிடி மருதாணி இலையுடன் ஒருதுண்டு மஞ்சளையும், ஒருத் துண்டு வசம்பையும் சேர்த்து நன்றாக அரைத்து இரவில் படுக்கும் வேளையில் கால் ஆணிகளின் மேல் பற்றுப் போட்டு வெற்றிலையை அடுப்பில் வாட்டி அதன் மேலே வைத்துக் கட்டிவிட வேண்டும்.  காலையில் அவற்றை நீக்கிவிடலாம்.

இவ்வாறே மூன்றே வாரம் தொடர்ந்து செய்தால் கால் ஆணி என்னும் பிரச்சனை முற்றிலுமாக நீங்கிவிடும்.

நிலரையும், சுக்கும் பாதமில்லாத மலமிளக்கியாகப் பயன்படும்’ என்பது நன்னபிச் சொல்லாகும்.

‘பறங்கிப் பட்டையைத் தண்ணீர் அல்லது எலுமிச்சைச் சாற்றால் உரைத்து அந்தக் குழம்பை நகச்சுற்றியில் பற்றுப் போட்டால் அது குணமாகிவிடும்’ என்பது நபிகளின நல்லுரையாகும்.

புதினா, வெந்தயக்கீரை முதலான கீரைகளையும் காத்தமுந் நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தியதுடன், அவற்றின் குணநலன்களையும் அறிவித்தார்கள்.

‘மகத்துவமிக்க மரத்தின் எண்ணெய்’ என்று ஜெய்த்தூன் எனப்படும் ஆலிவ் எண்ணெய்யைத் தலையில் தேய்த்தால் முடிகொட்டல் நிகழாது என்பதால் ஆப்ரிக்கப் பெண்களிடம் இந்த வழக்கம் இருந்து வருகிறது.

கருஞ்சீரகத் தூளை ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து உடலில் பூசிவந்தால், தேக மினுமினுப்பு அதிகரிக்கும் கருப்பாக இருப்பவர்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் நிறம் மாற்றம் கண்டுமகிழ்வார்கள்.

தொழுகையும் நோன்பும் மருந்துகள் தான் உள்ளத்தையும், உடலையும் பரிசுத்தப்படுத்தும் மருந்துகள்.

உறக்கமும் மருந்துதான்.  களைப்படையும் உடலுக்குப் புத்துணர்வூட்டும் மருந்து, அதனால்தான் உறக்கம் இறையருள் என்று சொன்ன இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உறக்கத்தின் ஒழுங்குகளையும் விரிவாக விளக்கியுள்ளார்கள்.

நோய்களோடு உறவாடாத எந்த மனிதரும் இல்லை என்பதால் நோய்களுக்கான மருந்துகளையும் மாநபி(ஸல்) அவர்கள் அறிவித்து மனிதக்குலத்தின் நலம் நாடினார்கள்.

தமிழகத்தைச் சார்ந்த பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான இராமதேவர், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை பெருமைகளை அறிந்து மதீனா சென்று மாநபியவர்களைக் கண்டு ஈமான் கொண்டார்.

இஸ்லாத்தின ஒளியை வாழ்வியல் நெறியாய் ஏற்றுக் கொண்ட அவர் யாக்கூப் என்ற பெயரில் பரிணாமம்மடைந்தார்.

அகிலமெலாம் போற்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அன்புக் கட்டளைக்கு அப்போதே அடிபணிந்து தானறிந்தத் தமிழ் மருத்துவத்தைப் பதினெட்டு சாஸ்திரங்களாக உருவாக்கினார். அதுவே ‘யாக்கோற மருத்துவம்’ என்று வழங்கப்படுகிறது.

தன்னைத் தேடிவந்த தானவனருகில் ஐக்கியமான தமிழ்ச் சித்தரின் தகுதிமிக்க மருத்துவ அறிவையும் இந்தத் தரணிக்குத் தாஹா நபி(ஸல்) அவர்கள் தரச் செய்தார்கள்.

வள்ளல் நபிகளாரின் அத்தனை வழிகாட்டலையும் அப்படியே பின்பற்றுவதுடன், சிந்தனை ஒழுக்கம், நாவொழுக்கம் ஆகிய வாழ்நிலையின் வழித்தடங்களில் எல்லாம் ஒழுக்க ஒளிபாய்ச்சி நடந்தால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

அத்துடன், இஸ்லாம் கூறும் கடமைகளையும் கருத்தோடு காப்பாற்றி, ஏவல் விலக்கல்களை நிறைவேற்றி மாசற்ற மனத்தோடு இறைவனைத் துதித்தேற்றிக் கொண்டிருந்தால் வாழ்வுக் கப்பல் மகிழ்ச்சிக் கடலில் அலங்காரமாகக் பயணிக்கும் என்பது திண்ணமாகும்.

கவிஞானி, G.S.T. மஹ்பூப் சுப்ஹானி