புகழ்மிக்க களங்கம்

முதல்வராக ஜெயலலிதா 2011ஆம் ஆண்டில் பதவியேற்றபோது ,  சென்னையிலிருந்த கூலிப்படைகளும் ரவுடிக் கும்பலும் ஆந்திராவுக்குத் தப்பியோடிவிட்டதாகத் தெரிவித்தார்.  அது உண்மையாகத்தான் இருக்கும் என்று பொதுமக்களும் நம்பத் தொடங்கினர்.  ஆனால் நாளாக நாளாக அந்த நிலை மாறத்தொடங்கி மீண்டும் சென்னையும் தமிழ்நாடும் கொலைக்களமாகவே ஆயின.  ஒரு காலத்தில் ஸ்காட்லாந்த் யார்டு போலீஸுக்கு இணையானது தமிழ்நாட்டின் காவல்துறை என்ற புகழ் இருந்தது.  இப்போது யாரேனும் அவ்வாறு சொன்னால் அது வஞ்சப்புகழ்ச்சி அணி என்று கருதப்பட்டு, தமிழகக் காவல்துறை கேலிக்குள்ளாக்கப்பகிறது.

கடந்த மாதம் அதிகாலையில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் இஞ்சினீயர் பகிரங்கமாகக் கொலை செய்யப்பட்டார்.  அதற்கும் முன் சென்னையில் நான்கு வழக்கறிஞர்கள் நடுவீதிகளில் பட்டப்பகலில் கொல்லப்பட்டனர்.  இவை போக சென்னைக்கு வெளியிலும் இதுபோல பகிரங்கக் கொலைகள் பட்டப்பகல்களிலேயே நடக்க ஆரம்பித்துள்ளன.  அண்மைக்காலத்தின் மோசமான, அவலமான உதாரணம் – உடுமலையில் சங்கர் என்ற தலித் காதலன் சாதீயப் பயங்கரவாதிகளால் நடுச்சாலையில் பட்டப்பகலில் துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்டது.  ஆனால் கொலையாளிகள் கைது செய்யப்படுவது மிகவும் மந்த கதியில் நடக்கிறது.  2014-2015 காலகட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சரியாக 100 கொலைகள் தாராளமாக நடந்தன.  அவற்றில் கொலையாளிகள் பலர் இன்னமும் பிடிபடவில்லை.  அதற்கான காரணம் அவை சாதீய மோதலாகவும் இருந்தமைதான்.  கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் தலித்துகளாகவே இருந்தனர்.  ஆதலால், காவல்துறை அவ்ற்றில் போதிய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

இப்போது பொதுமக்களின் பார்வையில் காவல்துறை அபகீர்த்தியுடன் விளங்குகிறது.  புகார் செய்யப்போனால் அதற்குப் பல வெளிக் காரணங்கள் தடையாக இருக்கின்றன.  யாராவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் அந்தப் புகாரைப் பதிவு செய்ய வற்புறுத்த வேண்டும்;  அல்லாது போனால் காவல்துறையினர்க்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்.  காவல்துறை சமூக அமைப்பாக இயங்காமல்,  ஏதோ ஒரு கட்டப்பஞ்சாயத்துக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.  வினுப்பிரியா என்ற பெண் ஆபாசமாக முகநூலில் சித்தரிக்கப்பட்டதால் இரு வாரங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.  அவர் தற்கொலை செய்வதற்கு எது காரணமாக இருந்ததோ, அதுகுறித்துப் புகார் அளிக்கப்போனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  புகாரைப் பதிவுசெய்ய ஒரு செல்போனை லஞ்சமாகக் கேட்ட காவல்துறையைச் செர்ந்தவர் செல்போனையும் வாங்கிக்கொண்டு, புகாரையும் ஏற்காமலேயே இருந்துவிட்டார்.  இவையெல்லாம் வெளியே தெரியவந்த வழக்குகள்.  தெரியாமல் இன்னும் ஆயிரமாயிரம் புகார்கள் அப்பாவிகளிடம் இருக்கின்றன.  அவர்கள் கொந்தளித்துக் குமுறிக்கொண்டிருக்கின்றனர்.  இவையெல்லாம் எங்கே கொண்டுபோய்விடுமோ என்ற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது.  ஆனால் காவல்துறை மட்டுமே எவ்வித சமூக அக்கறையும் இல்லாமல் உறங்குகிறது.  இந்த நிலை தொடருமானால் காவல்துறை சமூக விரோத சக்திகளின் புகலிடம் என்ற பெயராலும் அழைக்கப்பட நேரிடலாம்.  நுங்கம்பாக்கம் ரயில்வே கொலைவழக்கில் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறையைக் கேள்விக்கணைகளால் துளைக்கும் அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பெருநகரக் காவல் ஆணையர் இந்தக் கொலைகளின் போக்கைத் திசைமாற்றப் பார்ப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.  குடும்பப் பிரச்சினைகள், திடீரென உணர்ச்சிவசப்பட்டுச் செய்த கொலைகள் போன்றவைதான் அடுத்தடுத்து நடந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.  அதில் ஓரளவே உண்மை உள்ளது.  அவ்வாறு குடும்பப் பிரச்சினைகளால் கொலைகள் நிகழ்ந்தால் காவல்துறை அதிலிருந்தும் தப்பித்து வெளியே செல்லமுடியாது.  ஏனெனில் அளிக்கப்படும் புகார்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவது குறித்த செய்திகளும் வரத்தானே செய்கின்றன. மறுபக்கத்தில் குடும்பத்துக் கொலையாளிகளும் தக்க விதிமுறைகளின் கீழ் கொண்டுவரப்பட்டு வழக்குகள் கையாளப்படுவதில்லை.  பல வழக்குகளில் குற்றவாளிகள், கொலையாளிகள் மிகமிகச் சாதாரணமான தண்டனைகளுக்கே உள்ளாகிறார்கள்.  அல்லது ஜாமீனில் சர்வசுதந்திரமாக வெளியெ சுற்றித் திரிகிறார்கள்.  நிலைமை இவ்வளவு வசீகரமாக இருக்கும்போது அது மற்றக் கொலைகளுக்கும் காரண்மாகிவிடுகின்றன என்கிற உண்மையை அவர் அவதானிக்கவில்லை.
இந்த முறையும் ஜெயலலிதாவே முதல்வராகியிருக்கிறார்.  அவர் மிகப்பெரும் வல்லமையாளர்தான்;  கொஞ்சம்கூடச் சந்தேகமில்லை.  ஆனால் மக்களின் உணர்ச்சியலைகளுக்கு வெளியே அவர் இருக்கிறார்.  அதனால்தான் அவருடைய ஆற்றல் சுடர் மங்கிப் போகின்றது.  கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழகம் எப்படி கொலைக்களமாகத் திகழ்ந்ததோ,  அதே வீச்சு கொஞ்சமும் குறையாமல் கொலைகள், கொள்ளைகள், வழிப்பறிகள் தொடர்கின்றன.  இந்த முறை, “இது கடந்த ஆட்சியின் கேடு” என்று ஜெயலலிதா கூற முடியாது.  ஆகவே, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதற்கு அவருக்கு அப்பால் யாரைக் குற்றம் கண்டுபிடிக்க முடியும்?  அவர் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் அவர்தான் காவல்துறையின் அமைச்சராகவும் நீடிப்பார்.  இம்முறையும் அவர்தான் காவல்துறை அமைச்சர்.  எனவே முதல்வர், காவல்துறை அமைச்சர் என்ற இரண்டு நிலைகளிலும் அவரே பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.  ஆனால் முதல்வர் சட்டசபையில் மட்டுமே பேசுகிறார்.  அங்கு எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படுவதில்லை.  ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சட்டமன்றத்தில் இணைந்து செயல்படும் என்று ஜெயலலிதா வாக்கு கொடுத்தபோது தமிழகம் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது.  இனிமேல் சட்டமன்றம் ஆக்கபூர்வமாகச் செயல்படும் என்று மக்கள் நம்பினர்.  ஆனால் அந்த நம்பிக்கை ஒரே மாதத்தில் மரணித்துப்போய்விட்டது.  ஆதலால், சட்டமன்றத்தில் தவறான தகவல்கள் சொல்லப்பட்டால் கூட அவற்றை ஆட்சேபிக்க வழியில்லாமல் இருக்கிறது.  முதல்வர் செய்தியாளர்களைச் சந்திக்கவாவது முன்வர வேண்டும்;  அவ்வாறு முன்வந்தால் ஏராளமான் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அவர் செய்தியாளர்களை முகம் கொடுத்தும் பார்ப்பதில்லை என்றாகிவிட்டது.

ஆகவே, ஊடகங்களில், தொலைக்காட்சிகளில், இணையதளங்களில்தான் இப்போது எதிர்க்குரல்கள் எழுகின்றன.  ஆனால் அதற்குப் பதில்தர வேண்டும் என்ற அவசியம் அரசுக்கு இல்லை.  இதனாலேயே மக்கள் மத்தியில் காவல்துறை மோசமான அளவில் கெட்டப் பெயரைச் சம்பாதித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காவல்துறைக்கு ஏராளமான நல்வாய்ப்புகளை வழங்கியுள்ளது.  இதைத் தமிழ்நாடு காவல்துறை சமபோசிதமாகக் கையாளும் ஆற்றலைப் பெற்றுள்ளது.  ஆனால் செயல்படவிடாமல் தடுக்கும் சக்திகளால் அது தடுமாறுகிறது.  காவல்துறையின் உள்ளேயே கூட அத்தகைய சக்திகள் உள்ளன என்பது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டமாகும்.  இவற்றையெல்லம் சரிசெய்ய வேண்டியவர் முதல்வர்தான்.  அவருடைய திறமையையும் மக்களின் மீதான் அக்கறையையும் அவர் உளச்சுத்தியுடன் பயன்படுத்த வேண்டுகிறோம்.  தமிழ்நாடு அமைதியும் வன்முறையுமற்ற மாநிலமாகத் திகழுமேயானால் அதற்கான பேரும் புகழும் யாருக்குக் கிடைக்கும் – முதல்வரைத் தவிர?