அரபி மொழி இலக்கியம் அன்றும் இன்றும் – ஓர் ஆய்வு

 

மௌலவி அல் ஹாஃபிழ் A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil

(உதவிப் பேராசிரியர், அரபி மற்றும் இஸ்லாமிய இயல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரஸன்ட் பல்கலைக்கழகம்> சென்னை)

 

ரபி மொழி இலக்கியம் எனப்படுவது அரபி மொழியில் எழுதப்பட்ட உரைநடை மற்றும் கவிதைத் தொகுப்புகளைக் குறிப்பதாகும். அது சர்வதேச இலக்கியங்களில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். பண்டையக் காலங்களில் இருந்தே பல வாய்வழி இலக்கியங்கள் வழக்கில் இருந்து வந்த போதும் ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே அரபி மொழி இலக்கியம் வளரத் தொடங்கியது. குறிப்பாக இஸ்லாமின் வருகைக்குப் பிறகு அதிலும் குறிப்பாக அப்பாஸிய கலீஃபாக்கள் காலத்தில் அரபி இலக்கியம் உச்சத்தைத் தொட்டது. இந்த காலக் கட்டத்தில்தான் உலகின் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த நூல்களும் தொன்மங்களும் வரலாறுகளும் புராணங்களும் அரபி மொழிக்கு மொழிபெயர்க்;கப்பட்டன.

இஸ்லாமிய மார்க்கத்தின் சமய மொழியாக விளங்குவதின் காரணமாக இஸ்லாம் எங்கெங்கெல்லாம் சென்றதோ அதனோடு அரபி மொழியும் சென்றது. அருள்மறை குர்ஆனை ஓதத்தெரிவது ஒரு இஸ்லாமியனுக்கு அடிப்படைத் தேவை என்பதின் காரணமாக அரபி மொழியை குறைந்த பட்சம் வாசிக்கத் தெரியாக இஸ்லாமியன் இருப்பது அரிது. இவ்வாறு சமய ரீதியாகவும் வளர்ந்த அரபி மொழி இன்று ஐ.நா. சபையின் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் அரபி மொழி இலக்கியத்திற்கு என்று ஒரு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதிலிலிருந்து அதன் மகத்துவத்தை நாம் விளங்க முடியும். அப்படிப்பட்ட அரபி மொழி இலக்கியத்தின் பூர்வீகத்தையும் வளர்ச்சியையும் இன்றைய நிலையையும் சுருக்கமாக ஆய்வதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

அரபி மொழி இலக்கியத்தின் ஆரம்பம்:

அரபி இலக்கியம் அல்லது இஸ்லாமிய இலக்கியம் ஜாஹிலியா காலத்திலிருந்து ஆரம்பமாகிறது. கி.பி.ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் அரபிலக்கிய மரபு எழுத்து வடிவம் பெற்றது என்று மொழியியலாளர்கள் கூறுகின்றனர். அன்றைய இலக்கியம் அக்கால அரபிகளின் வாழ்வை அப்படியே பிரதிபலித்தது. அரபி இலக்கியத்தின் வேர் என்பது இனக்குழு சமூகத்தின் வாழ்நிலையோடு இணைந்தது. அவர்களின் தினசரி செயல் நிகழ்வுகள் பழக்கவழக்கங்கள் மற்ற இனத்தாருடன் நடத்திய போர்கள் மற்றும் உணவு தேடல் ஆகியவற்றோடு தொடர்புடையது.

அரபி இலக்கியம் ஆரம்பக்காலக்கட்டத்தில் கஸீதா எனும் செய்யுள் முறையாக அறியப்படுகிறது. இக்கஸீதாக்கள் அழகிய மொழிநடை, பொருளடக்கம், இலக்கிய மரபு சொல்வளம்; முதலானவற்றைக் கொண்டிருந்தன. அத்தோடு கோத்திர அமைப்பாக வாழ்ந்த அரபியரின் புகழைப்பரப்பும் ஊடகமாக கவிதையும் கவிஞர்களும் காணப்பட்டனர். குறிப்பிட்ட குலத்தில் கவிநயத்துடன் கூடிய புலவர் தோன்றிவிட்டால் அங்கு விழாக்கோலம் பூண்டு கலை கட்ட ஆரம்பிக்கும். கவிஞர்கள் கௌரவமாக மதிக்கப்பட்டனர். பாராட்டப்பட்டு புகழ் மாலை சூட்டப்பட்டனர். ஸப்வுல் முஅல்லகாத் எனும் ஏழு கவிஞர்கள் இயற்றிய செய்யுட்பாக்கள் கஃபாவில் தொங்கவிடப்பட்டிருந்தது என்பது அன்றைய அரபிகள் எந்தளவிற்கு மொழிக்கும்> கவிதைக்கும் அதன் வளத்திற்கும் முக்கியத்துவம் தந்தார்கள் என்பதற்கான சிறந்த சான்றாகும்.

இம்ரவுல் கைஸ், அன்தரா, லபீத் இப்னு ரபீஆ மற்றும் ஸுஹைர் இப்னு அபீ ஸலமா முதலானோர் இந்த கஸீதா இயற்றுவதில் புகழ்பெற்றவர்களாக திகழ்ந்தனர். இவர்களின் படைப்புகள் அக்காலக்கட்டத்து பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையிலோடு இயைந்திருந்தது. ஒரு சூழலில் இவர்கள் அக்காலத்து வரலாற்றாசிரியர்களாக, தொன்மங்களின் சார்பியலாளர்களாக, மொழியில் புதிய சொற்களை உருவாக்கும் வல்லுநர்களாக இருந்தனர். இருந்தபோதிலும், சில கவிஞர்களின் கருப்பொருளாக காமமும் களியாட்டமும் கல்நெஞ்சம் கொண்டோரின் சாகசங்களும் கன்னிப்பெண்களின்; அழகியல் கலையம்சங்களும் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன. எனவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் புகழ்பெற்ற கவிஞனான இம்ரவுல் கைஸ் பற்றி சொல்லும்போது, “அவன் கவிஞர்களின் தலைவன். என்றாலும் கூட நரகிற்கு அழைத்துச்செல்லும் முன்னோடித்தளபதி” என்றார்கள்.

உண்மையில் இலக்கியம் என்பது சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். சமூகக்களத்தை விட்டும் ஒதுங்கி நின்று இலக்கியம் படைப்பது சாத்தியமானதல்ல. இதனடிப்படையில், ஜாஹிலியா கால அரபிலக்கியத்தோடு தொடர்பான கவிஞர்கள் உள்ளதை உள்ளவாறும் உணர்ந்தவாறும் கவிதைகள் படைத்ததால் அதன் செல்வாக்கு அரபு மண்ணையும் தாண்டிச்சென்றது. The Legacy of Islam எனும் நூலில் பேராசிரியர் A.R. Gibb எனும் வரலாற்று ஆசிரியர் ‘ஐரோப்பிய இலக்கியத்தில் அரபியரின் ஆதிக்கம்’ எனும் அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “புதுமைக்கற்பனை இலக்கியத்திற்காகவும் உயர்ந்தக் கருத்துக்களுக்காகவும் ஐரோப்பா அரேபியாவிற்கு கடமைப்பட்டுள்ளது”. இதனை வேறொரு வார்த்தையில் சொல்வதானால் நவீன ஐரோப்பாவில் அறிவெழுச்சி உதயமாக அரபியக்கவிதைகள் பெரிதும் பங்காற்றியுள்ளன. ஜாஹிலியா கவிதைகள் மட்டுமல்லாது பிற்பட்ட கால இலக்கியங்களும் ஐரோப்பாவின் கண்களை திறந்து விட்டதை பேராசிரியர் Gibb ஒப்புக்கொள்கிறார். “ரோமானியர் ஆட்சி செய்த மத்திய காலப்பகுதியை உணர்வினாலும் உயிரோட்டத்தினாலும் புதியதோர் உலகத்தை நோக்கி திருப்பி விட்ட அரபியாவிலும் சிரியாவிலுமுள்ள அரபியருக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்” என்கிறார்.

அரபு இலக்கிய வளர்ச்சியில் அல்குர்ஆனின் பங்கு:

ஜாஹிலியா காலத்தைத்தொடர்ந்து பெருமானார் (ஸல்) அவர்களின் பிறப்போடு ஏழாம் நூற்றாண்டில் உதித்த இஸ்லாம் அரபு மக்களுக்கு இடையே காணப்பட்ட கோத்திர, குழு ரீதியான வெறியுணர்வை ஒழித்து ஓர் உயரிய சமூகத்தைக் கட்டியெழுப்பியது. அச்சமூகத்தில் மலிந்து காணப்பட்டக் குழப்பங்கள், காட்டு மிராண்டித்தனம்> சிலை வணக்கம் போன்றவற்றிலிருந்து அவர்களை மீட்டெடுத்து உன்னதமானவர்களாக அவர்களை மாற்றியது. அவர்களிடையே சாந்தி, சமாதானம், அமைதி, சுபிட்சம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் போன்றவற்றை ஏற்படுத்தியது.

 இத்தகைய சமூக மாற்றம் இலக்கியத்திலும் மிகப்பெரிய மாற்றங்களைத் தோற்றுவித்தது. எனவே, இஸ்லாமின் வருகைக்குப்; பின்னர் இலக்கிய கருப் பொருட்களாக இழிவான விடயங்கள் நீங்கி உன்னதமான விடயங்கள் இடம் பிடித்துக் கொண்டன. அரபி மொழி இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் தன்னுடைய மகத்தான பங்களிப்பை இஸ்லாம் வழங்கியது. அது அல்குர்ஆன் மூலமாக ஒரு புதிய மொழி வடிவத்திற்கு வழி திறந்தது. குர்ஆனின் வருகையானது அரபி செய்யுள் வடிவத்திற்கு புதிய வடிவத்தை கொடுத்தது. அதன் நீண்ட வசனங்கள் அரபிக் கவிதை உருவாக்கத்திற்கான வாசலைத் தள்ளி விட்டன. அரபி சமூகத்தில் காணப்பட்ட கவிதைகளின் போக்கும் மாற்றமடைந்தது.

இதன் காரணமாகவே அருள்மறை அல்குர்ஆன் அரபி இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பாக கருதப்படுகின்றது. அல்குர்ஆனின் இலக்கிய நடை ‘நஸ்ர்’ எனப்படும் உரை நடை மட்டுமோ அல்லது ‘நழ்ம்’ எனப்படும் செய்யுள் நடை மட்டுமே சேர்ந்தது அல்ல. மாறாக, இரண்டும் இணைந்ததாகும். அல்குர்ஆனின் பலாகா (அணியிலக்கணம் மற்றும் இலக்கிய நயம்) மற்றும் பயான் (மொழி வளம்) ஆகியவற்றுக்கு நிகராக அந்த மொழியில் மட்டுமல்ல> உலகில் உள்ள வேறு எந்த மொழியிலும் கிடையாது என்பதை உறுதியாகக் கூறலாம்.

எனவேதான், அல்குர்ஆனை ஓதுவதனை செவிமடுத்த குறைஷிக் கூட்டத்தின் தலைவர்களில் ஒருவரான வலீத் பின் முகீரா தனது குழுவினரிடம் பின்வருமாறு கூறினார்:

لقد سمعت من محمد كلاما ماهو من كلام الإنس والجن وإن له لحلاوة وان وإن عليه لتلاوة وإن أعلاه لمثمر وإن أسفله لمغدق وانه ليعلو ولا يعلي عليه

‘நான் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து சில வாக்கியங்களைக் கேட்டேன். அது மனிதனின் பேச்சல்ல. ஜின்களின் பேச்சுமல்ல. அது இனிமையானது. சுவையான தேனைப் போன்றது. உன்னதமான உரைநடை கொண்டது. அதன் மேற்பரப்பு மலையை விட உயரமானது. அதன் அடிப்பரப்பு கடலை விட ஆழமானது. ஆதலால் அது வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும். அதனை வெல்ல யாராலும் முடியாது.’                      நூல்: நூருல் யகீன்,  ஹாகிம், பைஹகீ

இதனால் தான் அல்குர்ஆன் பின்வருமாறு சவால் விடுகிறது :

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டுவர அவர்களால் (முடியவே) முடியாது.           அல்குர்ஆன்: 17-88.

‘நாம் (நமது தூதர் முஹம்மது என்னும்) நமது அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும்> உதவியாளர்களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்’.      அல்குர்ஆன்: 2-23.

அரபிகள் மத்தியில் மொழியில் பாண்டித்தியம் பெற்ற வல்லுனர்கள்> கவிஞர்கள், பேச்சாளர்கள் என பலர் நிறைந்திருந்தனர். ஆனால் அவர்களால் ஒரு அத்தியாயத்தை மட்டுமல்ல ஒரு வசனத்தையேனும்; கொண்டு வர முடியவில்லை. பல அறிஞர்கள் முயன்றும் குர்ஆனைப் போன்று என்று சொல்லி சில உளறல்களை மட்டுமே கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் அரபி இலக்கியத்தில் பின்வரும் மாற்றங்களைச் செய்தது எனலாம். அல்குர்ஆனின் மொழி குறைஷிகளின் மொழியாக இருந்தமையால் அம்மொழி இலக்கிய மொழியாக மாறியது. ஒருமித்த அரபி மொழியை அனைவரும் பயன்படுத்த வழிவகுத்தது. மனிதன் எங்கு வாழ்ந்தாலும் அல்குர்ஆனை அரபி மொழியிலேயே ஓத வேண்டும் எனப் பணித்தது. அதுமட்டுமல்லாது, இலக்கிய கருப் பொருட்கள் புதியதாயின. புதிய சொற்கள் அறிமுகமாயின. அல்குர்ஆனின் அணி இலக்கணம், உயர் இலக்கிய நடை, வார்த்தை வளம், மொழி நயம் போன்றவற்றால் மக்கள் கவரப்பட்டனர். அதனால் அல்குர்ஆனின் கருத்துகள் சொற்கள் கவிதைகளில் கையாளப்பட்டன.

இவ்வாறு, அரபி மொழியை சாகாவரம் பெற்ற மொழியாக அல்குர்ஆன் மாற்றியது. அரபி மொழியின் போக்கை மிகத் தெளிவாக வரையறுத்தது. பழைய இலக்கிய நடைகளில் இருந்து அதன் நடையை ஒழுங்குபடுத்தியது. கருத்து ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆழம், நுட்பம், ஒழுங்கு போன்றவை பேணப்பட்டன. நாகரிகமற்ற ஜாஹிலியா காலக்கருத்துகள் புறந்தள்ளப்பட்டன. கோத்திர வெறி, அளவுக்கு மீறிய புகழ் மற்றும் இகழ் கைவிடப்பட்டு தூய்மை, நன்மை போன்பவற்றுக்கு முதலிடம் வழங்கப்பட்டது.

அரபி மொழி இலக்கணத்தின் தோற்றம்:

அரபி இலக்கியத்தில் அகராதிகளின் தோற்றத்திற்கு அல்குர்ஆன் அடிப்படையாக அமைந்தது. போலவே, அரபியல்லாத வேற்று மொழி பேசுவோர் இஸ்லாத்தைத் தழுவிய போது அரபி மொழியுடன் அவர்களது மொழியும் கலந்து அரபி மொழியின் தூய்மை மாசுபட ஆரம்பித்தது. எனவே, மொழியின் தூய்மையைப் பாதுகாக்கவென அரபி மொழி இலக்கணம் குறித்த நூல்கள் இயற்றப்பட்டன. அபுல் அஸ்வதுத் துவலி என்பவர் ‘உஸுலுன் நஹ்வில் அரபி’ எனும் நூலை இயற்றினார். அவர் அந்த நூலை எழுதுவதற்கு முக்கிய காரணம் ஒருவர் அல்குர்ஆனை தவறாக ஓதியதேயாகும். இவரைத் தொடர்ந்து கலீல் இப்னு அஹ்மது என்பவர் “கிதாபுல் ஐன்” எனும் அகராதியைத் தொகுத்தார். இவரைத் தொடர்ந்து ஸீபவை, கஸாயி போன்றோர் அல்குர்ஆனின் அடிப்படையில் இலக்கண நூல்களை எழுதினார்கள்.

இவ்வாறு, அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு அரபி இலக்கண நூல்கள், அகராதிகள் ஆகியன தொகுக்கப்பட்டன. அல்குர்ஆனின் உயர்ந்த மொழி நடைக்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு உலூமுல் குர்ஆன் (அருள்மறையின் அடிப்படை அமைப்பு), தஃப்;ஸீர் (அருள்மறையின் விளக்கவுரை) என பல புதிய கலைகளும் தோன்றி வளர்ந்தன.

அரபி இலக்கியத்தின் பரிணாம மாற்றம்:

உமைய்யாக்களின்; ஆட்சியில் அரபிக் கவிதை நவீன வடிவத்திற்கு திரும்பியது. அல் அக்தல், ஜரீர், அல் ஃபரஸ்தக் ஆகியோர் அதற்கு உயிர் கொடுத்தார்கள். பின்னர் அப்பாஸியாக்களின் காலத்தில்; அபுநுவாஸ், ஹமதானி, அபூ தம்மாம், புஹ்துரி, இமாம் பூஸிரி, அபுல் அதாஹிய்யா, அல் முதனப்பி, அல் மஅர்ரி மற்றும் ஹரீரி போன்றோர் கவிதைப் பாட்டையில் பீடுநடை போட்ட முக்கிய கவிஞர்கள் ஆவர்.

அப்பாஸியக் காலத்தின் போது கிரேக்க, இந்திய, பாரசீக கலாச்சாரங்களுடன் தொடர்புற்றதால் அதி உன்னத நிலையை அடைந்தது. அன்றைய காலக்கட்டத்தில் அரபி மொழியானது விஞ்ஞானம் மற்றும் தத்துவ துறைக்கான முன்னோக்கு ஊர்தியாக இருந்தது. கிரேக்க, பஹ்லவி, லத்தீன் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் இருந்து ஏராளமான இலக்கியங்கள் அரபி மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. இதன் நீட்சியில் அரபி மொழியானது உலக கலாசாரங்களுடான பரிமாற்ற ஊடகமாக மாறியது. இஸ்லாத்தோடு மட்டுமே குறுக்கப்பட்டு வந்த அரபி மொழி எல்லா திசைகளிலும் வேர் பதிக்க தொடங்கியது. இந்த காலகட்டத்தில் இப்னுல் முகஃப்பஃ முக்கியமானவர். அவர் சமஸ்கிருதத்திலிருந்து புராணக் கதைகளை அரபி மொழிக்கு மாற்றம் செய்தார். சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளுக்கும் அரபி போன்ற செமிட்டிக் மொழிகளுக்கும் இடையே அநேக ஒத்த நிலைக் கூறுகள் உண்டு. இதுவே மொழிபெயர்ப்பிற்கான தூண்டலாக மாறியதென கருதலாம்.

உரைநடையைப் பொருத்தவரை, அரபி இலக்கியத்தின் புகழ்பெற்ற காவியம் என ஆயிரத்தோர் இரவுகள் கதையைக் கூறலாம். இது அரபி மற்றும் பாரசீகர்கள் இடையேயான வாணிப உறவுகளின் பிரதிபலிப்பாகும். இந்தப் புதினம் அநேகமாக உலக மொழிகள் அனைத்திலும்; மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அரபி இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகார வடிவமாக இது மாறியது. தபரி, இப்னு கல்தூன், இப்னு பதூதா மற்றும் இப்னு அஃதிர் முதலானோர் இக்காலகட்டத்து அரபி எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள். இவர்களில் இப்னு கல்தூன் அக்காலகட்டத்து சிறந்த வரலாற்றாசிரியராகத் திகழ்ந்தார்.

அரபிக் கவிதைகளில் ஏற்பட்ட தொய்வும், மீட்சியும்:

இவ்வளவு உச்ச நிலையை அடைந்த அரபிலக்கியம், அப்பாஸியரின் இறுதிக் காலத்தில் அதன் இயற்கைத் தன்மை இழக்கப்பட்டு செயற்கைத் தன்மைப் படைப்பாக மாறியது. அரபிக் கவிதையானது பதிமூன்றாம் நூற்றாண்டில் பாரசீக மற்றும் துருக்கி இலக்கியங்களின் எழுச்சி காரணமாக பின்னடையத் தொடங்கியது. இதன் பிறகு ஆறு நூற்றாண்டுகள் இடைவெளியில் 19 ஆம் நூற்றாண்டில் மீண்டும் எழத் தொடங்கியது. கடல் அலைகளின் நீட்சி மாதிரி நவ செவ்வியல் வடிவத்தை கொண்டதாக பரிணமிக்கத் தொடங்கியது. இதில் அக்காலகட்டத்து மேற்கத்திய இலக்கியக் கோட்பாடுகளின் தாக்கமும் உண்டு.

எகிப்தில் அஹ்மது ஷவ்கி, ஹாஃபிழ் இப்ராஹீம் மற்றும் லெபனானைச் சார்ந்த கலீல் ஜிப்ரான், அமீன் ரைஹான் முதலானோரின் கவிதைகள் அன்றைய அரசியல், காதல், சமூகம் போன்றவற்றின் பிரதிபலிப்பாக இருந்தன. மேற்கின் நவீனத்துவ படைப்பாளிகளான வில்லியம் வேர்ஸ்ட் வர்த், ஷெல்லி, மற்றும் எலியட் ஆகியோர்களை உள்வாங்கிக் கொண்ட ஒன்றாக அன்றைய அரபிப் படைப்பாளிகளின் படைப்புகள் இருந்தன. வெற்று உணர்ச்சிகளை மீறி கவிதைகளில் சுருங்கு தன்மையும், இலக்கிய நயமும் உருக்கொண்டன.

அமீன் ரைஹான் அரபிக் கவிதைகளை இக்கட்டத்தில் தாராள, வடிவ ஒழுங்கற்ற முறைக்கு உட்படுத்தினார். லெபனானில் பிறந்த அவர் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து அமெரிக்க அரபி இலக்கிய ஓருங்கிணைவை ஏற்படுத்தினார். முதன் முதலாக ஆங்கிலத்தில் எழுதிய அரபி எழுத்தாளர் இவரே. இதே காலகட்டத்தில் தான் அரபி வெளியில் சிறுகதையும், நாவலும் அறிமுகமானது. இது மேற்கத்திய கலாச்சாரத்தின் சாயலில் இருந்தது. அரபி மொழியின் முதல் நாவலாக முஹம்மது ஹுசைன் ஹைகல் எழுதிய ‘ஸைனப்’ வெளிவந்தது. குடும்பம் என்ற கட்டமைப்பின் அன்றாட நிகழ்வுகள் அதன் செயல் ஒழுங்குகள், அரசியல் மற்றும் சமூக சிக்கல்கள், சுய வாழ்வின் நெருக்கடிகள் இவற்றை கதையம்சமாக கொண்டு நாவல்கள் இயற்றப்பட்டன.

நவீன அரபி இலக்கியத்தின் எழுச்சி:

யஹ்யாஹக்கி,சோனல்லா இப்ராஹிம், அப்துர்ரஹ்மான்; முனீஃப், எலியாஸ்கௌரி, நாசர் இப்ராஹிம், காலித் உவைஸ், மஹ்மூத் சுகைர் மற்றும் நஜீப் மஹ்பூள் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டு அரபி நாவல் மற்றும் சிறுகதை மரபில் முக்கியமானவர்கள். இவர்களில் அப்துர்ரஹ்மான்; முனீஃப் மற்றும் நஜீப் மஹ்பூள் ஆகியோர் தன் நாவல்கள் மூலம் மேற்குலகின் கவனத்தை ஈர்த்தார்கள். நஜீப் மஹ்பூள் உடைய மிடாக் குறுக்கு தெரு (Midaq Alley) என்ற நாவல் நோபல் பரிசை அவருக்கு அளித்தது. அரபு இலக்கிய உலகில் முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் இவரே.

சமகால அரபி கவிஞர்களில் மஹ்மூத் தர்வேஷ், அதோனிஸ், ஜுமானா ஹத்தாத், ஹிசாம் ஹத்தாத், நசிக் அல் மலாய்க்கா, சஃதி யூசுப், ஹசன் சக்தான், அப்துல் வஹ்ஹாப் அல் பைத்தி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் மஹ்மூத் தர்வேஷ் முன் வரிசையில் வருகிறார். பாலஸ்தீனியராக இருந்து புலம் பெயர்தலுக்கு உள்ளான இவரின் வாழ்நிலை நெருக்கடிகளும், மன உணர்வுகளும் அவரது கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. இவரை தொடர்ந்து அதோனிஸ் அரங்கில் வருகிறார். சிரியாவில் பிறந்த அதோனிஸ் நெருக்கடிகள் காரணமாக லெபனானுக்கு புலம் பெயர்ந்தவர். வாழ்வின் நெருக்கடிகள், புலம் பெயர் வாழ்வால் உருவாகும் மன இடைவெளி இவற்றை தன் கவிதைகளில் வெளிப்படுத்தியவர். அடுத்த நிலையில் ஈராக்கிய கவிஞரான நாசிக் அல் மலாய்க்கா முக்கியமானவர். ஈராக்கின் இலக்கிய பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த மலாய்க்காவின் கவிதை வெளி தனித்துவமானது. சிறுகதை மற்றும் நாவல்களில் பாலஸ்தீனிய நாவலாசிரியரான எலியாஸ் கௌரி தனக்கான தனித்துவத்தை கொண்டிருக்கிறார். நடப்பு அரபி இலக்கியத்தின் தோற்ற பாவனை மற்றும் வெளிச்ச தெளிப்பாக எலியாஸ் கௌரி இருக்கிறார். அரபி இலக்கியத்தின் மற்றொரு பங்களிப்பு நாடகமாகும். தவ்ஃபீகுல் ஹகீம் அரபி நாடக இயலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

அரபி இலக்கியத்தை பொறுத்தவரை அதன் வரை கோடுகள் மிகவும் தெளிவானவை. அதிர்வுகள் நிரம்பியவை. மனித வாழ்வின் எல்லாவித சலனங்களும் அதிலுண்டு. சூபியின் ஆழ்மன தேடல் மற்றும் உள்முக போராட்டம், சக மனிதன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவனின் இடப்பெயர்வு ஆகிய எல்லா புள்ளிகளாலும் அதன் கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன. ஹமதானி தொடங்கி நஜீப் மஹ்ஃபூள் வரைக்கும் அது பரிணமித்து இருக்கிறது. இஸ்லாத்துக்கு முந்தைய அரேபிய பழங்குடி மக்களின் வாழ்க்கைச் சித்திரமாக தொடங்கிய அரபி இலக்கியவெளி நேர்க்கோட்டில் நகர்ந்து இன்னொரு உலகை நோக்கி நெறிபடுகிறது. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நாடகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பின் மூலம் ஐரோப்பாவின் மிகுந்த கவனத்துக்கும் அரபி இலக்கியம் உட்பட்டிருக்கிறது.

இஸ்லாமும்  இலக்கியமும்:

இஸ்லாம் அழகான மார்க்கம். அதன் சகல போதனைகளும் கருத்துகளும் அழகானவை, அற்புதமானவை. அலாதியான சுவையும் ரசனையும் கொண்டவை. அது அழகியலை நேசிக்கிறது, அதனைத்தூண்டுகிறது. அதன் பால் உணர்வுகளை வழிப்படுத்துகிறது. மின்காந்தம் போல் கவர்ந்திழுக்கும் மந்திர சக்தி அதற்குண்டு. இந்தப்போதனைகள் கலை வடிவம் பெறும்போது அது மேன்மேலும் மெருகூட்டப்படுகிறது. கல்வி வாசனை இல்லாதவனால் கூட இஸ்லாத்தை உணர முடியுமாக இருப்பது இதனால்தான். இஸ்லாமியப் போதனைகள் அனைத்தும் கலை உணர்வுடன் நோக்கப்பட்டால் அதன் செயற்திறன் வீரியமாயும் வேகமாய் தாக்கம் செலுத்துவதாயும் அமையும். இதனைத்தான் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்புகிறான்’ என குறிப்பிட்டார்கள்.’

இலக்கியம் எனும் பொருட்பரப்புக்கு அப்பால் சென்று அரபி இஸ்லாமிய இலக்கியம் எனும் துறையை வாசிப்பு செய்யும் போதும் அது சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடும்போதும் அது எத்தனை தூய்மையானது, ஆழமானது, நயம் வாய்ந்தது  என்பது புரியும். கலைக்காக என்ற மாயை அரபி இஸ்லாமிய இலக்கியத்துறையில் தகர்த்தெயரியப்படுகிறது. அங்கு மனித உணர்வுகளும் தேவைகளும் விருப்பு வெறுப்புகளும் கௌரவமாக நோக்கப்பட்டு அலசப்படுகின்றன, ஆய்வுசெய்யப்படுகின்றன. மனிதனது கட்டுக்கடங்காத ஆசைகள் கீழ்த்தரமான உணர்வுகள் சித்தரிக்கப்படுவது தவிர்க்கப்படுகின்றன. இயல்பான நிலையில் இருந்தவாறு குறிப்பிட்ட கருப்பொருளை மையப்படுத்தி கலை ரசனையோடு எழுதப்படும் அரபி இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த ஆக்கங்கள்> குறிப்பாக நவீன உலகில் போதிய கவன ஈர்ப்பை பெற்றுள்ளன.

இன்றைய நவீன இஸ்லாமிய உலகு பல முனைகளில் இருந்தும் தாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கலாச்சார வறுமைக்கோட்டின் கீழால் அவதிப்படுகிறது. இந்நிலையிலிருந்து விடுபட இஸ்லாமிய இலக்கியங்கள் பயன்படலாம். அவற்றை மாற்றீடாகவும் முன்வைக்கலாம். அந்தவகையில்தான் இஸ்லாமிய உலகின் தலை சிறந்த எழுத்தாளரும் பேச்சாளரும் இலக்கியவாதியுமான ஷஹீத்  செய்யித் குதுப் இஸ்லாமிய இலக்கியம் பற்றியும் அது சார் படைப்புகள் வெளிவர வேண்டும் என்பது பற்றியும் ‘அல் இக்வானுல் முஸ்லிமீன்’ பத்திரிகையின் முதலாம் இதழிலேயே ‘இலக்கிய கோட்பாடு’ எனும் தலைப்பில் எழுதினார். அதிலே இஸ்லாமிய இலக்கியத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறார்: ‘இலக்கியம் என்பது ஏனைய கலைகளைப்போன்று கலைஞனின் உள்ளம் உய்த்துணரும் உயிரோட்டம் நிறைந்த பெறுமானங்களின் வெளிப்பாடாகும். இப்பெருமானங்கள் ஆளக்கு ஆள், இடத்துக்கிடம், காலத்துக்குக் காலம் வேறுபடலாம். ஆனால் எல்லா நிலையிலும் வாழ்க்கை பற்றிய குறிப்பிட்ட கோட்பாட்டிலிருந்தும் மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்குமிடையிலான மனிதனுக்கும் மனிதனுக்குமிடையிலான அன்னியோன்ய உறவுகளிலிருந்து அப்பெருமானங்கள் ஊற்றெடுக்கின்றன’.

இலக்கிய படைப்பாக்கங்கள் மனித, சமூக வாழ்வில் மிக ஆழமாக ஊடுருவக்கூடியவை. நவீன மனிதனின் இயந்திரமயப்பட்ட வாழ்விலிருந்து அவனை விடுவித்து அவனது மனதுக்கு இன்பமளிக்கும் பணியை கலை இலக்கியங்கள் ஆற்றும். குறிப்பாக இன்றைய இஸ்லாமிய வாதிகளின் கோஷமாக உள்ள ‘இஸ்லாம் ஒன்றே  தீர்வு’ என்பதற்கேட்ப கலை இலக்கியங்களையும் இஸ்லாமிய மயமாக்கி அல்லது இஸ்லாமிய புது இலக்கியம் படைத்து இஸ்லாமிய எழுச்சியின் அலை வேகத்தை அதிகரிக்கலாம். அதிவேகமாய் மாறிவரும் நவீன உலகின் சகல பிரச்சினைகளுக்கும் இஸ்லாமிய இலக்கியங்களை மாற்றீடாக முன்வைக்கலாம். இலக்கியம் வழியாகவும் இஸ்லாமியக் கருத்துகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்க முடியும். இறைவன் அதற்கு அருள் பாலிப்பானாக! ஆமீன்!