புழுதிப்படலம் வேண்டாம்.

மிழகத் தேர்தல் முடிவு எதிர்பாராத திசையில் சுழன்றடித்துள்ளது.  கடந்த முப்பது ஆண்டுகளாக இப்படி ஒரு நிலை – தொடர்ந்து ஒரே கட்சியே ஆட்சியைக் கைப்பற்றுவது – உண்டானதில்லை.  வெற்றிகள் மாறிமாறி வந்த காரணத்தினாலேயே திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை நிலவியது.  அதற்கேற்ற சூழலும் இருந்தது.  2006முதல் 2011 வரை நீடித்த திமுக ஆட்சி எப்படி ஒரு தேக்கநிலையில்  இருந்ததோ, அதே மாதிரி 2011-16 அதிமுக ஆட்சியும் ஒரு தேக்கத்தில்தான் இருந்தது.  அதன் வெளிப்படையான செயலின்மையைச் சென்னை மழைப் பேரிடர் நிரூபித்தது.  ஜெயலலிதாவின் ஆட்சி அதிகாரங்களும் திறமும் முற்றிலும் முடங்கிப் போயிருந்தது;  இதனால் ஏராளமானோர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள்;  கோடானுகோடி ரூபாய் சேதாரமானது.  ஒரு மாபெரும் மாநிலமே பத்துநாட்களுக்கும் முடங்கிக் கிடந்தது.  மழை முடிந்த அடுத்த ஐந்து மாதங்களிலும் மக்கள் மீளமுடியாத துயரத்தில் மூழ்கிக்கிடந்தனர்.  அவர்களின் துயர்களை மத்திய, மாநில அரசுகள் இந்நாள்வரை களைந்திடவில்லை.  வாழ்க்கையின் உயர்ந்தநிலையை எட்டிப் பிடித்தவர்கள் ஒரே பொழுதில் பெருங்கடலின் ஆழ்மட்டத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கு அடுத்த நிலையில் மக்களை வாட்டிவதைத்தது டாஸ்மாக் மது.  அரசுப் பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு நூலகங்கள் அனைத்தும் கவனிப்பாரில்லாமல் அநாதைகளாகக் கைவிடப்பட்ட தமிழ்நாட்டில் மது மட்டும் அரசின் ஏகபோக விருப்பமாக இருந்தது. பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் தொடர்ந்து மூடப்பட மூடப்பட டாஸ்மாக் அவற்றை ஈடுசெய்து மாநிலத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பெருகிவந்தது;  அதிசயமான ஆட்சிமுறைமையாக்கும் இது என்று உணர்த்துவதைப்போலஇந்நிகழ்வு  இருந்தது.  இப்போதும் தமிழ்நாட்டின் கிராமங்களிலுள்ள நூலகங்கள் வெறும் கட்டடங்களாகப் பாழடைந்து கிடக்கின்றன;  அங்கு வாரத்திற்கு ஒருநாள் மட்டும் நூலகர் வந்துசெல்கிறார். அதே நூலகர் அடுத்த வேலைநாளில் இன்னொரு கிராமத்தின் நூலகத்தில் இருப்பார்.  இதனால் ஆயிரக்கணக்கான நூல்கள் புழுதிபடிந்து, கரையான் அரித்து நாசமாகிவிட்டன.   இப்படியாகச் சுழல்முறையில் ஒருவர் வேலை வாங்கப்படும் சூழலில் டாஸ்மாக் விளைவித்த இன்னல்கள் அநேகம்.  மக்களே தன்னெழுச்சியாக மாநிலம் முழுவதும் கிளர்ந்தெழுந்து மதுக்கடைகளை மூடச்சொல்லிப் போராடினார்கள்.  அப்போதெல்லாம் மதுவிலக்குச் சாத்தியமில்லை என்று சொல்லிவந்தது மாநில அரசு.  முதல்வர் ஜெயலலிதா அதைக் கண்ணாரக் காணவோ, காதாரக் கேட்கவோ மறுத்தார்.  ஆனால்,  தேர்தல் வந்தபோது தன் கொள்கையை மாற்றிக்கொண்டார் ஜெயலலிதா.  இப்படியாக மக்களின் மனநிலையை ஒருவழியிலேனும் ஊகித்துக்கொண்டதும் அதன் இன்றைய வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதான குற்றச்சாட்டுகள் எங்கெங்கும் எழுந்திருக்கின்றன.  பணபலம் படைத்த இரண்டு கட்சிகளும் கோடிக்கண்க்கான ரூபாயை விநியோகம் செய்துள்ளன.  ஆனாலும் பணம் கொடுப்பதால் மட்டுமே வெற்றியை வாங்கிவிட முடியாது.  அது ஓரளவுக்குப் பயன் தருமே தவிர, வெற்றிக்கம்பத்தை நெருங்கச் சற்றுக் கூடுதலான பலத்தைத் தருமே தவிர, அதுவே வெற்றியாகிவிட முடியாது.  ஆகையால் இவையெல்லாவற்றையும் கணக்கிலெடுத்தே வெற்றிதோல்விகளைக் கணிக்க வேண்டும்.   மக்களின் மனநிலை ஆட்சி மாற்றத்திற்குத் தயாராக இருந்தும் அந்த மாற்றம் நிகழவில்லை.  இதற்கான காரணம் ஆராயப்பட வேண்டியதாகும்.

ஆனாலும் இந்தத் தேர்தலால் மக்களின் வாழ்க்கையில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்று சொல்ல முடியவில்லை.  ஜெயலலிதா தன் குணாம்சங்களை மாற்றுவதிலிருந்து சில சீரிய விளைவுகள் ஏற்படலாம்.  ஆனால் அவர் அதைச் செய்வாரா என்று உறுதிகூற முடியவில்லை. அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அந்நிகழ்வுக்குச் சென்ற ஸ்டாலினும் அவருடைய கட்சியினரும் புறக்கணிக்கப்பட்டனர்.  மறுநாள், அது தன் கவனத்திற்கு வராமல் நடந்தது என்று சொன்னார் முதல்வர்.  அது உண்மையெனில், இனிமேல் தொடர்ச்சியாக அவ்ர் கவனத்துடன் செயல்படும் நம்பிக்கையை மக்களின் மனங்களில் விதைக்க வேண்டும்.  கேரளாவில் ஆட்சியை இழந்த உம்மன் சாண்டியைச் சந்திக்கப் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவிருந்த பினராயி விஜயன் செல்கிறார்.  ஆட்சியை இழந்த சோகம், கோபம் போன்றவற்றை விட்டொழித்து பினராயி விஜயனுடன் கைகோத்தபடிச் செல்ல உம்மன் சாண்டிக்குத் தயக்கம் ஏதுமில்லை.  மாநிலத்தின் நலனுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் எது தேவையாயிருந்தாலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து இயங்குவது கேரள அரசியலின் உயிர்ப்புத் தன்மையாகும்.  அந்தச் சமயங்களில் கட்சிபேதம் பாராட்டுவது அங்கு இதுவரை இருந்ததில்லை.  இவ்வாறாக மாநிலத்தின் பல சாதனைகளை அவர்கள் இயைந்தே பெற்றுள்ளார்கள்.  ஆனால் தமிழகத்தின் அரசியல் இரத்த ஓட்டத்தில் இப்படியொரு சங்கதியைத் தேடிப்பார்த்தாலும் கிடைக்காது.

மாநிலம் வாழ்ந்தாலும் தன்னாலே வாழ வேண்டும்;  அது வீழ்ந்தாலும் தன்னாலேயே வீழ வேண்டும் என்று எண்ணும் பெருந்தகைமைதான் இந்த மாநிலத்தை ஆளும் வாய்ப்பைப் பெறுகின்றது.  இது நம்மைச் சரித்துவிடும்.  ஓர் இயக்கத்தின்மீது அல்லது கட்சியின் மீது கோபம், வெறுப்பு போன்ற இழிவுணர்வுகள் தோன்றினாலும் அவை தேர்தல் களத்தின் பின்னே புறக்கணிக்கப்பட வேண்டும்.  வென்றவர் தனக்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும்.  இது நாகரிக உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணக் கிடைக்கும் காட்சியாகும்.  ஆனால் தமிழகம் இந்த நளினத்திலிருந்து விலகிப் புழுதியில் புரள்கிறது.  தமிழகத்தின் தேவைகள் ஒரு கட்சியின், தலைவரின் சொந்த பலத்தினாலோ அதிகாரத்தினாலோ சாத்தியப்படாது.  அது மத்திய அரசையும் சூழவுள்ள மாநிலங்களையும் கலந்துறவாடுவதாலேயே நிகழும்.  இது போன்ற தருணங்களில் மாநிலத்தின் வலிமையைக் கூட்டுவது மாநில எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புதான்.  எதிர்க்கட்சிகளிடமிருந்து எத்தனையோ ஆலோசனைகள், உத்திகள் அரசுக்குக் கிட்டும். அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்துவதுதான் ஆளும் கட்சியின் வியூகமாக, விவேகமாக இருக்கும்.

தமிழக அரசு எதிர்கொண்ட ஈழத்தின் இனப்படுகொலை,  காவிரிநீர்த் தாவா, முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல்,  சென்னைப் பேரிடருக்கான மத்திய அரசிடமிருந்து கூடுதலான நிதி கோருதல், இரயில் போக்குவரத்துக்கான நிறைவு, கச்சத்தீவுப் பிரச்சினை போன்ற ஏராளம் ஏராளமான தேக்கங்கள் இங்கே நிலவுகின்றன.  ஆனால் இவற்றைத் தீர்ப்பதில் இரண்டு கழகங்களும், குறிப்பாக அதிமுக அனைத்துக்கட்சிக் கூட்டம் என்ற ஒன்றை இந்நாள்வரைக்கும் சிந்தித்ததில்லை.  மாநிலத்தின் முதுபெரும் தலைவரான கருணாநிதியையும் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களையும் தகுந்த கௌரவமளித்து நடத்தினால் மாநிலம் பயன்பெறும்.

தேர்தலின் முடிவு ஜெயலலிதாவின் தலைமைக்கு வலு சேர்த்திருக்கிறது.  அவர் மீண்டும் ஒருமுறை ஆட்சி செய்யும் அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் பழைய காலத் தடங்களை அழித்துவிட்டுப் புதிய பாதைகளைக் கண்டறிய வேண்டும்.  மக்களின் வாழ்க்கைநிலைகள் பந்துபோல உதைபட்டுக்கொண்டிருக்கின்றன.  இப்போது ஜெயலலிதா தன்னுடைய முதல்வர் என்ற உறுதிப்பாட்டை அனைத்துமக்களையும் அணைத்துச் செல்வதற்குப் பயன்படுத்தி, தன்னுடைய தலைமையின் கீழே தமிழ்நாடு சிறந்தது என்ற அழியாப் புகழை அவருக்கு உருவாக்கித் தரவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.  அது நடக்கும்தானே?