முறையற்ற ஊதிய உயர்வு

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், இதர சலுகைகள் உள்ளிட்ட வசதி வாய்ப்புகளைத் தங்களுக்குத் தாங்களே கூட்டிக் கொள்ள முயற்சி செய்துவருகிறார்கள்.  அதிலும் நூறு சதவீதம் உயர்வு.  இதற்கான பரிந்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, நாடாளுமன்ற விவகாரங்களின் அமைச்சகத்திடம் அளித்துள்ளது.

சமூகத்தின்  வேறு தளத்திலுள்ளவர்கள் இத்தகைய சம்பள உயர்வைத் தங்களுக்குத் தாங்களே வரையறுத்துக்கொள்ள முடியாது. சம்பள உயர்வுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவதுதான் இந்தியாவில் அன்றாடம் கண்ணில் காணும் காட்சிகளாம்.  அவ்வாறு போராடியதாலும் சம்பள உயர்வைப் பெற்றுவிடுவதில்லை.  அவர்கள் செய்யும் போராட்டங்களில் திடீரென்று கலவரம் உண்டாகும். அந்தக் கலவரங்களைப் போராட்டங்களில் ஈடுபடுவோரே உருவாக்கலாம்;  அல்லது போராட்டக்காரர்களுக்கு எதிராகச் சமூகத்தின் கோபத்தை உருவாக்கக் கருதிக் காவல்துறையே நிலைமையை விபரீதமாகக் கையாண்டு கலவரங்களை உருவாக்குவதும் உண்டு.  இங்கே எல்லாமும் சாத்தியப்படும். இந்தியாவில் இவ்வாறாகக் கணக்கிலடங்காத முறை நடந்ததுண்டு. துப்பாக்கிச் சூட்டில் முடிந்து அதனால் செத்துப்போனவர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.  அதனைவிடக் கொடுமையானது போராடியவர்களை இழிவுபடுத்திச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மக்களுக்குத் தவறான தகவல்களை அளிப்பதாகும்.  நிறுவனங்கள் சொல்லும் அதே காரணங்களை அரசும் காவல்துறையும் மக்களுக்குத் தெரியப்படுத்திப் போராடிய எளிய மக்களைக் குற்றவாளிகளாகச் சமூகத்தின்முன் நிறுத்தியும் இருக்கிறார்கள்.  சுதந்திரம் பெற்ற நாள் முதலாக ஏழை எளியவர்களின் துயரமாக இது எப்படி நிலை பெற்றதோ, அதே வடிவில் விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் கெட்ட பெயரைச் சுமந்து அலைகிறார்கள்.

ஆனால் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இத்தகைய ஈனநிலை சம்பவிக்காது.  அவர்களுக்கு அவர்களே சம்பளங்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.  அதிலும் அப்படியே இரட்டிப்பு மடங்காக!  ஊதியத்தை ரூ.50,000-லிருந்து ஒரு லட்சமாகவும், ஓய்வூதியத்தை ரூ 20,000-லிருந்து ரூ. 35,000 ஆகவும் உயர்த்த பரிந்துரை செய்திருக்கிறது நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு.  இந்தப் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.  என்னவென்றால் கொஞ்சம் கால தாமதமாகும்;  அவ்வளவே!

ஆனால் நாடு முழுவதிலும் ஏழை, எளியோர்களின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகிவரும்போது இத்தகையக் கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கலாமா?  நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடக்கும்போது அவை நேரடியாக ஒளிபரப்பாகின்றன;  அல்லது செய்திகள் வாசிக்கும்போது காட்டப்படுகின்றன.  காரசாரமான விவாதங்களின் நேரத்தில் மட்டுமல்ல, முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போதும், அது விவாதத்தில் தொடங்கி வாக்கெடுப்புக்கு வரும்போதும் நம் நாடாளுமன்றம் பாழடைந்த மண்டபம் போல் காட்சியளிப்பதை அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். உறுப்பினர்கள் தலைமறைவாகி விடுகிறார்கள். வந்திருந்தால் தூங்கி வழிகிறார்கள். பாதிப்பேருக்கு மசோதாவில் கழுத்தை நெறித்துக் கொல்லும் ஷரத்துக்கள் என்னென்ன உள்ளன என்கிற விவரம்கூடத் தெரியாது போய்விடுகிறது.

கூட்டத்திற்கு வராமலேயே வளாகத்திலுள்ள வருகைப் பட்டியலில் கையெழுத்திட்டு விட்டு அப்படியே வீட்டுக்குத் திரும்புவதைத் தமிழக சட்டமன்ற வளாகத்தில் நாள் தவறாமல் நாம் பார்க்கலாம்.  கருணாநிதி ஆட்சியிலிருந்தால் ஜெயலலிதாவும்,  ஜெயலலிதா ஆட்சியிலிருந்தால் கருணாநிதியும் இவ்வாறாகத் தலைமறைவாக வந்து கையெழுத்தைப் போட்டுவிட்டு வீட்டுக்கு நடையைக் கட்டுகிறார்கள். நாடாளுமன்ற வளாகமும் அப்படித்தான்.  இதன் மகத்தான போலிமைத்தனம் இந்த ஜகா வாங்கும் மோசடிகளுக்கும் அவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்றத்தின் அன்றாடப் படியை ஆயிரக்கணக்கில் பெற்றுக்கொள்வது ஆகும். வெளிநாட்டுக் குழுக்கள் நாடாளுமன்றங்களின் பார்வையாளர் மாடத்திலிருந்து நிகழ்ச்சிகளைக் கண்ணுறும்போதில்,  நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் அவர்களுக்குப் புதிராகத் தென்படுகின்றன.  மக்களவைத் தலைவராய் இருப்பவர் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் விவாதங்களைப் பல்வேறு சாக்குபோக்குகள் சொல்லிப் பேசவே விடாமல் செய்வதும் தொடர்ந்து நடந்தபடி இருக்கிறது.  கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. மொத்த நாட்டின் நிலவரமும் இழிவுபடுவதில் எவருக்கும் கவலையில்லை.

ஆகவே, நாடாளுமன்றத்தின் இருப்பு பலவீனமான நிலையில் இருக்கின்றது. செயல்பாடுகள் தூர்ந்து போயுள்ளன. அது மக்கள்நலத் திட்டங்களில் கவலைப்படுவதில்லை. உறுப்பினர்கள் காரியங்களைத் திரைமறைவில் செய்து கோடானுகோடி புரட்டிவிடுகிறார்கள்.  இந்திய நாடாளுமன்றத்தின் உள் இயக்கம் தரகு நிலையை எட்டியிருக்கிறது. எல்லாவற்றிலும் கமிஷன்கள். காணும் பொருள்களில் எல்லாம் லஞ்ச லாவண்யமும் ஊழல்களும்!  இவற்றில் அவர்கள் காட்டும் அக்கறையை நாட்டின் வளர்ச்சிக்குக் காட்டுவதில்லை. இந்நிலையில் இந்தச் சம்பள உயர்வுக்கான பரிந்துரைகள், நாட்டுமக்கள் அனைவருக்குமான சவால் ஆக மாறியிருக்கிறது.

பா.ஜ.கவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் தலைமையில் உள்ள குழுவில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளவர்கள் இட்துசாரி உறுப்பினர்கள் மட்டும்தான்.  மற்றக் கட்சிக்காரர்கள் பரிந்துரைக்கு ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. ஆனால் இதில் ஆச்சரியம் இல்லை;  கடந்த காலங்களிலும் இப்படித்தான் நடந்துள்ளன.  காங்கிரஸ்,  பா.ஜ.க வேறுபாடுகளை இதில் நாம் காண முடியாது.

நாட்டுமக்களின் வேதனைகளைக் கணக்கில் கொள்ளாத கூட்டத்தார் இப்படி நடப்பது நல்லதல்ல.  அவர்கள் முதலில் தங்களின் இதய வாசலைத் திறக்க வேண்டும்;  பின்னர் நாடாளுமன்றத்தின் கதவுகளையும் திறந்து உள்செல்ல வேண்டும்.  நாட்டின் யதார்த்தம் என்னவென்று தெரியாதவர்களால்  நாடும் மக்களும் முன்னேறமாட்டார்கள்.  மக்கள் நலம்பெறும் வரை, நாடாளுமன்றம் மக்களுக்கான பதிலைச் சொல்லாத வரை  இதுபோன்ற சுயநல நடவடிக்கைகளிலிருந்து சம்பள் உய்ர்வுப் பரிந்துரைகள் கிடப்பில் போடவேண்டும்.