உரிமையளிக்கப்பட்ட படுகொலைகள்? (Oct-2015)

மோடி பிரதமராக வந்தால் நாடு பாசிசத்தின் அபாயத்துக்குள் வீழ்ந்துவிடும் என்று எச்சரித்த பெரியவர்களை இப்போது நன்றியுடன் நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் உ.பி. மாநிலம் பிசாரா கிராமத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற காரணத்திற்காக முஹம்மது இக்லாக் கொல்லப்பட்ட சேதி உலகையே அதிர வைத்திருக்கிறது. பக்ரீத் பெருநாளையொட்டி அவர் பசுவைப் பலியிட்டார் என்று கூறி,  கோயில் மணியை அடித்துள்ளார்கள். இதன் விளைவாக அவரது வீட்டைச் சுற்றி இருநூறுக்கும் மேற்பட்டோர் கூடிநின்று அந்தக் குடும்பத்தினரைத் தாக்கியும் இருக்கிறார்கள். இதில் இக்லாக் கோரமாக்க் கொல்லப்பட்டுள்ளார்.

இந்துத்வா வகுப்புவாதிகள் இப்போது தமக்குத் தாமே வதந்தியைக் கிளப்புகிறார்கள்.  பின்னர் அவர்களே நேரடியாகத் தண்டனை கொடுத்துத் தம் மதவெறியைத் தணிக்கும் கட்டத்திற்கும் வந்துவிட்டார்கள்.  ஆத்திரத்தில் ஒரு சிலர் எங்கும் கூடலாம்;  ஆனால் ஒரு கிராமத்தினரே வெறிநோக்கில் ஒன்று கூடுவதும், ஒன்றுபோல கொலை செய்யும் மனநிலைக்கு வந்திருப்பதும் இந்தியாவின் நாகரிகத்திற்குச் சாவுமணியை அடித்திருக்கிறது.

அந்தத் தொகுதியின் உறுப்பினரும் மத்திய அமைச்சருமான மகேஷ் சர்மா இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்திருக்கலாம் என்றார். அங்கு சென்றவர்கல் கொலை மட்டும்தானே செய்தார்கள்;  அங்கிருந்த பெண்ணைக் கற்பழிக்கவில்லையல்லவா?  அதற்காக அந்தப் பென் நன்றி சொல்லவேண்டும் என்றும் பேசியுள்ளார். இந்தியாவின் மாண்புக்கும் அவர்களின் வெறிச் சித்தாந்த்த்திற்கும் இந்த மந்திரி வக்காலத்து வாங்குவது அந்த இருநூறு பேரின் கொலைவெறி மனத்திற்கு இணையானதாகும். தம் பேச்சுக்களால் மானுட இனத்திற்கே முழுக் களங்கமும் உண்டாக்கலாம் என்கிற அளவில் அவர்கள் இப்போது கடந்தகால மிராண்டிநிலைக்குத் திரும்புகிறார்கள்.  மானுடம் இந்த அளவுக்குக் களங்கப்பட்டிருக்கலாகாது. முழு உலகத்தையும் எப்படிப்பட்ட அல்பமான கற்பனையைக் கொண்டும் ஏமாற்றலாம் என்கிற அளவுக்கு அவர்கள் கொண்ட துணிச்சல் அபாயகரமானது.  ஒரு பிரளயம்போன்ற கொலைவெறி என்று இதை நாம் வர்ணிக்க வேண்டியிருக்கிறது.

பாஸிச சக்திகளின் அடுத்தக்கட்ட பயங்கரவாதம் இது.  முஸ்லிம்களின் மன உறுதியைப் பாதித்துவிட்டால் அவர்களைச் சுலபமாக அடக்கியாளலாம் என்று பாஸிஸ வாதிகள் கருதியிருக்கிறார்கள். அந்தக் கிராமத்து முஸ்லிம்கள் தம் சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதும் அதை உறுதி செய்கிறது. அரசு நிர்வாகத்தின் வீழ்ச்சியும் இந்த அநாகரீகத்தின்மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இருநூறுபேர் கூடிநின்று கொலை செய்திருக்க, உ.பி. மாநிலக் காவல்துறையோ வெறும் எட்டுபேர் மீது மட்டுமே வழக்கினைப் பதிவு செய்திருக்கிறது.  போதாக்குறைக்கு அந்த வீட்டிலிருந்த இறைச்சி மாட்டு இறைச்சிதானா என்று அறிய பரிசோதிக்கவும் துணிந்துள்ளது. இதுதான் நிர்வாக லட்சணம் என்றால் இங்கே நாம் எந்த நீதியையும் பெறமுடியாது.  பாஸிஸப் பயங்கரவாதிகளின் மீது இப்போதே இவ்வளவு கருணை வெள்ளம் அகிலேஷ் அரசின்மூலம் பாய்ந்திருக்கிறது; இந்த வழக்கு எவ்விதமாக நடக்கும் ? வழக்கு ஒன்றுமில்லாமல் ஊற்றி மூடப்படும் என நாம் துணியலாம்.  கொஞ்ச காலத்திற்கு நீதி சம்பந்தமான நாடகங்கள் நடக்கும்.  முலாயம் சிங் அரசாயினும் அவருடைய மகனின் அரசாயினும் எப்போதும் பலவிதமான பாசாங்குத்தனங்களோடேயே செயல்பட்டு வருகின்றன.  இன்றும் அந்தப் பாசாங்குகள் தொடர்கின்றன.  உறுதி காட்டி பாஸிஸப் பரிவாரங்களுக்கு அச்சத்தை உருவாக்கவேண்டிய அரசு அந்தக் கடமையிலிருந்து நழுவியிருப்பதை வன்மையாக்க் கண்டனம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்துத்துவா சக்திகள் தாம் விரும்பும்போது பிறர் மாட்டிறைச்சி சாப்பிடலாம், விரும்பாதபோது எல்லோரும் வாயை மூடிக்கொண்டுவிட எதிர்பார்க்கிறது.  இது மாடுகளின் மீதான கருணையினால் அல்ல;  அதிகாரத்தின் மீதான வெறியும் பிற சமூகங்களின் மீதான காழ்ப்புணர்ச்சியும் கொண்ட்தாகும்.  இதுபோன்ற சம்பவங்கள் வேறு நாடுகளில் நடந்திருந்தால் அந்த நாடு தன்னை வெட்கித் தலைகுனிந்திருக்கும்.  ஆனால் இந்தியாவில் ஆளும் அரசு ஒன்று உள்ளதா என்ற சந்தேகம் உண்டாகியிருக்கிறது.  மாட்டிறைச்சியை ஏதோ முஸ்லிம்கள் மட்டுமே உண்ணுவதாக ஒரு சித்திரத்தை உருவாக்கிவிட்டால் முஸ்லிகளின்மீது அனைத்து இந்துச் சமூகத்தவரின் கோபதாப வெறிகளைத் திருப்பிவிட்டுவிடலாம்;  பின் தங்களின் அரசியல் இலக்குகளை எய்த இந்தச்சம்பவத்தையே பயனபடுத்திக்கொள்ளலாம்;  இதுதான் அவர்களின் திட்டம். அந்தக் காலத்தில் இந்துச் சமூகத்தில் பசுக்களை யாகம் நடத்துவதற்காகப் பலியிட்டுள்ளார்கள்.  யாகம் இல்லாத காலங்களில் பிராமணர்கள் தம் உணவுக்காகவும் மாட்டு இறைச்சியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  வேளாண்மை நாகரிகம் உச்சத்திலிருந்த வரலாற்றுக் காலத்தில் பிராமணர்களின் மாட்டிறைச்சி உபயோகம் அதிக அளவில் இருந்ததால் மாடுகளின் எண்ணிக்கை குறையலாயிற்று.  இதனால் வேளாண்மைத் தொழில் முடங்கும் அபாயம். ஆயினும் பசுக்கொலைகள் நடந்தபடியே இருந்தன.  இச்சமயத்தில்தான் கௌதம புத்தர் பசுவதையைத் தடுக்க எண்ணிப் பிரச்சாரம் செய்தார்.  மாடுகளை இழந்துவரும் நிலையில் வேளாண்மையும் நசியலானதால் அத்தொழில் புரிந்தோர் கௌதம புத்தரைப் பின்பற்றி பௌத்தத்தைத் தழுவலாயினர்.  இந்த அபாயத்தை உணர்ந்த கட்டத்தில்தான் பிராமணர்கள் தங்களின் ஆதிக்கம் கைநழுவிப் போய்விடலாம் என்ற அச்சத்தில் அவர்களும் பசுவதையை விரும்பாத நிலைக்கு வந்தார்கள். ஆகவே இதில் இருப்பது ஆதிக்கப் பயங்கரவாதச் சிந்தனை மட்டுமே. பின்னர்வந்த காலங்களில் மாட்டிறைச்சியைச் சாப்பிடும் பழக்கம் இதர சமூகத்தவரிடம் நடைமுறைக்கு வந்தது, மாட்டிறைச்சி இந்தியாவின் முக்கியமான உணவுப்பொருள்; புத்தர் இந்து சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை விவேகானந்தர்கூட பல இடங்களில் கூறியிருக்கிறார்.

மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா சர்வதேச அளவில் இரண்டாமிடம் வகிக்கிறது.  இதுவெல்லாமா தெரியாமல் இருப்பார்கள் இன்றைய ஆட்சியாளர்களும் ஃபாஸிஸ்ட்டுகளும்?  தங்களை நோக்கிச் சர்வதேச ரீதியாக்க் கேள்விகள் வந்தால் தாம் எப்படி நொறுங்கிப்போவோம் எனும் சிந்தனைகூட இல்லாமலே இவ்வளவு நரமாமிச வேட்டைகள் நட்த்துகிறார்கள்.  தாங்கள் போற்றிப்புகழும் பண்பாட்டுக்கு இது இழுக்கு என்று கருதியிருந்தால் கொலைவெறி நோக்கிலிருந்து என்றோ விலகியிருப்பார்கள்.

இத்தகைய கலாச்சாரப் பேரழிவுகள் நடக்கும்போது இந்திய ஊடகங்களில் பலவும் தங்களின் மனச்சாட்சியை இறுக்கவும் மூடிவிடுகின்றன.  மிகச் சாதாரணமான செய்தியாக இதைப் பாவிக்கின்றனவா அல்லது வெளியில் சொல்லமுடியாத மன இம்சைக்கு ஆளாகி அவை தவிக்கின்றனவா என அறியமுடியவில்லை.  அவை தம் குரலை உரத்து எழுப்பாத நிலையில் இந்த நாடு நரமாமிச வேட்டையாளர்களின் நாடாகிவிடும் என்கிற எச்சரிக்கையை நாம் விடுக்கவேண்டியுள்ளது.

ஆனாலும் பொதுச் சமூகத்தின் மனச்சாட்சி மறைந்துவிடாது.  அது பல ரூபங்களில் ஃபாஸிஸ்டுகளின் இருப்பை நெருப்பால் சுட்டெரிக்கின்றன. இந்தத் தலையங்கம் எழுதப்படும் நேரத்தில் 1986ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான சாகித்ய அகாதெமி விருதை வென்ற பிரபல எழுத்தாளரான நயன்தாரா சேகல் தனது விருதை மத்திய அரசிடமே திருப்பியளிக்க முடிவெடுத்துள்ளார்.  மோடி பிரதமரான பின் இந்தியாவில் உரிமையளிக்கப்பட்ட விதம்போல பல முக்கியமான வகுப்புவாத எதிர்ப்புச் சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டு வருகின்றார்கள். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கல்புர்கி, மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த மதவெறி எதிர்ப்பாளரும் இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவருமான கோவிந்த் பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கர் ஆகியோர் பகிரங்கமாகவே கொல்லப்பட்டுள்ளனர்.  அதுபோன்ற தாக்குதல்தான் முஹம்மது இக்லாக்கின் படுகொலையும் எனக் குறிப்பிட்ட நயன்தாரா சேகல் சமூகத்தின் மனச்சாட்சியை உயர்த்திப்பிடிக்கும் நல்லெண்ணமாக இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதேபோல ஹேமாவதி என்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச்செர்ந்த எழுத்தாளர் தான் மாட்டுக்கறி உண்ணுவதைப் படமெடுத்துத் தன் முகநூலில் (Facebook) பதிவிட்டு என்னைக் கொல்ல வாருங்கடா என்று சவாலும் இட்டுள்ளார். இவையே சமூகத்தின் மனச்சாட்சி!  மறுபக்கத்தில் இந்திய பாசிஸ ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை.  ஏற்கெனவே சாதி, சமயப் பேதமில்லாமல் இந்தியாவில் அனைத்துத் தரப்பினரும் தம் கண்டனக் குரலை ஒருசேர ஒலிக்கின்றனர் – முஹம்மது இக்லாக்கின் படுகொலையைக் கண்டித்து!  ஆட்சியாளர்களுக்கும் ஃபாஸிஸ்டுகளுக்கும் இவை பேரிடி போன்றவை.  இந்தப் பற்றுக்கோட்டில்தான் சிறுபான்மையினரும், இந்துச் சமூகத்தில் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டோரும் வாழவும் போராடவும் வேண்டியுள்ளது.

தீபத்தை அணைத்துவிடலாம் என்று பார்த்தார்கள்.  ஆனால் அது அவர்கள் வைக்கோல்போரில் படர்ந்த தீயாக எரிகிறது.