அழகிய கடன் கொடுப்போம்!

அழகிய கடன் கொடுப்போம்!

ன்றைய உலகில் பொருளாதாரம் என்றாலே அது வட்டியுடன் இணைந்தது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தைச் சீரழித்து மனித வாழ்கையின் அமைதிக்கு ஊரு விளைவிக்கும் இந்த வட்டி, அல்லாஹ்வாலும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களாலும் ஹராமாக்கப்பட்ட சபிக்கப்பட்ட ஒன்றாகும்.

இத்தகைய கொடிய வட்டியைப்பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வதோடு மட்டும் நின்றுகொள்ளாமல், அதிலிருந்து பாதுகாப்பதற்காக ஒரு செயல் ரீதியான திட்டம் தேவை

அல்லாஹ்வுக்காக கடன் கொடுப்பவர்கள் யார்

مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَافًا کَثِيْرَةً  ‌ وَاللّٰهُ يَقْبِضُ وَيَبْصُۜطُ وَ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏

(கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு) அழகான முறையில் அல்லாஹ்விற்காகக் கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். அன்றி அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 2:245)

مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِيْمٌ ‏

எவர் அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுக்கின்றாரோ அவருக்கு, அதனை இரட்டிப்பாக்கியே வைத்திருக்கின்றான். அன்றி, அவருக்கு மிக கண்ணியமான கூலியும் உண்டு. (அல்குர்ஆன் : 57:11)

اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ‏

அழகான முறையில் அல்லாஹ்வுக்காக நீங்கள் கடன் கொடுத்தால், அதனை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் அங்கீகரிப்பவனாகவும் மிக்க சகிப்பவ னாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 64:17)

அழகிய கடன் கொடுக்க முன்வருவோம்

நில புலன்கள், ஆபரணங்கள் போன்ற மதிப்புள்ள சொத்துக்களை உடையவர்கள் அவர்களுக்கு திடீரென பண நெருக்கடி ஏற்பட்டால் மேல்படி நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றை பிணையாக்கி எளிதில் கடன் பெற்று அதன் மூலம் தனது நெருக்கடித் தீர்ந்ததும் தாமதமின்றி அவைகளை மீட்டிக்கொள்வார்கள்.

நில புலன்கள், ஆபரணங்கள் போன்ற மதிப்புள்ள சொத்துக்கள் இல்லாதவர்கள் எதைப் பிணையாக்குவார்கள் ? வசதி இல்லாதவர்களுக்கு யார் சாட்சியாகுவார்கள் ? அவர்கள் அல்லாஹ்வைத் தவிற வேறெவற்றையும் பிணையாக்க முடியாது ! வேறெவரையும் சாட்சியாக்க முடியாது !

வேறெந்த வழியுமில்லாத ஒருவர் அல்லாஹ்வை சாட்சியாக்கி கடன் கோரினால் தாமதமின்றி அல்லாஹ்வுக்காக அழகிய முறையில் தவணை விதித்து கடன் கொடுக்க இறைநம்பிக்கையாளர்கள் முன் வர வேண்டும். இவரிடம் கொடுத்தால் திரும்பப் பெற முடியாது, திரும்பப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு ஈடாகப் பெறுவதற்கு அவரிடம் எதுவும் கிடையாது என்று கடன் பெறுபவருடைய பேக்ரவுண்டைப் பார்க்கக் கூடாது. அவ்வாறுப் பார்த்தால் அல்லாஹ்வின் அழகிய கடன் வழங்கும் திட்டம் இறைநம்பிக்கையாளர்களால் நிறைவேற்ற முடியாமல் போகும்.

அல்லாஹ்வை சாட்சியாக்கிய இறைநம்பிக்கையாளர்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார்.

கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்.

பிறகு கடலுக்கு வந்து, ‘இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் ‘அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!’ என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!’ என்று கூறி அதைக் கடலில் வீசினார்.

அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!’ என்று கூறினார்.

அதற்கு கடன் கொடுத்தவர், ‘எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?’ என்று கேட்டார். கடன் வாங்கியவர், ‘வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!’ என்று கூறினார். கடன் கொடுத்தவர், ‘நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்!’ என்று கூறினார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 2291

வாங்கிய கடனை விரைவாக திருப்பி செலுத்துங்கள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 2387

யாருக்கு கடன் கொடுக்கவேண்டும்

நம்மிடத்தில் ஒருவர் கடன் கேட்கிறார் என்றால் கேட்டவுடன் தூக்கிக்கொடுத்துவிடக்கூடாது. அவர் எந்த விஷயத்திற்காக கடன் கேட்கிறார் என்பதை அறிய வேண்டும். கடன் கேட்பவர்களில் மூன்று சாரார் உண்டு.

கல்வி-மருத்துவம்-உணவு, உடை, வீடு கட்டுதல்,தொழில் தொடங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைக்காக கடன் கேட்பவர்கள்.

மது,சூதாட்டம்,விபச்சாரம்,லஞ்சம்,வரதட்சனை போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதற்காக கடன் கேட்பவர்கள்.

பெருமைக்காக செலவு செய்யும் ஆடம்பர திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பெயர் சூட்டுவிழா, இதுபோன்ற பல காரியங்களை செய்வதற்காக கடனுதவி கேட்பவர்கள்.

இவற்றில் முதல் வகையினருக்கே கடனுதவி செய்யப்பட வேண்டும்.

 

கடன் கொடுப்பவர்கள் வாங்குபவர்கள் எழுதி வைக்க வேண்டும்

கொடுக்கல்-வாங்கலில் பெரும்பாலும் நம்மவர்கள் எழுதி வைத்துக்கொள்வதில்லை. மேலும் கடன் கொடுக்கும்போது சாட்சிகளும் வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இதுதான் என அல்லாஹ் கூறுகின்றான்

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ‌ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ‌ وَلَا يَاْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ‌ فَلْيَكْتُبْ ‌وَلْيُمْلِلِ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا ‌ فَاِنْ كَانَ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِ‌

நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவனோ அல்லது வாங்கியவனோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதமாகவே எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்) எழுத்தாளர் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம்; அவர் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் யாதொன்றையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வனாக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமான வாசகம் கூறவும். (அல்குர்ஆன் : 2:282)

சாட்சிகளை ஏற்படுத்துங்கள்

وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْ‌ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰى‌ وَ لَا يَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ‌ وَلَا تَسْــٴَــمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖ‌ ذٰ لِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤى اَلَّا تَرْتَابُوْٓا

மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க் கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண்பாலராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக் கூடிய இரு பெண்களை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்துவிட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும்போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். அன்றி (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்) வரையில் அதனை எழுத(தாமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும். இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியான தாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுஅல்லாஹ்தியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். (அல்குர்ஆன் : 2:282)

 

அடமான பொருளை பெற்று கடன் கொடுங்கள்

وَاِنْ كُنْتُمْ عَلٰى سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ‌ فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَـتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ‌ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ‌ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ‌ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏

அன்றி, நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் : 2:283)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள். ஸஹீஹ் புகாரி 2513,2916, முஸ்லிம் 3276,3277

 

லேசாகிப்போன வட்டி கடன்கள்

வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் உங்களுடைய சிபில் ஸ்கோர் நன்றாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, பர்சனல் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா எனக் கேட்பது இன்றைய மார்க்கெட்டிங் உத்தி. நம்மைத் தேடிவந்து கடன் தருகிறார்களே, ஈஸியாகக் கடன் கிடைக்கிறதே என்பதற்காகக் கடன் வாங்கி ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள் பலர். பிறகு கடனை திரும்பச் செலுத்தும்போதுதான் அந்தக் கஷ்டத்தை உணர்கிறார்கள். ஏதாவது ஒரு சூழ்நிலையில் செலவுகள் அதிகரித்தால் சிக்கலில் மாட்டிக்கொள்ளகிறார்கள்.

 

கடன் கட்ட முடியாமல் கஷ்டப்படுபவர்கள்

வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்துத் திட்டமிடும்போது கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியாது. அப்படிக் கடன் வாங்கும் போது, நாம் வளர்ச்சி என நினைப்பது நிஜமான வளர்ச்சிதானா, கடன் வாங்கி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நம் வருமானம் எந்தளவுக்கு அதிகரிக்கும், வளர்ச்சித் திட்டத்தில் ஏதாவது சிக்கல்கள், பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதா என்றெல்லாம் கட்டாயம் யோசிக்க வேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யோசிக்காமல், ஆராயாமல் கண்மூடித்தனமாகக் கனவுக் கோட்டை கட்டுகிறவர்கள்தான் கடன் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.

 

அதிர்ச்சி தரும் ஆய்வுகள்

எம்.இ.சி. இந்தியா, லிங்க்ட்இன் மற்றும் இப்சோஸ் (Ipsos)ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்தியாவில் 20-லிருந்து 35 வயது வரையுள்ள இளைஞர்களில் 52% பேர் தனிநபர் கடன் வாங்கியுள்ளதாகவும், 27% பேர் தொழில் கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தியாவில் நிதி பற்றிய அறிவு தொடர்பான அறிக்கையின்படி, வங்கி அல்லாத கடன்களையும் இந்த வயதினர் வாங்கிக் குவித்திருக் கிறார்கள். இப்படி ஏதோ ஒரு வகையில் கடன் வாங்கியதால், இன்றைய சமுகம் 70 சதவிகிதத்துக்கும் மேலானோர் கடனாளிகளாக மாறி இருக்கிறார்கள்.

 

பாதியை தள்ளுபடி செய்யுங்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبٍ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى ‏”‏ يَا كَعْبُ ‏”‏‏.‏ قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏”‏ ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا ‏”‏‏.‏ وَأَوْمَأَ إِلَيْهِ أَىِ الشَّطْرَ قَالَ لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏”‏ قُمْ فَاقْضِهِ ‏”‏‏.‏

கஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து ‘கஃப் இப்னு மாலிக்! கஃபே’ என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே! என்றேன். ‘பாதியைத் தள்ளுபடி செய்வீராக! என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே! என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி ‘எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!’ என்று நபி(ஸல்) கூறினார்கள். ஸஹீஹ் புகாரி 457,471

 

அவகாசம் கொடுங்கள் & தள்ளுபடி செய்யுங்கள்

وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰى مَيْسَرَةٍ ‌ وَاَنْ تَصَدَّقُوْا خَيْرٌ لَّـكُمْ‌ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

உங்களிடம் கடன் பட்டவர் வசதியற்றவராக இருந்தால் (அவருக்கு) வசதி ஏற்படும்வரை, நீங்கள் காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் (அசலையே அவர்களுக்கு) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும். (அல்குர்ஆன் : 2:280)

حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏

“‏ مَاتَ رَجُلٌ، فَقِيلَ لَهُ قَالَ كُنْتُ أُبَايِعُ النَّاسَ، فَأَتَجَوَّزُ عَنِ الْمُوسِرِ، وَأُخَفِّفُ عَنِ الْمُعْسِرِ، فَغُفِرَ لَهُ ‏”

‏‏.‏ قَالَ أَبُو مَسْعُودٍ سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ‘நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்’ என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 2391

கடனை அதிகாரமாக கேட்பதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ، فَأَغْلَظَ، فَهَمَّ بِهِ أَصْحَابُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً ‏”‏‏.‏ ثُمَّ قَالَ ‏”‏ أَعْطُوهُ سِنًّا مِثْلَ سِنِّهِ ‏”‏‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ لاَ نَجِدُ إِلاَّ أَمْثَلَ مِنْ سِنِّهِ‏.‏ فَقَالَ ‏”‏ أَعْطُوهُ فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً ‏”‏‏.‏

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது’ என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், ‘அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள். ஸஹீஹ் புகாரி 2306,2390

 

தவனையை அதிகமாக்காதீர்கள்

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَخِي وَهْبِ بْنِ مُنَبِّهٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏

“‏ مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ ‏”

‏‏.‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 2400

 

கடனாளிக்கு ஜனாஸா தொழுகை வைக்க மறுத்த நபி ( ஸல் ) .

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُؤْتَى بِالرَّجُلِ الْمُتَوَفَّى عَلَيْهِ الدَّيْنُ فَيَسْأَلُ ‏”‏ هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلاً ‏”‏‏.‏ فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ لِدَيْنِهِ وَفَاءً صَلَّى، وَإِلاَّ قَالَ لِلْمُسْلِمِينَ ‏”‏ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ ‏”‏‏.‏

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுபவார்; அப்போது ‘இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று கேட்பார்கள். ‘கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் ‘நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!’ என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். ஸஹீஹ் புகாரி 2298

 

அதிக கடனிலிருந்து பாதுகாப்பு தேடுங்கள்

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْغُدَانِيُّ، أَخْبَرَنَا غَسَّانُ بْنُ عَوْفٍ، أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ الْمَسْجِدَ فَإِذَا هُوَ بِرَجُلٍ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو أُمَامَةَ فَقَالَ ‏”‏ يَا أَبَا أُمَامَةَ مَا لِي أَرَاكَ جَالِسًا فِي الْمَسْجِدِ فِي غَيْرِ وَقْتِ الصَّلاَةِ ‏”‏ ‏.‏ قَالَ هُمُومٌ لَزِمَتْنِي وَدُيُونٌ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”‏ أَفَلاَ أُعَلِّمُكَ كَلاَمًا إِذَا أَنْتَ قُلْتَهُ أَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمَّكَ وَقَضَى عَنْكَ دَيْنَكَ ‏”‏ ‏.‏ قَالَ قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”‏ قُلْ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ ‏”‏ ‏.‏ قَالَ فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمِّي وَقَضَى عَنِّي دَيْنِي ‏.‏

கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒரு பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து நபித்தோழர் அபு ஸயீத் (ரலி) தெரிவிப்பதாவது:

ஒரு நபித்தோழரின் பெயர் அபு உமாமா (ரலி). இவர் ஒரு தடவை பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘அபு உமாமாவே! தொழுகை இல்லாத நேரத்தில் பள்ளியினுள் அமர்ந்துள்ளரே, என்ன விஷயம்?’ என விசாரித்தார். அதற்கு அவர் ‘இறைத்தூதரே! எனது கவலைகளும், கடன் சுமைகளும் தான் இந்த இடத்திற்கு கொண்டு வந்தது’ என விவரித்தார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நான் உமக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத்தருகிறேன்; அதை நீர் காலையிலும், மாலையிலும் ஓதிவந்தால், இறைவன் உமது கவலையை போக்கி, உமது கடனை நிறைவேற்ற வழி வகை செய்வான்’ என அந்த பிரார்த்தனையை கூறினார்கள்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஜனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வஅஊதுபிக்க மின் கலபத்தித் தைனி வகஹ்ரிர் ரிஜால்.

அதன் பொருள்: ‘இறைவா, நான் உன்னிடம் கவலை, தூக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கோழைத்தனம், கஞ்சத்தனம், கடன் சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கோருகிறேன்’ என்பதாகும்.

இந்த பிரார்த்தனையை அபு உமாமா (ரலி) காலையிலும், மாலையிலும் ஓதி வந்தார். இறைவன் அவரின் கவலையையும், கடனையும் போக்கினான். (ஆதாரம்:அபூதாவூத்1555)

மற்றொரு துஆ

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ 3563 سنن الترمذي

அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபள்லிக அம்மன் ஸிவாக்க”

(பொருள்: இறைவா! உனது ஹலாலைக் கொண்டே உன்னால் ஹராமாக்கப்பட்டதின் தேவை ஏற்ப்படுவதிலிருந்து என்னை போதுமானவனாக்கி விடு! உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு!) நூல்: திர்மிதி 3563

 

ஆக்கம் : மௌலவி, அல்ஹாஃபிழ், A. முஹம்மது வலியுல்லாஹ் அல்தாஃபி B.com., M.B.A.,