இஸ்லாமியப் புத்தாண்டு – ஒரு வரலாற்றுப் பார்வை

 

மௌலவி அல் ஹாஃபிழ் A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil

 

ஸ்லாமியப் புத்தாண்டு! இப்படி முஸ்லிம்களுக்கு என்று தனியாக ஒரு புத்தாண்டு உண்டு என்ற செய்தி கூட நம்முடைய பல முஸ்லிம்(!) சகோதரர்களுக்கு தெரிவது இல்லை என்ற வேதனையான உண்மை ஒரு புறம் இருக்க, மறு புறம் சில மெத்தப்படித்த மே(ல்)தாவிகளோ புத்தாண்டு கொண்டாடுவது நபிவழிக்கு மாற்றமானது, அது நவீனம், அனாச்சாரம் என்ற ஃபத்வா கொடுத்து இஸ்லாமியப் புத்தாண்டு என்ற மாபெரும் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் ஒன்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் போன்ற குடி, கூத்து, ஆட்டம், பாட்டம் என்ற இழிவான செயல்களில் ஈடுபடச்சொல்லவில்லை. அல்லது மற்ற மதத்தவர்கள் தங்களது புத்தாண்டை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி வருவது போன்று, நாமும் கொண்டாடுவதற்காக இந்த புத்தாண்டு வருவதுமில்லை. மாறாக, நம்மீது மிகப் பெரியதொரு சுமையைத் தாங்கி வருகின்றது என்பதை அனைத்து முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். வெறுமனே புத்தாண்டு வாழ்த்துக்கள், அல்லது அரபு நாடுகளிலே கூறுவது போல ‘குல்லு ஆமின் வ அன்தும் பி ஃஹைர்’ என்று சொல்வதின் மூலம் மட்டும் நம் புத்தாண்டுக் கடமை நிறைவேறி விட்டது என்று எண்ணிவிடலாகாது. மாறாக இஸ்லாமியப் புத்தாண்டின் தாத்பரியம், அதன் நோக்கம், அதன் வரலாறு மற்றும் அதன் பின்னணியில் உள்ள உயரிய தியாகம் போன்றவற்றை அறிவது நம் மீது கடமை என்பதை நாம் மனதால் உணர வேண்டும்.

இன்று இஸ்லாமிய சமுதாயம் பிளவுபட்டு, சிதறுண்டு, எதிரிகளால் தாக்கப்பட்டு, வேதனைப்பட்டு, நொம்பலப்பட்டு, யாராவது நமக்கு உதவ மாட்டார்களா என்று ஏங்கித்தவிக்கும் நாதியற்ற சூழ்நிலையில் உள்ளது. வேரை மறந்த மரங்கள் வாழ்வது கடினம். எந்த சமுதாயம் தன்னுடைய வேரைத் தொலைத்து விட்டதோ, அந்த சமுதாயம் விரைவில் தன்னையும் தொலைத்து விடும் என்பது மரபு. தன் கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் எதிர்கால வரலாற்றை படைக்க முடியாது எனும் கூற்றுக்கேற்ப இஸ்லாமியப் புத்தாண்டின் துவக்கத்தையும், அதன் அடிப்படையாக அமைந்த ஹிஜ்ரத்தின் சுருக்கமான வரலாறையும், அதன் பின்னணியையும் ஆராய்ந்து அறிவது நம் ஒவ்வொருவரின் மீதும் தலையாய கடமை என்றால் அது மிகையில்லை.

இஸ்லாமியப் புத்தாண்டு என்ற நினைவு வந்தாலே, உடனே 1434 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உயிர் தியாகங்கள், சுவடு பதித்த தடயங்கள், இரத்தம் சிந்திய நாட்கள், கொள்கைக்காக பிறந்த பொன்னாட்டை, தம் சொத்துக்களை, சொந்தங்களை இழந்த நினைவுகள் நம் அனைவரின் மனக்கண் முன் பளிச்சிட வேண்டும். ஏனெனில் இப்படியொரு தியாக சரித்திரத்தை எந்த நாடும், எந்த ஏடும் பதிவு செய்ததில்லை. இனி பதிவு செய்யப்போவதுமில்லை.

அந்த தியாக சரிதத்தை வாசிக்கும் யாரும் கண்ணீர் சிந்தாமல் இருக்க மாட்டார்கள். தியாகத்தின் சிகரமாக விளங்கும் அந்த பொன்னாட்களை மனதிற் கொண்டு ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்காகவும், அவன் தூதருக்காகவும், தூதர் காட்டிய மார்க்க நெறியைக் காப்பதற்காகவும், உறுதி கொண்டு, வீறு நடை போட வேண்டிய உத்வேகத்தையே அவை நினைவு படுத்துகின்றன. ஆனால் அந்த சரிதத்தை அறிந்தோர் நம்மில் எத்தனை பேர்? அதை அறிந்தாலும் நினைவு கூறுவோர் எத்தனை பேர்?

முதலில் இஸ்லாமிய ஆண்டு எப்படி உருவானது என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் அதைத் தெரிந்து கொண்டால்தான் அதன் முக்கியத்துவம் தெளிவாகும். பொதுவாக இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரீ ஆண்டு என அடையாளப்படுத்தப்படுகிறது. ஹிஜ்ரீ காலண்டர் சந்திர மாதத்தை அடிப்படையாக கொண்டது. சந்திரக் காலண்டரே எல்லா இடத்திற்கும், நாட்டிற்கும் அனைத்து வகைப்பட்ட மனிதருக்கும் எளிமையானது. எந்த ஒரு ஆய்வுக்கருவியின் துணை இல்லாமலே நாட்களை அறிந்து கொள்ள உதவக்கூடியது. அதன் காரணமாகவே சீனர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் என பெரும்பாலான பழங்காலத்;தைச் சேர்ந்த மக்கள் சந்திர ஓட்டத்தை அடிப்படையாக கொண்டே தங்களது நாட்களை கணக்கிட்டு வந்துள்ளனர்.

நாம் இன்று உலக வழக்கில் பயன்படுத்தும் காலண்டருக்கு கிரிகோரியன் காலண்டர் என்று பெயர். அது சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இன்று நாம் அச்சிடப்பட்ட காலண்டர்களின் புண்ணியத்தில் சூரிய நாட்களை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்கிறோம். இல்லையெனில் சூரியன் நிற்கும் திசையை வைத்து நாட்களை அறிந்து கொள்வது மிகவும் சிரமமானது.

இன்றைய நவீன யுகத்திலும், வயதான பெரியவர்கள் சிலர் வானத்தில் உலாவும் வட்ட நிலாவை ஒரே ஒரு முறை அண்ணாந்து பார்த்து விட்டு இன்றைக்கு வளர்பிறை பத்து என்று நொடியில் சொல்லிவிட முடியும். ஆனால் சுட்டெரிக்கும் சூரியனை டெலஸ்கோப் வைத்து பலமுறைப் பார்த்தாலும் ஒரு தேர்ந்த விஞ்ஞானியால் கூட சரியான தேதியை சொல்ல முடியாது. எனவே எளிமையான நாட்காட்டி நடைமுறையான சந்திர மாதக்கணக்கே இஸ்லாமிய மாதக் கணக்காகவும் அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

ஹிஜ்ரி ஆண்டுக்கணக்கு ஆரம்பம்:

ஹிஜ்ரி ஆண்டுக்கணக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் உருவானது அல்ல. இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக நாட்காட்டி அப்போது பின்பற்றப்படவில்லை. அவர்களுக்குப் பின் வந்த அபுபக்கர் (ரளி) அவர்கள் காலத்திலும் இது உருவாக்கப்படவில்லை. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மறைந்து ஏறத்தாழ ஏழு வருடங்கள் கழித்து உமர் (ரளி) அவர்களது ஆட்சிக் காலத்தில் (கி.பி.639ம் ஆண்டு) வருடத்திற்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம,; ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

இப்படி ஒரு ஆலோசனை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிய பெருமை நபித்தோழர் அபுமூஸா அல்அஷ்அரீ (ரளி) அவர்களையே சாரும். ஏனெனில் அவர்கள் ஓரு முறை உமர் (ரளி) அவர்களுக்கு கடிதம் எழுதும் போது அரசின் கடிதங்களில் தேதியிடப்படாமை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியின் விளைவாக உடனடியாக முஸ்லிம்களுக்கென்று பிரத்தியேக நாட்காட்டி ஒன்றை உருவாக்க வேண்டியதின் அவசியத்தை உமர் (ரளி) அவர்கள் உணர்ந்தார்கள்.

எனவே இஸ்லாமிய ஆண்டின் துவக்கம் குறித்து நபித்தோழர்களுடன் ஆலோசிப்பதற்கான ஒரு கூட்டத்தை உமர் (ரளி) அவர்கள் கூட்டினார்கள். அதில் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நான்கும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவை:

1) பெருமானாரின் பிறப்பு

2) பெருமானாரின் இறப்பு

3) பெருமானார் நபியாக தேர்வு செய்யப்பட்டது

4) பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) புலம் பெயர்ந்தது.

இவைகளில் ஏதாவது ஒன்றை இஸ்லாமிய நாட்காட்டியின் துவக்கமாக எடுத்துக்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது. உமர்(ரளி) அவர்கள் ‘ஹிஜ்ரத்’தை இஸ்லாமிய ஆண்டு துவக்கமாக தேர்வு செய்தார்கள். மற்ற மூன்று நிகழ்வுகளும் இஸ்லாமிய வரலாற்றிலும், அண்ணலாரின் வாழ்விலும் முக்கியமானவை தான் என்றபோதிலும் அவை அனைத்தையும் விட ஹிஜ்ரத் மிக முக்கியமானது என்பதே உமர் (ரளி) அவர்களின் முடிவுக்கு காரணமாகும். ஆண்டுக்கு அடையாளமாய் சூட்டப்படுவதற்கு மிகவும் பொருத்தமான, அதே நேரத்தில் அழுத்தமான பொருளை தரக்கூடிய பெயரையே உமர் (ரளி) அவர்கள் தேர்வு செய்தார்கள். அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரி முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப்படுகிறது.

ஹிஜ்ரத் – விளக்கம்:

ஹிஜ்ரத் என்ற அரபி சொல்லுக்கு ‘குடிபெயர்தல்’ என்று பொருள். எல்லா குடிபெயர்தலும் ஹிஜ்ரத் தான் என்றாலும் ‘மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக’ ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு குடிபெயர்வதற்கே இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்று சொல்லப்படும்.

வல்லான் அல்லாஹ் மனிதகுலத்தை வழிநடத்திச் செல்ல மனிதர்களிலே சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களை இறைத்தூதராக அனுப்பிய போது அவரை அவரது சமதாயத்தவர் அனைவரும் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை. தூதரின் மீது நம்பிக்கை கொள்ளாத இறை மறுப்பாளர்கள் அவரது பிரச்சாரத்திற்கு எதிர்ப்பாகவும் மேலும் அவரின் உயிருக்கும் அச்சுறுத்தலாகவும் இருப்பார்கள். எதிரிகளின் அக்கிரம அராஜகங்கள் எல்லை மீறிப் போக ஆரம்பிக்கிற போது அல்லாஹ் இரண்டு விதமான தீர்வுகளை வகுத்து வைத்திருந்தான். ஒன்று, எதிரிகளை அழித்து விடுவது, மற்றொன்று, இறைத்தூதரை அவருடைய சொந்த நாட்டை விட்டு ஹிஜ்ரத் செய்யவைப்பது.

உதாரணமாக, ஹுது (அலை), ஸாலிஹ் (அலை), லூத் (அலை) ஆகிய நபிமார்கள் காலத்தில் எதிர்ப்பு வலுத்த போது எதிரிகளை அல்லாஹ் புயல்காற்று, கல்மழை என பல வழிகளில் அழித்தொழித்தான். இப்ராஹீம் (அலை), மூஸா (அலை) ஆகியோரது உயிருக்கு அச்சுறுத்தல் வலுத்த போது அவர்களை அல்லாஹ் அவர்களது சொந்த ஊரிலிருந்து ஹிஜ்ரத் செய்யவைத்தான்.

உலகில் முதன் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் என்கிற பெருமை ஸையிதுனா இப்ராஹீம் (அலை) அவர்களையே சாரும். நான் என் இறைவனளவில் ஹிஜ்ரத் செய்யப் போகிறேன் என்று பிரகடனப்படுத்தி விட்டு அவர் தனது சொந்த நாடான இராக்கிலிருந்து சிரியாவிற்கு குடிபெயர்ந்தார்கள். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு அருமறையில் குறிப்பிடுகிறான்.

‘நான் என் இறைவனின் பக்கம் ஹிஜ்ரத் செய்பவனாக இருக்கிறேன் என்று அவர் (இப்ராஹிம் (அலை) சொன்;னார்’. (அல் குர்ஆன் 29:26).

நபி மூஸா (அலை) அவர்கள் எகிப்திலிருந்து ஒரு முறை சிரியாவிற்கும், மற்றொரு முறை அகபா வளைகுடாப் பகுதிக்கும் குடிபெயர்நதார்கள். அந்த வரிசையில் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலை உருவான போது அவரை அல்லாஹ் மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு குடிபெயரச் செய்தான்.

ஹிஜ்ரத் – பின்னணியும், நிகழ்வும்:

நாளுக்கு நாள் குறைஷிகளின் அடக்குமுறையும், அட்டுழியமும் அதிகமானதின் காரணமாக முஸ்லிம்கள் கடும் நெருக்கடிக்குள்ளாயினர். அவர்களுக்கு நிம்மதியளிக்கின்ற வகையில் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்ய அல்லாஹ் ஆணையிட்டான். அதில் முதலாவதாக அபூஸலமா (ரளி) அவர்களும், அவரை தொடர்ந்து உமர் (ரளி) உள்ளிட்ட பிற ஸஹாபாக்களும் ஒவ்வொருவராக ஹிஜ்ரத் செய்ய ஆரம்பித்தனர். மதீனாவில் வசித்து வந்த மக்களும் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நுழையலாயினர்.

கொஞ்சம் கொஞ்சமாக மக்காவை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் மதீனாவில் ஒன்று கூடி ஒரு சமுதாய அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்டிருப்பது மக்கத்து குறைஷிகளுக்கு மிகப் பெரிய கலக்கத்தை மட்டுமன்றி ஆத்திரத்தையும், கோபத்தையும் அதிகப்படுத்தியது. இஸ்லாமிய வளர்ச்சியை எந்த வகையில் தடுத்து அழிப்பது என்பது குறித்து சதியாலோசனைக் கூட்டம் ஒன்றை ‘தாருன் நத்வா’ என்ற இடத்தில் கூட்டினர். ஆலோசனையின் முடிவில் அதன் மூல வேர் (பெருமானார்) நம்முடன் தான் இருக்கின்றது, இந்த மூல வேரை அழித்து விட்டால், முழு மரமும் சாய்ந்து விடும். நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளில் இருந்து முற்றிலும் நாம் நீங்க வேண்டுமென்றால், முஹம்மதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கொலையின் மூலம் வரும் எதிர்ப்புகள் மற்றும் இரத்த இழப்பீட்டுக்கு, பழிக்குப் பழி ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, ஒவ்வொரு கோத்திரத்தாரிடமிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகளை நியமித்து, அவர்களைக் கொண்டதொரு கொலைப் படை ஒன்றை உருவாக்குவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இறைவன் நபிகளாருக்கு இத்திட்டத்தைப் பற்றி அறிவித்து கொடுத்து விட்டான். பெருமானார் (ஸல்) அவர்கள், மக்கள் தம்மிடம் அமானிதமாகத் தந்து வைத்திருந்த பொருட்களையெல்லாம், உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அலீ (ரளி) அவர்களிடம் கையளித்தார்கள். மக்காவை விட்டுப் புறப்படும் நிலையில், நபியவர்கள் வீட்டிலில்லை என்பதை உணர்ந்து எதிரிகள் விழித்துக் கொள்ள கூடாது என்பதற்காக, தமது படுக்கையில் தூங்குமாறு அலி (ரளி) அவர்களை பணித்தார்கள். அலி (ரளி) அவர்களும் கண்மணி நாயகத்தின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, அந்த ஆபத்தான காரியத்தைப் பொறுப்பேற்று பெருமானாருக்குப் பதிலாக அவர்களது படுக்கையில் படுத்துக் கொண்டார்கள்.

ஹழ்ரத் அலி (ரளி) உடைய இந்த தியாகம் பற்றி அல்லாஹ் புனித அல்குர்ஆனில் பின்வருமாறு புகழ்ந்துரைக்கிறான்.

وَمِنَ النَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللَّه -البقرة207

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவரும் மனிதர்களில் இருக்கின்றார், மேலும் அல்;லாஹ்; (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையோனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:207).

மாலையில் இருள் சூழத்தொடங்கியதும், பெருமானார் (ஸல்) அவர்களின் வீடு முற்றுகையிடப்பட்டது. வீட்டினுள்ளே அலீ (ரளி) அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும், பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரளி) அவர்களுடன் மக்காவை துறந்து மதீனாவை நோக்கி கிளம்பினார்கள். குறைஷிகள் காவல் காத்து கொண்டிருக்கும் நிலையிலேயே வீட்டின் தலை வாயிலின் வழியாகவே அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் பார்க்கா வண்ணம் அவர்கள் முன்னாலேயே வெளியேறிச் சென்றார்கள்.

விடிந்ததும், வீட்டைச் சூழ்ந்து நின்றிருந்த அந்தக் கொடியவர்கள், தமது வாட்களை உருவிக் கொண்டு, நபிகளாரின் வீட்டினுள் நுழைந்து அவர்களது படுக்கையை தாக்கினர். அப்போது, நபிகளாரின் படுக்கையில் ஹழரத் அலி (ரளி) யைக் கண்டதும் ஏமாற்றமடைந்தனர். தங்களுடைய திட்டம் தவிடுபொடியானதை எண்ணி நொந்து போயினர்.

பெருமானார் (ஸல்) அவர்கள், தௌர் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். பின்பு மதீனாவை நோக்கிப் புறப்பட்டார்கள். மக்காவைச் சேர்ந்த சுராகத் இப்னு மாலிக் என்பவர் குறைஷிகளின் கட்டளைப்படி, பெருமானார் (ஸல்) அவர்களின் காலடித்தளங்களை அடையாளங்கண்டு அவர்களைப் பிடிக்க வந்தார். எனினும் பூமி அவரது குதிரையின் கால்களைப் பிடிக்துக் கொள்ள அவர் கீழே விழுந்தார். மூன்று முறை இவ்வாறு நடந்தது. பின்னர் நபிகளாரிடம் பாவமன்னிப்புக் கோரி திரும்பிச் சென்றார்.

மதீனா நகரில் மக்களெல்லாம் தங்கள் தலைவரை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். அந்த நாள் ஒரு பெருநாளுடைய கோலம் பூண்டிருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை நாளில், பெருமானார் (ஸல்) அவர்கள் மதீன மாநகரை வந்தடைந்தார்கள். அவர்களை அந்நகர மக்கள், அளப்பற்ற மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். பின்பு அங்கு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியானார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி.

இதுவே ஹிஜ்ரத்தின் சுருக்கமான வரலாறு. இஸ்லாத்தை வாழ்விப்பதற்கு ஒரு நிலம் தேவை. இஸ்லாமிய மார்க்க நெறியைப் பரிபூரணமாகப் பின்பற்றுகின்ற மனிதர்கள் தேவை என்ற அடிப்படையில் தான் மக்காவை விட்டு மதீனாவுக்கு கண்;மணி நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். எந்த உயர்ந்த நோக்கத்திற்காக அவர்கள் பயணப்பட்டார்களோ, அந்த நோக்கத்தை அவர்கள் அடைந்து சாதனைகளைச் சாதித்தும் காட்டினார்கள். அந்த சாதனைகளைத்தான் இன்றளவும் சரித்திரத்தின் பக்கங்கள் நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

எந்த சூழ்நிலை வந்தபோதிலும், இறைவனின் மீது இருந்த நம்பிக்கை பெருமானாருக்கு இம்மியளவும் குறையவில்லை. எதிரிகள் மிக அருகில் இருந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத்தான் எதிரிகளின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டார்கள். தௌர் குகையில் அவர்கள் அபுபக்கர் (ரளி) அவர்களுடன் இருந்தபோது, எதிரிகள் நெருங்கியபோது,

”யாரசூலல்லாஹ். அவர்கள் சற்று கீழே குனிந்துபார்த்தாலும் நம்மை கண்டுகொள்வார்கள்’ என்று அபுபக்கர் (ரளி) அவர்கள் கூறிய நேரத்தில்,

‘அபூபக்கரே நாம் இருவரில்லை! மூவர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்’ என உரைத்தார்கள் கண்மணி நாயகம் (ஸல்). இந்த நம்பிக்கையால் இறைவன் அவர்களை எதிரிகளின் கண்களை விட்டும் பாதுகாத்தான்.

இறைவனின் மீது முழுமையான நம்பிக்கை மட்டுமன்றி, இந்த ஹிஜ்ரத் மூலம் நமக்கு பல அரிய படிப்பினைகளும் உள்ளன. அவற்றுள் சில:

திட்டமிடல்:

ஹிஜ்ரத் எதேச்சையாக நடந்த ஒன்றல்ல, மாறாக அது முழுக்க முழுக்க சரியான திட்டமிடலுடன் நடந்தது என்பதை நபியவர்கள் தாம் புலம் பெயரவிருப்பதை அபூபக்கர் (ரளி) தவிர வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வைத்திருந்தது, பயணத்தின் போது எதிரிகளை ஏமாற்ற மக்காவிலிருந்து மதீனாவுக்கு வழமையாய் செல்லும் பாதையில் அல்லாமல் வேறு பாதையில் சென்றது, உணவு கொண்டு வரும் பொறுப்பை அஸ்மா பின்த் அபூபக்கர் (ரளி) அவர்களிடம் ஒப்படைத்தது என பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிடலாம். இலக்கில்லாமல் செல்லும் இன்றைய இஸ்லாமிய சமூகம், திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன் பாதையை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

அல்லாஹ்வின் உதவி:

திட்டமிடலில் கவனம் செலுத்திய போதும், அல்லாஹ்வின் உதவியை அதிகம் எதிர்பார்த்த நபிகளாரின் ஹிஜ்ரத்தின் போது அல்லாஹ் பல உதவிகளை செய்தான். உதாரணத்திற்கு தன்னை சுராகா என்பவர் துரத்தி வந்த போதும், எதிரிகளின் கண் முன்னே வந்த போதும், குகையில் நாம் இருவர் மாத்திரம் இருக்கிறோம் என்று அபுபக்கர் (ரளி) கூறிய போது நம்மோடு அல்லாஹ் இருக்கிறான் என்று உறுதியாக கூறியது போன்ற சம்பவங்களின் மூலம் நம்மால் முடிந்த அனைத்து காரியங்களையும் செய்து, அல்லாஹ்வின் பால் பொறுப்பு சாட்டும் போது அவன் உதவ கூடியவனாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.

சகோதரத்துவ கட்டுமானம்:

ஹிஜ்ரத்தின் பின் நடைபெற்ற நிகழ்வுகளை உற்று நோக்கும் போது நபிகளார் தான் கட்டி எழுப்பிய சமூகத்திற்கு முக்கியமான அடிப்படையாக கருதியது சகோதரத்துவமாகும். ஒரு முஃமின் கட்டடத்தை போன்றவன். அதன் ஒரு பகுதி அடுத்த பகுதிக்கு பலமூட்டும் எனும் ஹதீஸுக்கு ஏற்ப பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கிய ஈமானிய சமூகத்தில் குறுகிய இன, வர்க்க, நிற வேறுபாடுகளோ அல்லது தேசிய, பிரதேச வாதங்களோ காணப்படவில்லை.

நபிகளார் உருவாக்கிய சமூகம் தான் இன்று இஸ்லாத்தின் எதிரிகளால் முஸ்லீம்கள் மத்தியில் புகுத்தப்பட்ட இன, நிற, பிரதேச, தேசிய உணர்வுகளால் ஆட்சியையும், அதிகாரத்தையும் இழந்து, பண்பாடும் நாகரீகமும் சீர்குலைந்து நிற்கும் சமூகமாக மாறியுள்ளது. முஸ்லீம்கள் தாங்கள் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முதலாவதாக தங்களுக்கிடையான வேறுபாடுகளை மறந்து இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடல் வேண்டும்.

எனவே வருங்காலத்தில் நம்மனைவரையும் எதையும் திட்டமிட்டு செயல்படுபவர்களாகவும், அல்லாஹ்வின் உதவியை நாடி தம் வாழ்வை அமைத்து கொள்பவர்களாகவும், ஒரே இறைவன், ஒரே தலைவர், ஓரே மறை, ஓரே கிப்லாவை பின்பற்றும் நாமனைவரும் நமக்குள் உள்ள சிறிய கருத்து வேறுபாடுகளுக்காக மோதிக் கொள்ளாமல், இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல், ஒற்றுமையாய் மீண்டும் ஒரு மதீனத்து சமூகம் இம்மண்ணில் அமைய பாடுபடுபவர்களாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாப் பெருமக்களின் மாபெரும் தியாகத்தை இந்தப் புத்தாண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நினைவு கூறக்கூடிய நன்மக்களாக நம் அனைவரையும் வல்லான் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்!