அழுக்கு அகற்றப்பட்ட அழகு

ன்று வெள்ளிக் கிழமை. வாரம் ஒருமுறை இந்த நாள் வரத்தானே செய்கிறது,  என்றாலும், இந்த வெள்ளிக்கு அப்படியொரு தனிப்பெருமை.  இரண்டு மாதமாக இந்த நாளுக்காகக் காத்திருந்தோர் பலர்.

இன்று மாலை நான்கு மணியளவில் பக்தாதில் இருந்து கப்பலொன்று புறப்படுகிறது.

முன்னரே பயணச் சீட்டுப் பெற்றிருந்தோர் பயணப் பொருட்களுடன் காலையிலேயே அந்தத் துறைமுகத்தில் குழுமி இருந்தனர்.

பயணச் சீட்டுப் பெற்றவரில் எவரெனும் வராவிட்டால் என்ன விலை கொடுத்தேனும் அதனைப் பெற்றிட முனைவோரின் வரிசை நீண்டு இருந்தது.

பிராயாணிகளில் வர்த்தகர்களை விட மாணவர்களும்,  இளைஞர்களும்,  உல்லாசப் பிரியர்களுமே அதிகமாகக் காணப்பட்டனர்.

கப்பல் புறப்பட இன்னும் வெகுநேரம் இருந்தும்கூட பயணிகள் எல்லோரும் அக்கப்பலை மொய்த்துக் கொண்டே இருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த அன்றைய மாலைப் பொழுது மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தது.

கப்பலின் உள்ளே தங்களுக்கான இருக்கைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டே பயணிகள்,  அந்த இருக்கைகளின் மீது தங்கள் பொருட்களில் சிலதை வைத்துவிட்டு கப்பலின் நுழைவாயிலின் அருகாமையில் குழுமி நின்று எவரையோ எதிர்பார்த்திருந்தனர்.

ஆம்! இந்தக் கப்பலின்தான் அன்றைய அரேபியாவின் ஆண் மனங்களைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த ஆடலழகி,  கண்டோரைக் காமுற வைக்கும் கனவுக் கன்னி ‘ஸஹவானத்’தும் அவளின் தோழிகள் அறுபதின்மரும் அரசர் ஒருவரின் அழைப்பை ஏற்று செல்ல இருக்கின்றனர்.

வர்த்தகத் தந்திரம் தெரிந்த கப்பல் உரிமையாளர்கள் ஸஹாவானத்தின் ஆடல் நிகழ்ச்சிகளைக் கப்பலிலும் நடத்துவதற்கான ஒப்பந்தம் செய்து,  பினனர் அதை விளம்பரப் படுத்தியதின் பின் விளைவே இந்த நாளைத் திருநாளாய் ஆக்கியது.

அன்றைய உலக அழகியாக வர்ணிக்கப்படும் ஸஹவானத்தின் தரிசனத்திற்காக மட்டுமே பொன்னையும்,  மணியையும் கொட்டிக் கொடுக்கும் மனநிலை பெற்றோர் எண்ணற்றோர்.

வாழ்வில் ஒரு முறையேனும் அவளை நேரில் பார்க்க முடியாதா என ஏங்கியோரில் பலருக்கும்,  இன்றில் இருந்து ஐந்து தினங்கள் அவளுடனேயே பயணிக்கப் போகிறோம் என்ற நினைப்பே இத்தனை எதிர்ப்பார்ப்பை அவர்களுக்குள் ஏற்படுத்தி இருந்தது.

திடீரென எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி பூவாய் விரிந்தது.

‘தாள் கண்டோர் தாளே காண,  தோள் கண்டோர் தோளே காண’ இமைத்தலையும் மறந்த எவரையும் நோக்காமல் எதிர்கொண்டழைத்தக் கப்பல் பிரதானிகளுடனும்,  தோழிகளுடனும் தன் இருப்பிடம் சென்றமர்ந்தாள்

காணாததைக் கண்டுவிட்ட பூரிப்பில் அனைவரும் தங்கள் இருக்கைக்குச் செல்ல,  அந்தக் கப்பலின் கடைசிப் பயணியாக மகான் ஒருவரும் உள்நுழைந்து ஓரத்து இருக்கை ஒன்றில் அமர்கிறார்கள்.

‘உல்லாசமும் உற்சாகமும் ததும்பி வடியும் இந்தக் கப்பலில் அருள்வடிவான இப்படி ஒரு மனிதரா?’ என்ற எண்ணம் கண்டோருக்கெல்லாம் தோன்ற,  கப்பல் புறப்பட்டு விட்டது.