கடமைகளும் பொறுப்பும் (ஜனவரி-16)

2015ஆம் ஆண்டு தனது மழை, வெள்ளச் சூறையாடலின் மூலம் கடுமையான இழப்பைத் தமிழக மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம், பொருளாதார ரீதியிலான வீழ்ச்சியில் இருக்கிறது. பல்லாயிரம் கோடிகளைக் கொட்டினாலொழிய சென்னை, கடலூர், தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பிற பகுதி இழப்புக்களை மீட்ட முடியாது.  வறியோர் உயிரிழந்துள்ளனர்;  ஓரளவு தலைநிமிர்ந்திருந்தோர் தகர்ந்துபோயுள்ளனர்.  பல காவியங்களை இயற்றினாலும் தமிழ் மக்களின் மழைத்துயர்களை அவ்வளவு இலகுவாகப் பட்டியலிட்டுவிட முடியாது.  ஆதார பலங்களை இழந்ததைப் போலவே,  மன உறுதியை இழந்த மக்களும் லட்சோப லட்சம். அவர்கள் சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் துரும்புகளாய் மழைச்சேற்றில் அப்பிக்கிடக்கின்றனர்.

இந்தப் பேரிழப்புகளின் மத்தியில் பேரிடரும் பேரன்பும் ஒன்றுக்கொன்று எதிரெதிர்த் திசையில் மல்லுகட்டியதில் இன்று தமிழகம் அகில உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது;  இது நாம் மறக்கக்கூடிய செய்தி அல்ல.  கூடவே நம்பிக்கையின் சில மிச்சங்கள் மீண்டெழ இந்தப் பேரன்பு இனியும் உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பெருமழையும் வெள்ளமும் தமிழகத்தில் உருவாக்கிய சேதங்கள் இயற்கையின் சீற்றத்தால் மட்டும் கணக்கிடப்படுவதாக இல்லை. அரசின் நடைப்பிணத் தன்மையும் உள்ளடங்கியுள்ளது.  தமிழக அரசியல் களத்தின் அருவருப்பான, இனிமேலும் சகித்துக்கொள்ளக் கூடாததான நெருக்கடிக்கும் அது இட்டுச் சென்றுள்ளது.  தமிழகத்தின் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வந்த இந்திய இராணுவத் தளபதி சென்னையை விட்டுக் கிளம்பும்போது விடுத்த செய்தி அதி முக்கியமானது.  “எத்தனைபேர் பாதிக்கப்பட்டார்களோ அதைவிட அதிகமாக அவர்களுக்குச் சேவை செய்பவர்கள் இறங்கிவிட்டனர்.  சென்னை இளைஞர்களுக்கு என் சல்யூட்” என்று கூறிச் சென்றார்.  இதிலுள்ள நுட்பமான செய்தி சுட்டுவது என்ன?   மாநில அரசின் பணி, பொறுப்பு, ஈடுபாடு, பண உதவி என எவையும் மழைக்காலத்து மக்களை நோக்கி வரவில்லை எனச் சுட்டுகிறது. இந்தச் செய்தி உலகறிந்த செய்தியாகவும் ஆனது.  பேரிடர்க் காலத்தில் மாநில அரசோ, அதை ஆளும் கட்சியோ பாதிக்கப்பட்ட  மக்கள் மத்தியில் காணப்படவில்லை.  ஆனால் ஆளும் கட்சியின் தொண்டர்கள் களத்தில் இருந்தார்கள் – ஊரான் வீட்டு நெய்யை வார்த்த பொண்டாட்டிக் கையாக!  மானுட இனத்தின் அவமானமாக இதைக் கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படியான பேரிடர்க் காலங்களில் இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் எந்தவொரு சூழ்நிலையிலும் கை ஒடிந்த நிலையில் மாநில அரசு செயல்பட்டது கிடையாது.  முதல்வர் ஜெயலலிதா பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவோ ஆறுதல் கூறவோ முன்வரவில்லை.  அவரைச் செயல்பட விடாத நிலைக்கு ஆளாக்கியவர்கள் யார்?  காரண காரியங்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லாதபோதும், இவ்விஷயத்தை அலசிப் பார்ப்பது நல்லது.

முதல்வர் ஜெயலலிதா தனித் திறம் படைத்தவர் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது. சுறுசுறுப்பாகவும் அதிரடியாகவும் செயல்படுபவர் என்ற அவரைப் பற்றிய சித்திரம் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.  அவருடைய மந்திரிமார்கள் ஆலோசனை கலப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களல்ல என்ற அருவருப்பான உண்மையால் தமிழகத்திற்கு இழப்புகளும் அவமானமும் ஒருங்கே வந்து சேர்ந்தன.  மேலும் தமிழக மழை நிலவரம் குறித்த வானிலை எச்சரிக்கைகள் அகில உலகெங்கும் பேசப்பட்டு வந்த சூழலில் மாநில அரசுக்கென்று செவிகள் இல்லாமல்போன அந்தத் துரதிர்ஷ்டத்தை என்னவென்பது? அரசில் பணியாற்றுகின்ற துறைசார்ந்த அதிகாரிகள் அழைக்கப்படவில்லை; அவர்களிடமும் ஆலோசனைகள் கேட்கப்படவில்லை; அபாயக் கொள்ளளவைக் கொண்டிருந்த செம்பரம்பாக்கம் ஏரி முதல்வரின் கவனத்தில் இல்லவே இல்லை.  நாள்தோறும் புகழ்மாலைகளால் மட்டுமே அர்ச்சிக்கப்பட்டு வந்த்தில் உருவான அவரது மனநிலையும், அத்தகையப் புகழ்மாலைகளை மட்டுமே எதிர்பார்க்கும் அவரது ஆர்வமும் அவரைச்  செயல்பட விடாத இக்கட்டுகளைக் கொடுத்தன.  நாளாகநாளாகப் பல்வேறு சமூகத்தினரும் சமூக ஆர்வம் படைத்த குழுவினரும் தன்னார்வலர்களும் தமிழகத்தின் அனைத்துத் திசைகளிலுமிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் சென்னை, கடலூர் நோக்கி வந்தபோதும் அரசிடமிருந்து இயங்கும் தன்மை உருவாகவில்லை.  மக்களிடம் உருவான அச்சமும் கவலையும் மாநில அரசைக் கொஞ்சம்கூட அசைத்துப் பார்த்திடவில்லை.  நெருக்கடிக் காலத்தின் அந்த மரண ஓலங்களை மீறி, ஆளும் கட்சித் தொண்டர்கள் முதல்வரின் படத்தை அச்சிடக் காட்டிய வேகமும், அதை மற்றவர்களின் நிவாரணப் பொருட்களில் ஒட்ட விரும்பிக்காட்டிய விவேகமின்மையும் தமிழக அரசியல் மாண்பில் கடைசியாக வைக்கப்பட்ட கொள்ளி ஆகும்.  அவரிடமிருந்து மக்களுக்கு எவ்விதமான வார்த்தைகளும் வரவில்லை.  நிதி ஒதுக்கப்படவில்லை.  ஜெயல்லிதா முதல்வராக இருந்த 2004ஆம் ஆண்டில் சுனாமிப் பேரலையில் அவரிடம் தென்பட்ட லவலேச அசைவுகளும் இம்முறை காணக்கிடைக்கவில்லை.  சென்னையில் பொழிந்த மழையில், சென்னையில்  பொங்கிய பெருவெள்ளத்தில் சென்னை தனக்குத்தானே கரையேறிக் கொண்ட்து. முகவரியில்லாமல் வாழ்ந்தவர்கள், எவராலும் தேடப்படாதவர்கள் என ஆயிரக்கணக்கானவர்களை வெள்ளம் தன்னுள் அரவணைத்துக்கொண்டு சென்றுவிட்டது.  மரணக் கணக்கெடுப்பு வேலைகளைச் சுலபமாக்கிவிட்டு அவர்கள் மாயமானார்கள்.

தமிழ் இலக்கியம் குறித்த புதிய ஆர்வங்களை, புதிய தேடல்களை உருவாக்க விரும்பிச் செயல்பட்ட எண்ணற்ற பதிப்பகங்களின் நூல்கள்,  இனி கொணர முடியாத கருவூலங்கள், ஆவணங்கள் கோடிக்கணக்கான மதிப்பில் வெள்ளத்தின் பசிக்குத்தான் போய்ச் சேர்ந்துள்ளன; இவற்றையெல்லாம் தேடாமல் வாழ்வின் அற்ப சுகங்களுக்கு ஏங்கித் தவித்தவர்களிடம் இதைப் பேசி ஆவதொன்றுமில்லைதான்.  ஆனாலும் தமிழகம் தன் வரலாற்றைத் தானே தொலைப்பதை எங்ஙனம் சகிப்பது?

சமூகத்தின் எந்தப் பிரிவினரின் கோரிக்கைக்கும் செவிமடுக்காத, கலந்துரையாடாத ஜெயலலிதாவின் பேரரசில் நம் செய்திகளை, வேதனைகளை, கோரிக்கைகளைக் கொண்டுசெல்லும் வாய்ப்புகள் இல்லை.  ஜெயலலிதாவை அச்சுறுத்துவது தேர்தல்தானே தவிர, மக்களின் துயரம் அல்ல. சென்னைக்கு வரும்போது கையில் ஏதுமில்லாமல் வந்தவர்கள், தங்களின் கடின உழைப்பால் பெற்ற அனைத்தையும் இழந்து இன்று வாழ இடமின்றி, அடுத்தவேளை உணவுக்கின்றி, உடுத்திக்கொள்ள ஒரு துணியும் இன்றி இந்த நாகரிக இந்தியாவில் வாழ்வது எத்தனைக் கொடுமையானது?  எங்கெங்கோ இருந்து வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு மரக்கிளைகளில் ஒட்டிக்கொண்டிருந்த யாரோ எவரோ ஒருவரின் சேலையை, சட்டையை, உள்ளாடைகளை இன்று சென்னையில் துவைத்துக் காய வைத்து உடுத்திக்கொண்ட ஆயிரமாயிரம்பேர் இருக்கிறார்கள். வரலாற்றில் இப்போதுதான் இப்படியும் ஒரு நிலை உருவாகியிருக்கிறது.  செருப்புகளுக்காக மட்டுமே வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கிக்கொண்டு ஆளும் மகாராணியின் கவனத்தில் இந்தப் பச்சை அவமானங்கள் போய்ச் சேரா.

எல்லாம் இழந்து நிற்போரைப் பாராதவர்கள், அவர்களை எதிர்கொள்ளத் துணியாதவர்கள் இணைய யுகத்தின் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வந்து அசரீரிபோலப் பேசுவதும் அசைவதும் தமிழக இருண்மைக்குச் சாட்சியங்கள்!  அதே சமயம் மழையும் வெள்ளமும் சென்னையைச் சூழ்ந்த தருணங்களில், முதன்முதலாக உணரப்பட்ட மரண பீதியைத் துடைத்திட இறங்கிய கைகளுக்குச் சொந்தக்காரர்களாக முஸ்லிம் இளைஞர்களும் சகோதரர்களும் இருந்தார்கள்.  இது இன்றைய அகில உலகின் ஆச்சரியமான செய்தி.  அண்ணல் நபிகளாரின் காலத்தில் இஸ்லாமியச் சமூகச் செயல்பாட்டில் ஊன்றிய விழுதுகள், அப்படியே பன்னூறு ஆண்டுகளின் புரளல்களுக்கு அப்புறமும் பழுதுபடாமல் மாநகர மக்களைத் தேடிவந்து அரவணைத்ததைச் சொல்ல உவமான வார்த்தைகள் இல்லை. எல்லாம் இழந்த தருணத்தில் இதுவரை பெறாத ஓர் அதிசய மானுட உறவைத் தமிழகமும் தலைநகரமும் இந்தச் செயல்பாட்டில் பெற்றிருக்கிறது.  தமிழகம் அல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இஸ்லாமியச் சமூகத்தின் ஆதரவுக் கைகள் இப்போது நீண்டுவருகின்றன.  தனி நபர்களாக, குழுக்களாக, ஜமாஅத் அமைப்புகளாக இஸ்லாம் சமூகத்தின் கருணைமழை பாதிக்கப்பட்ட அனைவரையும் சூழ்ந்திருக்கிறது.

இதுவரை தமிழகத்தின் அரசியல் சூழல்கள், அரசியல் பண்பாடுகள், அரசியல் தலைவர்கள் கழிவுப்பொருள்களைப்போல உருவாக்கிய மாசுகள் அகல வேண்டி தமிழகம் ஒரு புத்துணர்வைக் கொண்டிருக்கிறது.  பல ஆண்டுகளாக பதவி நாற்காலிகளில் மட்டுமே சுகம்காண விரும்பிய தலைவர்களை இனியும் பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தமிழகம் தயாராக இல்லை.  புதிய நன்னம்பிக்கையும் வாழ்க்கைமுறையும் சமூகப் பண்பாடும் உருவாகியிருக்கும் இந்தச் சூழலைத் தமிழகம் தக்க அரசியல் இயங்குவிசையாக மாற்றினால் உலகத்துக்கான முன்னோடியாகத் தமிழகம் இருக்க்க்கூடும்;  அதற்கென இனி செயலாற்றும் வாய்ப்பு தமிழகத்திற்குக் கிடைத்திருக்கிறது.