என்ன வேண்டும் இவர்களுக்கு?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு  வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முடங்கிப்போயிருப்பது வேதனையைத் தருகிறது. ஜெயலலிதா முதல்வராக இல்லையே தவிர, மற்றபடி அவருடைய ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது;  அவர் கட்சிதான் ஆண்டுவருகிறது. அவர் கைகாட்டிய நபர் யாரோ அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.  மேலும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல் இல்லாமல் இந்த ஆட்சி நடக்கவுமில்லை.அவர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் அவரை விட்டு விலகவில்லை. ஆட்சிக்கு ஆபத்தில்லை.  இன்னமும் அவர் கையில்தான் அரசின் நிர்வாகமும் கட்சியின் நிர்வாகமும் உள்ளது. அவரைமீறி இப்போது எதுவும் நடந்துவிடப் போவதில்லை.

  • ஆனால் கடந்த இரண்டுமாதங்களாக இங்கே ஓர் ஆட்சி நடப்பதான உணர்வு உண்டாக மாட்டேன் என்கிறது.  அமைச்சர்கள் அத்தனைபேரும் ”சோகத்தில்” மூழ்கிக் கிடப்பது விந்தையிலும் விந்தை.  அவர்கள் ஊர் ஊராகப் போகிறார்கள்; தொண்டர்களைப் பார்த்தால் சிரிப்பதில்லை;  பதவியேற்ற துறைகளின் செயல்பாடுகளை அவர்கள் அறியவில்லை;  ஜெயலலிதாதான் முதலமைச்சராக இருக்கவேண்டுமாம்.  அதனால் கோயில், குளம், பூஜை, விரதம் என்று அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.  அவை ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயாக வேண்டும் என்கிற நினைப்பைத் தவிர, அமைச்சர்கள் வேறு நினைவற்றோராக இல்லை.  ஜெயலலிதாவின் உள்ளங்கவர் தொண்டராக இருப்பதைக் காட்டுவதற்கு இவர்கள் ‘ரூம்போட்டு யோசித்து வருகிறார்கள்’ போலத் தெரிகிறது. இதை அவர்கள் உளமாற விரும்பியிருந்தால் பரவாயில்லை. இதெல்லாம் வெறும் பாவலா என்று மக்கள் கருத ஆரம்பித்துவிட்டார்கள்.  அமைச்சர் பொறுப்பென்பது மக்களின் மத்தியில் புகழுக்குரியதாக இல்லை.

 

  • இதன்விளைவை நன்கு புரிந்துகொண்ட சமூக விரோத சக்திகள் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.  முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை நீர்தேக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.  இம்முறை கேரளாவில் கனமழை கொட்டித்தீர்த்ததால் வெள்ளம் திரண்டு வந்தது. ஆனால் 142 அடி நீரைத் தேக்க விரும்பாமல் வந்த நீரின் அளவைவிட அதிக நீரை அணையிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருந்தது பன்னீர்செல்வம் அரசு.  இதன் காரணத்தைப் புரிந்துகொள்ள இயலாமல் தமிழகம் தவித்தது.  ஜெயலலிதாவுக்கு வரவேண்டிய கீர்த்தியை அணையில் நீரை உயர்த்திக் காட்டுவதன்மூலம் பன்னீர்செல்வம் பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணம் மேல்மட்டத்தில் இருந்ததாகத் தெரியவந்தது. அவ்வாறு நிரப்பாமல் போனால் அதன் பின்விளைவுகள் மிகக் கடுமையாக இருந்திருக்கும். அனைத்துக் கட்சியினரும் கோரிக்கையை எழுப்பிய பின்னரே மனமில்லாமல் 142 அடிக்கு நீரைத் தேக்கியது அரசு.

 

  • இப்போது குளிர்காலத் தொடர் சட்டமன்றக் கூட்டம் நடைபெற வேண்டிய நேரம். ஆனால் முதல்வர் அதுபற்றிக் கவலைப் படாமல் இருந்தார். கருணாநிதி இதுகுறித்துக் கண்டனம் தெரிவித்த பின்னர் வேண்டா வெறுப்பாக சட்டமன்றம் கூட்டப்படுகிறது.  ஆனால் அதுவும் மூன்றே மூன்று நாட்களுக்கு மட்டும்தான் நடைபெறுமாம்.  என்ன நடக்கிறது இங்கே? மக்கள் பிரச்சினைகளெல்லாம் தூசு போல மறைந்துவிட்டதா இந்த மாநில அரசுக்கு?  ஒரு நபருக்கான தீர்ப்பின்மீது இவ்வாறு ஓர் அரசே செயலற்றுக் கிடப்பதையும், துக்கம் அனுஷ்டிப்பதையும் உலகம் எள்ளி நகையாடும் என்று இவர்கள் ஏன் நினைக்கவில்லை?  தங்களின் திறமையையும் வரலாறு தங்களுக்கு அளித்த கடமையையும் உதாசீனப்படுத்தி தம்மைத் தாமே தகர டப்பாவாக ஏன் இவர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள்? தாங்கள் கேவலப்பட்டேனும் தங்கள் தலைவியின் புகழை உயர்த்த வேண்டும் என இவர்கள் நினைப்பது என்ன விதமான அடிமைத்தனம்? பற்று, பாசம், அன்பு, மரியாதை என்கிற எந்த வரையறைக்குள்ளும் இவர்களின் செயல்ப்பாடுகள் அடங்கப் போவதில்லை.  தீராப் பழி ஒன்றே இவர்கள் பெறப்போகிற சுமை. துன்பத்தைக் கட்டிச் சுமக்கத் துணிந்தவர்கள் சொன்னாலும் கேட்பதில்லை ஞானத் தங்கமே என்கிற பாடல்வரிக்கு சாட்சியாகிறார்கள்.

 

  • அனேகமாக காவல்துறையின் கீர்த்தி அபகீர்த்தியாகி வருகிறது. காவல்துறையின் மாண்பைக் காப்பாற்ற மோடி எண்ணி அவர்களுக்கு ஆதரவாகப் பேசினால் கடுமையான விமர்சனங்கள் மோடியின்மீதும் பாய்கிறது.  உண்மை அதுதானே? தொடர்ந்து தமிழகம் கொலைக் களமாகி வருகிறது. முன்பு சொந்தக் குரோதத்தின் பேரில் பழிக்குப்பழி வாங்க கொலைகள் நடந்தன. ஆனால் இப்போது முன்பின் பழக்கம் இல்லாத, விரோதமற்ற பெண்மணிகள் கொல்லப்படுகிறார்கள்;  மாணவர்கள் கொல்கிறார்கள் அல்லது அவர்களும் கொலை செய்யப்படுகிறார்கள்; ஏற்கெனவே நாங்கள் முன்னர் சுட்டிக் காட்டியபடி கொலைசெய்ய பெரிய திட்டங்கள், சாட்சியங்கள் இல்லாத சூழ்நிலை பற்றியெல்லாம் இப்போது யாரும் கவலைப் படுவதில்லை. பட்டப் பகலில் பலநூறு[பேர் சாட்சியமாக இருக்க விறுவிறுவென்று ஒவ்வொருவரும் கோரமாகக் கொல்லப்பட்டு வருகிறார்கள். காலத்திற்கேற்ற மாற்றம் போலும்! காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்காததால் கொலைகள் இன்னும் தீவிரம் பெறுவதாகப் பாதிக்கப்பட்டோர் கூறும் புகாரில் பொய்யில்லை.அண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாணவன் வகுப்பறையிலேயே கொல்லப்பட்டான்;  கொன்றவனும் பள்ளி மாணவனே! கொலையாளியை முன்னரே கைது செய்ய பல முகாந்திரங்கள் இருந்தன. ஆனால் தங்கள் புகாரை காவல்துறை அலட்சியம் செய்ததாக கொலையுண்ட மாணவனின் தந்தை புகார் கூறியுள்ளார். தந்தையின் துயரை எப்படி மறைப்பது? இதுபோன்று பல்வேறு துறைகளிலும் நிர்வாகம் தேங்கியுள்ள நிலை காணப்படுகிறது.

 

  • அமைச்சர் என்பவர்கள் மதியூகிகளாகக் கருதப்படுபவர்கள். கருவியும் காலமும் செய்கையும் அருவினையும் கொண்டவர்கள் அமைச்சர்கள் என்கிற இலக்கணத்தை ’திருக்குறள்’ போதிக்கிறது.  நாம் திருக்குறளைப் போற்றிவருகிறோம்; ஆனால் தமிழக அமைச்சர்கள் என்பவர்கள் உல்கில் மற்ற அமைச்சர்களுக்கு இல்லாத வேலையையெல்லாம் செய்துவருகிறார்கள்.  பொறுப்புணர்வை வீணே மழுங்கடிக்கிறார்கள்,  இவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவிர், முல்ல பெரியாறு பிரச்சினைகளுக்கு அண்டை மாநிலத்தவர்கள் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டி விரைந்து செயல்பட்டு வருகிறார்கள்,  ஆனால் இரண்டு கழகங்களின் ஆட்சியிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது அருவருப்பான சங்கதியாகி விட்டது,  இதுபோன்ற  அலட்சியங்கள் நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாகி விடும்.

 

  • எனவே முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் தங்களின்மீது சுமத்தப்பட்டுள்ள அரசியல் கடமைகளில் மனந்தோய்ந்து தனிநபர் பிலாக்கணம் பாடும் நடைமுறைகளைக் கைவிட்டு மாநிலத்தின் மேன்மைக்காகப் பாடுபட வேண்டும் என்று தமிழகம் எதிர்பார்க்கிறது. தலைவியின்மீதான அவர்களின் துயரம் கட்சிப் பிரச்சினையாக மட்டும் இருக்கட்டும்;  மாநிலத்தின் பிரச்சினையாகிவிட வேண்டாம்!